ரொம்ப கம்மியான விலையில் பெட்ரோல் டூ-வீலரை மின்சார வாகனமாக மாற்றலாம்... கோவை நிறுவனத்தின் அசத்தலான மூவ்!
கோவையைச் சேர்ந்த ஏஆர்4 டெக் (AR4 Tech) நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த சோடியன் எனெர்ஜி (Sodion Energy) நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இணைவு எதற்காக? இரு நிறுவனங்களும் இணைந்து என்ன செய்ய இருக்கின்றன என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஏஆர்4 டெக் (AR4 Tech). இந்த நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த சோடியன் எனெர்ஜி (Sodion Energy) உடன் கூட்டணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இணைவின் வாயிலாக தமிழகத்தில் வைத்து பேட்டரி பேக்குகளை உருவாக்க இருக்கின்றது ஏஆர்4 டெக் நிறுவனம்.

இதனை உள் நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. சோடியம் அயன் பேட்டரி (sodium ion battery)-களை தயாரிப்பதில் கை தேர்ந்த நிறுவனமாக மலேசியாவைச் சோடியன் எனெர்ஜி நிறுவனம் இருக்கின்றது. இதன் பேட்டரிகளையே பேட்டரி பேக்காக தயாரித்து, அதனை உள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏஆர்4 டெக் விற்பனைச் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக ஏஆர்4 டெக் நிறுவனம் கோவையில் சுமார் 15 ஆயிரம் சதுர அடியில் உற்பத்தி ஆலையை அமைத்து இருக்கின்றது. அடுத்த நான்கு மாதங்களில் இந்த ஆலையில் பேட்டரி பேக்குகள் தயாரிக்கப்படும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக சோடியன் எனெர்ஜி நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான பி. பாலா தெரிவித்து இருக்கின்றார்.

Source: Covaipost இந்த ஆலை ஓர் நடு நிலையான ஆட்டோமேட்டிக் (semi automatic plant ) ஆலை ஆகும். அதாவது பெரிய அளவில் மனித ஈடுபாடு தேவைப்படா ஓர் ஆலையாகும். வெளிநாடுகளில் இருந்து கருவிகளை இறக்குமதி செய்து இந்த ஆலையில் பேட்டரி பேக்குகள் தயாரிக்கப்பட இருக்கின்றன.
மிக முக்கியமாக இந்த ஆலையில் தயாரிக்கப்படும் பேட்டரி பேக்குகள் வழக்கமான பெட்ரோல் இருசக்கர வாகனங்களை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களாக மாற்றுவதற்காக பயன்படுத்தப்பட இருக்கின்றது. புதிய மின்சார இருசக்கர வாகனம் எண்ணும் நம்மில் பலருக்கு இருந்தாலும், அதை வாங்கும் அளவிற்கு பொருளாதாரம் ஒத்துழைப்பதில்லை.
ஒரு சில லட்சங்களை அள்ளி கொட்டினால் மட்டுமே மனதிற்கு பிடித்த மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்க முடியும் என்கிற சூழல் இருக்கின்றது. இதனால்தான் பலருக்கு இ-வாகனங்கள் என்பது எட்டாக் கனியாக இருக்கின்றது. இத்தகையோருக்கே உதவ இருக்கின்றது நம்ம கோவையைச் சேர்ந்த ஏஆர்4 டெக் நிறுவனம்.
அதாவது, குறைவான விலையில் தன்னுடையே பேட்டரி பேக்கை வழங்க இருக்கின்றது. ஆகையால், குறைவான செலவில் பெட்ரோலில் ஓடும் டூ-வீலர்களை மின்சார வாகனமாக கன்வெர்ட் செய்துக் கொள்ள முடியும். புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்க முடியாதவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனம் தயாரிக்கும் பேட்டரி பேக்குகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரையாவது இயங்கும் என கூறப்படுகின்றது. இந்த பேட்டரி பேக்குகளை மின்சார வாகனங்களுக்கு மட்டுமின்றி வீடுகளுக்கு பவர் பேக்கை வழங்கும் இன்வெர்டராகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகையால், நிறுவனத்திற்கு பல நிலைகளில் வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோவையில் அமைய உள்ள பேட்டரி பேக் தயாரிக்கும் ஆலையில் நாள் ஒன்றிற்கு 100 பேட்டரி பேக்குகள் வீதம் தயாரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், நிறுவனத்தின் இந்த பேட்டரி பேக்கிற்கு எதிர்பார்ப்பு தற்போது சந்தையில் பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








