கோவை, மதுரைக்கு மெட்ரோ வரப்போகுதுன்னு சொன்னாங்க! ஆனா ஒரு ரூபாய் கூட பட்ஜெட்ல ஒதுக்கலயே ஏன் தெரியுமா?
சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழக பட்ஜெட்டில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சென்னையில் தொடர்ந்து கோவை மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ பணிகள் விரைவாக துவங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது மெட்ரோ திட்டம் என்பது செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாநிலத்திலும் அடுத்த பெரிய நகரங்களில் மெட்ரோ திட்டங்களை கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கான அறிவிப்புகள் எல்லாம் இதற்கு முன்னர் தமிழக சட்டமன்றத்தில் வெளியானது. இதையடுத்து மெட்ரோ பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் வெளியான தமிழக பட்ஜெட்டில் மெட்ரோவிற்கான எந்த ஒரு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மெட்ரோ திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவையில் அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 39 கிலோமீட்டர் தூரத்திற்கு 32 ஸ்டேஷன்களுடன் மெட்ரோ பாதை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்காக ரூபாய் 9700 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு திட்டங்கள் போடப்பட்டிருந்தன. இந்த விபரங்களை மெட்ரோ திட்ட இயக்குனர் சித்திக் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கான நிதியுதவியை வழங்க ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கேஎஃப்டபிள்யூ என்ற பன்னாட்டு வங்கியை தமிழக அரசு அணுகி இருந்தது. அந்த வங்கியில் இருந்து நிதி பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வங்கியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தரைவழி மெட்ரோ திட்டம் குறித்த விபரங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது திட்ட வரைவில் மேம்பாலங்கள் மற்றும் பாதாள சுரங்கப்பாதைகள் வழியாக மெட்ரோக்கள் அமைக்கப்படுவதால் நிதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த வங்கியை விட்டுவிட்டு மற்ற வங்கிகளை நாட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதுவரை பன்னாட்டு வங்கிகளில் இருந்து எந்த ஒரு நிதியும் வருவதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில் குறைந்தபட்சம் தமிழக அரசும் மத்திய அரசும் தங்களது பங்குக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியாக பணி துவங்கினால் பணி துவங்கியதை வைத்து பன்னாட்டு வங்கிகளிடம் நிதி பெற முடியும் என்ற திட்டத்தில் தமிழக அரசு இருப்பதாக கோவை மற்றும் மதுரை மக்களால் நம்பப்பட்டது. ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியான தமிழக பட்ஜெட்டில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டத்திற்காக எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை.
கோவையில் ரூ10,740 கோடி மதிப்பிலும், மதுரையில் ரூ 11,368 கோடி மதிப்பிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வர திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு மத்திய அரசுக்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்ட பின்பு தான் இதற்கான நிதிகள் ஒதுக்கப்படும் என தமிழக அரசிலிருந்து தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இதனால் தற்போது கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் என்பது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மதுரை மெட்ரோ பணிகள் விரைவாக துவங்கப்பட்டு அடுத்த ஒரு சில ஆண்டுகளில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் தற்போது நிதி கூட ஒதுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் வருவதற்கான கால அவகாசம் இன்னும் அதிகமாக தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையை தொடர்ந்து கோவை,மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ பணிகள் விரைவில் துவங்கினால் தான் அந்த நகரங்களில் உள்ள மக்களுக்கு சுலபமாக போக்குவரத்து வசதி கிடைக்கும். நகரங்களின் வளர்ச்சியும் மிக வேகமாக இருக்கும். மெட்ரோ ரயில் தாமதமானால் நகரங்களின் வளர்ச்சி என்பது வேகமாக குறையும் என்பது வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. இதனால் மெட்ரோ திட்டத்தை விரைவில் கொண்டு வர அரசு முயற்சி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications









