ஆர்டிஓ வரை சென்ற கேரள கல்லூரி மாணவிகளின் ‘ஆர்ட்ஸ் டே’ கொண்டாட்டம்!! வழங்கப்பட்ட புதுமையான தண்டனை!
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் வைரலாகிய கல்லூரி மாணவிகளின் ஆக்ரோஷமான பைக் ரைடிங் வீடியோக்களை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள். இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் சேர்த்து ஓர் தண்டணையை சம்பந்தப்பட்ட வாகன பதிவுதுறை நிர்வாகம் அதிரடியாக வழங்கியுள்ளது. அது என்ன என்பதை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

இணையம், வேகமாக நமது வாழ்வின் ஓர் அங்கமாக மாறி வருகிறது. குறிப்பாக இப்போதைய இளம் தலைமுறையினர் நாள் முழுவதையும் மொபைல் போனில் கழிக்க கூட தயாராக உள்ளனர். இதனால் உலகில் எந்தவொரு மூலையில் நடக்கும் விஷயம் கூட உடனடியாக கண்டம் விட்டு கண்டம் பரவி விடுகிறது. சிசிடிவி அல்லது மொபைல்போன் வீடியோக்களை வைத்து பலருக்கு தண்டணைகளும், அபராதங்களும் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் சாலை விதிகளை மீறியோர் வீடியோக்களால் சிக்கி கொண்ட சம்பவங்கள் பலவற்றை இதற்குமுன் நமது செய்தி தளத்தில் பார்த்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக, கேரளாவில் பொது சாலையில் ஆக்ரோஷமாக வாகனங்களை ஓட்டிய ப்ரோவிடென்ஸ் மகளீகல்லூரி மாணவிகளுக்கு ஆர்டிஓ-வால் சுமார் 3 மணிநேரங்களுக்கு இடைவிடாத சாலை விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
தங்களது வீடியோக்கள் இந்த அளவிற்கு வைரலாகும் என எண்ணாத இந்த கல்லூரி மாணவிகள், ஒருவேளை சிக்கினாலும் அபராதமே கட்ட வேண்டியதாக இருக்கும் என நினைத்திருப்பார்கள். அதாவது, இத்தகைய 3 மணிநேர வகுப்பை நிச்சயம் அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆர்டிஓ பிஆர் சுமேஷ் என்பவரின் உத்தரவின் பேரில் இந்த சிறப்பு வகுப்பு கேரளாவில் உள்ள சேவயூர் சோதனை மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 30 மாணவிகள் இந்த தண்டணையில் சிக்கியுள்ளனர். வைரலாகிய வீடியோக்களில் கார் & பைக்குகளின் நம்பர் ப்ளேட்டை வைத்து, கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட மாணவிகளை ஆர்டிஓ அடையாளம் கண்டுள்ளது. அப்பறம் என்ன... அந்த மாணவிகளுக்கு நேரடியாக ஆர்டிஓ-வில் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டு, இந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த சாலை விழிப்புணர்வு வகுப்பு கடந்த மார்ச் 30ஆம் தேதி நடத்தப்பட்டது. மேலும், வீடியோவின் அடிப்படையில், பைக்கில் ஹெல்மேட் அணியாமல் இருந்த மாணவிகளுக்கு கூடுதலாக ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் மட்டும் இவ்வாறான சாலை விதி மீறல் சம்பவம் கேரளாவில் மற்றொரு கல்லூரியிலும் அரங்கேறியுள்ளது.

கோழிக்கோட்டில் உள்ள மலப்பார் க்றிஸ்டியன் கல்லூரியில் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏகப்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் பைக்குகளிலும், கார்களிலும் ஸ்டண்ட் செய்து பார்த்துள்ளனர். அப்போது ராயல் என்பீல்டு பைக் ஒன்றும், ஸ்கோடா ஆக்டேவியா கார் ஒன்றும் மோதலுக்கு உள்ளானதை பார்க்க முடிந்தது.
இத்தனைக்கும் நன்கு விசாலமான இடத்தில் ஓட்டி பார்க்கும்போதே இந்த விபத்து. இவர்கள் பொது சாலையில் ஓட்டினால் எந்த அளவிற்கு விபத்துகள் உண்டாகும் என யோசித்து பாருங்கள்... என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். நல்லவேளையாக இந்த மோதலில் யாருக்கும் எந்த காயமும் பெரியதாக ஏற்படவில்லை. இந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தை பெரிதும் கோபப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட அனைத்து மாணவ, மாணவிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மலபார் க்றிஸ்டியன் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பல மாநிலங்களில் சாலை விதிகளை எவ்வாறு பின்பற்றவது என்பது தொடர்பான வகுப்புகள் ஆர்டிஓ-க்களால் நடத்தப்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, விபத்துகளை ஏற்படுத்துவது எந்த அளவிற்கு பெரிய குற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் சாலை விதிமீறல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளுக்கு நேரடியாக அவர்களது மெயிலிற்கு அபராத இ-செல்லான் அனுப்பப்படுகிறது. ஆனால் சமீப நாட்களாக இவ்வாறான சாலை விதிமீறல்களில் ஈடுப்படுவோருக்கு சில அதிகாரிகள் சில விசித்திரமான தண்டணைகளை வழங்கி வருகின்றனர். மேற்கூறப்பட்ட கேரள மாணவிகளுக்கு சாலை விழிப்புணர்வு தொடர்பான பாடம் எடுத்ததுபோல்.

இந்த வகையில் சென்னையில் பைக் ரேஸில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், அவர் பழைய ஜெயில் சாலையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் விபத்து & அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மாத காலம் பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








