அடுத்த வாரம் முதல் டபுள் டெக்கர் பஸ் பயன்பாட்டுக்கு வருதா! இந்த ஊருக்கு போனால் கண்டிப்பா டிராவல் பண்ணிருங்க!
என்னதான் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த பேருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும், இப்போதும் இந்தியர்கள் மத்தியில் டபுள் டெக்கர் பேருந்து (Double Decker Bus) மீதான எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. ஒரு காலத்தில் நாடு முழுக்க மிக அதிகளவில் இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் பயன்பாட்டில் இருந்தன. ஏன், நமது சென்னை நகரத்திலும் மிக அதிக அளவில் இந்த வகை பேருந்து பயன்பாட்டில் இருந்தது. ஆனால், இப்போது தமிழகத்தில் இதன் ஒரு யூனிட்டுகூட பொதுப் பயன்பாட்டில் இல்லை.
இந்த மாதிரியான சூழலிலேயே அடுத்த வாரம் முதல் டபுள் டெக்கர் பேருந்து பொது பயன்பாட்டிற்கு வர இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் அல்ல. நமது அண்டை மாநிலமான கேரளாவிலேயே டபுள் டெக்கர் பேருந்து பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. கேரளாவின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான கொச்சியிலேயே டபுள் டெக்கர் பேருந்து பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இந்த தகவல்கள் கேரள வாசிகளை, முக்கியமாக கொச்சின் நகர வாசிகளை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. 2025 ஜனவரி முதல் வாரம் முதலே இங்கு டபுள் டெக்கர் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. எனவே டபுள் டெக்கர் பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்கிற ஆசையில் நீண்ட காலமாக இருப்பவர்களால் அடுத்த வாரம் முதல் அதில் பயணிக்க முடியும்.
இந்த பேருந்துகளை பிரத்யேகமாக டூரிஸ்ட்டுகளை கவரும் விதமாகவே பயன்படுத்த கேரளா அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இதன்படி கொச்சியின் முக்கிய சுற்றுலா பகுதிகளை இணைக்கும் வகையில் டபுள் டெக்கர் பேருந்து இயக்கபட இருக்கின்றது. உயர்நீதிமன்றம், மாதவா பார்மசி சந்திப்பு, ஜோஸ் சந்திப்பு, படகு கட்டுமானம் செய்யும் ஸ்டாப், தேவாரா, டோல் பிரிட்ஜ், மட்டன்சேரி மற்றும் கொச்சி கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கே இந்த பேருந்து இயக்கப்பட இருக்கின்றது.
இது ஓர் 12.5 கிமீ நீளம் கொண்ட வழித் தடம் ஆகும். முதல் கட்ட சோதனையோட்டமாகவே இந்த டபுள் டெக்கர் பேருந்து சேவை இந்த வழித் தடத்தில் தொடங்கப்பட்டு இருக்கின்றது. போக்குவரத்து நெரிசலைப் பொருத்து விரைவில் மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் இந்த பேருந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என கேஎஸ்ஆர்டிசி அறிவித்திருக்கின்றது.
இந்த பேருந்தின் உயரம் 4.5 மீட்டர் ஆகும். ஆகையால், அனைத்து விதமான சாலைக்கும் பொருத்தக் கூடிய பேருந்தாக இது இருக்குமா என்பதே பலரின் சந்தேகமாக உள்ளது. ஆனால், ஏற்கனவே கேஎஸ்ஆர்டிசி அதிகாரிகள் பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டே இந்த பேருந்தே பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றனர்.
ஆகையால், இந்த சேவையில் எந்த சுணக்கமும் ஏற்படாது என தெரிகின்றது. கேரளா அரசாங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கடல் விமான திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதற்கு முன்னதாக வாட்டர் மெட்ரோ சேவையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது.
தொடர்ச்சியாக சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் பொருட்டு மாநிலத்தின் போக்குவரத்து பிரிவை மேம்படுத்தி வருகின்றது, கேரளா அரசாங்கம். இந்த நிலையிலேயே டபுள் டெக்கர் பேருந்துகள் அடுத்த வாரம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இதற்கும் கேரளா வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடுத்த வாரம் அல்லது அதற்கு பின்னர் கொச்சினுக்கு டூர் போகும் பிளான் இருந்தால் கட்டாயம் இந்த டபுள் டெக்கர் பேருந்துல டிராவல் பண்ணாம வராதீங்க. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை இந்த பேருந்தில் அமர்ந்து பயணிக்கும்போது தனித்துவமான டிராவல் அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








