இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது! வாங்கினால் கேடிஎம் பைக் தான் என இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
கேடிஎம் (KTM), ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான பைக் நிறுவனம். இந்தியாவில் பஜாத் ஆட்டோ உடன் இணைந்து செயல்பட்டு வரும் கேடிஎம், 125சிசி பைக்குகளில் இருந்து 1390சிசி பைக்குகள் வரையில் விற்பனை செய்கிறது. இந்த நிலையில், பஜாஜ் நிறுவனம் அதன் 250சிசி பைக்கிற்கு வருட இறுதி சலுகையை அறிவித்துள்ளது. இந்தியாவில் இரு கேடிஎம் 250சிசி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றுள் ஒன்றிற்கு மட்டுமே தற்போது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அது எந்த பைக் என்பதையும், வருட இறுதி சலுகையின் மூலம் அந்த பைக்கை எவ்வளவு குறைவான விலையில் வாங்கலாம் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2024ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. இப்போதுதான் வருடம் துவங்கியது போன்று இருந்தது, ஆனால் நாம் இப்போது இருப்பது கடைசி டிசம்பர் மாதத்தில் ஆகும். 2025ஆம் ஆண்டு துவங்க இன்னும் 30 நாட்கள் கூட இல்லை. பொதுவாகவே, வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி சலுகைகளை அறிவிக்க முயற்சிப்பார்கள்.

குறிப்பாக, வருட இறுதி டிசம்பர் மாதம் தான் அவர்களது முக்கியமான டார்க்கெட்டே. ஏனெனில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை முடிந்தவரையில் அந்த ஆண்டிலேயே விற்று முடிக்க முயற்சிக்கின்றன. அதன் வெளிப்பாடே சலுகை அறிவிப்புகள் ஆகும். அந்த வகையில், கேடிஎம் இந்தியா நிறுவனமும் அதன் 250சிசி பைக் ஒன்றிற்கு வருட இறுதி சலுகையை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தில் இருந்து இரு 250சிசி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. 250 ட்யூக், 250 அட்வென்ச்சர் என்பன அவை இரண்டாகும். இதில், 250 ட்யூக் பைக்கிற்கு மட்டுமே தற்போது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் 250 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது முன்பு ரூ.2.45 லட்சம் ஆகும். ஆனால், தற்போது ரூ.2.25 லட்சம் ஆகும்.

வருட இறுதி சலுகையாக பைக்கின் விலையில் ரூ.20,000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த 2024ஆம் ஆண்டில், புத்தம் புதிய எல்இடி ஹெட்லைட் உடன் 250 ட்யூக் பைக்கின் தோற்றம் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டது. பைலட் விளக்குகளுடன் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக, மிகவும் அடர் இருளிலும் இந்த ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை ஓட்ட முடியும்.
கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் வழங்கப்படும் அதே 5-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே 250 ட்யூக் பைக்கிலும் வழங்கப்படுகிறது. ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி கொண்ட இந்த டிஸ்பிளே மூலம் பயணத்திற்கான திசையை பெறலாம். இதைவிட முக்கியமாக, இந்த கேடிஎம் பைக்கில் பை-டைரக்ஷ்னல் குயிக் ஷிஃப்டர்+ என்கிற கட்டிங்-எட்ஜ் டெக்னாலஜி வழங்கப்படுகிறது. இது, க்ளட்ச்சின் உதவியில்லாமல் கியரை மாற்ற உதவுகிறது.

ஸ்ட்ரீட் & டிராக் என 2 விதமான ரைடிங் மோட்கள் 250 ட்யூக்கில் வழங்கப்படுகின்றன. கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் 248சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 29.5 பிஎச்பி மற்றும் 25 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
விற்பனையில் இந்த கேடிஎம் பைக்கிற்கு சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஹஸ்க்வர்னா விட்பிளென் 250 பைக்குகள் போட்டியாக உள்ளன. ஹஸ்க்வர்னா மற்றும் கேடிஎம் பைக்குகள் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1290சிசி, 1390சிசி என மிகவும் விலைமிக்க பவர்ஃபுல்லான பைக்குகளை மட்டுமே கேடிஎம் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து கொண்டுவருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.2.25 லட்சம் என்பது கேடிஎம் 250 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல பத்தாயிரங்கள் அதிகமாக வரலாம். இவ்வளவு விலைமிக்க 250சிசி பைக்கை வாங்கவும் நம் நாட்டில் நிறைய கஸ்டமர்கள் இருக்கின்றனர். வாங்கினால் கேடிஎம் பைக்கை தான் என இருப்பவர்களுக்கு இந்த ரூ.20,000 பணம் தள்ளுபடி மிகுந்த மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









