லட்ச ரூபாய் கொட்டி பைக் வாங்கி கொடுப்பது இதற்குதானா? கேடிஎம் பைக் என்றாலே பயமாக இருக்கு!!
கேடிஎம் (KTM) பைக் வைத்திருப்பவர்கள் என்றாலே ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டுபவர்கள் என்கிற பார்வை நம் மக்கள் மத்தியில் உள்ளது. அதற்கேற்ப கேடிஎம் பைக்குகள் நன்கு ஆற்றல்மிக்கதாக உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே, கேடிஎம் பைக்குகளினால் நிகழ்ந்த சாலை விபத்துகள் பலவற்றை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை ரைடர்களின் சாலை ஒழுங்கீனத்தால் நடந்துள்ளன. அந்த வரிசையில், பைக்கின் பின் சக்கரத்தை தூக்கி வீலிங் செய்ய முயற்சித்த கேடிஎம் பைக் ரைடர் ஒருவர் சாலையில் எதிரே வந்த மினி வேன் உடன் மோதலுக்கு உள்ளாகி உள்ளார். இதுதொடர்பான நெஞ்சை பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
நம் இந்தியாவை பொறுத்தவரையில், சாலையில் ஆக்ரோஷமாக மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர்களை அடையாளம் காண்பது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. தினந்தோறும் அத்தகையவர்களுள் குறைந்தது ஒருவரையாவது பார்த்துவிடலாம். ஏற்கனவே கூறியதுபோல், சாலையில் இவ்வாறு ஆக்ரோஷமாக பைக் ஓட்டுபவர்களில் கேடிஎம் பைக் ரைடர்களின் பங்கு அதிகமாக உள்ளது.

கேடிஎம் பைக்குகள் செயல்திறன்மிக்கவை. இதனால்தான் 125சிசி கேடிஎம் பைக் கூட கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. கேடிஎம் பைக்குகளில் ஆக்ஸலரேட்டரை முறுக்கும்போது கிடைக்கும் ஒருவித எனர்ஜி இளைஞர்களை வேகமாக செல்ல தூண்ட வைக்கிறது. இதனால், முன் & பின் சக்கரங்களை தூக்கி வீலிங் செய்வதை குறிப்பாக கேடிஎம் பைக் ரைடர்கள் அதிகமாக விரும்புகின்றனர்.
அந்த வரிசையில், வளைவில் திரும்பும்போது பின் சக்கரத்தை தூக்கி வீலிங் செய்ய முயற்சித்த கேடிஎம் பைக் ரைடர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் எதிரே வந்த மினி வேன் மீது மோதி பலத்த காயமடைந்துள்ளனர். பார்ப்போரை பதற வைக்கும் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலமாக இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

பைக்கை இளைஞர் ஒருவர் ஓட்ட, பின் இருக்கையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம். இந்த கேடிஎம் பைக் ரைடர் வேறொருவருடன் பந்தயம் போட்டு வேகமாக சென்றது போல் தெரிகிறது. வீடியோவில், விபத்து நடந்த சாலை குறுகலாக இருப்பதை காணலாம். இந்த சாலையில்தான் இருபுறமும் வாகனங்கள் செல்ல வேண்டும். ஆதலால், இத்தகைய சாலையில் பைக் ரேஸ் என்பது முற்றிலும் முடியாத காரியம் ஆகும்; தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
எங்களுக்கு தெரிந்தவரையில், இதனை ஒருவழி சாலை என இந்த கேடிஎம் பைக் ரைடர் நினைத்திருக்க வேண்டும். ஏனெனில், அதனால்தான் வளைவில் திரும்பும்போது சாலையின் மறுப்பக்கத்தில் வீலிங் செய்தவாறு சென்றுள்ளார். மினி வேன் ஒன்று எதிரே வருவதை பார்த்ததும் பிரேக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்குள் வேனுடன் பைக் மோதலுக்கு உள்ளாகிவிட்டது. வழக்கம்போல் பின் பிரேக்கை ஆரம்பத்தில் இவர் கொடுத்துள்ளார் என நினைக்கிறோம்.

ஆனால், பின் சக்கரம் அந்தரத்தில் உள்ளதை உணர்ந்ததும் முன் பிரேக் கொடுத்துள்ளார். பொதுவாகவே பைக்கில் முன் பிரேக் அதிகமாக உபயோகப்படுத்த கூடாத ஒன்று ஆகும். ஆனால், இந்த நபர் பதற்றத்தில் வீலிங் செய்துக் கொண்டிருந்த போது முன் பிரேக்கை கொடுத்துள்ளார். இது முற்றிலும் மிகப்பெரிய தவறு ஆகும். ஏனெனில், சாதாரணமாக செல்லும்போதே முன் பிரேக்கை கொடுத்தால், பைக் முன்னோக்கி தூக்கும்.
ஆனால், இந்த நபர் பின் வீலிங் செய்துக் கொண்டிருந்த போது முன் பிரேக் கொடுத்து பெரிய தவறு செய்துள்ளார். இதனால்தான், மினி வேனுடன் மோதலுக்கு உள்ளாகும் முன்னரே பைக் முன்னோக்கி கவிழ்வதை வீடியோவில் காணலாம். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. அதேபோல், மோதலுக்கு உள்ளான நபர்களுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது குறித்த விபரங்களும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலில், சாலையில் பைக் வீலிங் என்பதே மிக பெரிய தவறு. அதிலிலும் இந்த நபர் பின்னால் ஒருவரை வைத்துக் கொண்டு குறுகிய சாலையில் அதனை செய்துள்ளார். முன் சக்கரத்தை தூக்கி வீலிங் என்றால் கூட ஓரளவிற்கு கண்ட்ரோல் இருக்கும். ஆனால், இந்த நபர் பின் சக்கரத்தை அல்லவா தூக்கியுள்ளார். எதிரே மினி வேன் வந்ததினால் பாதிப்பு குறைவாக இருக்கும் என நினைக்கிறோம். அதுவே, லாரி அல்லது பேருந்து வந்திருந்தால் பைக்கில் வந்தவர்கள் சக்கரத்துக்கு அடியில் சிக்குவதற்கு கூட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









