20 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவரை லுக் விட்ட இளம்பெண்! கோவத்தில் உடன் வந்த இளைஞர் செய்த காரியத்தால் அதிர்ச்சி!
இந்தியாவில் பொது சாலைகளில் பைக் ஸ்டண்ட் (Bike Stunt) செய்வது தற்போது ஒரு ஃபேஷனாக மாறி விட்டது. அதிலும் பைக்கின் பின்னால் இளம்பெண்கள் இருந்தால் சொல்லவே வேண்டாம். இளைஞர்கள் கண்மூடித்தனமாக பைக்குகளை ஓட்ட தொடங்கி விடுகின்றனர். இதை நிரூபிக்கும் வகையிலான வீடியோ (Video) ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் யூடியூபர் (YouTuber) ஒருவர், சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புடைய கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்10 ஆர் (Kawasaki Ninja ZX10 R) சூப்பர் பைக்கில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் சாலையில் நடக்கும் காட்சிகளை பதிவு செய்து கொண்டே அவர் பயணம் செய்தார்.

இந்த கேமரா மூலம்தான் தற்போது நாம் பேசி கொண்டுள்ள அதிர்ச்சிகரமான வீடியோவும் நமக்கு கிடைத்துள்ளது. பரபரப்பான நகர சாலைகளின் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தபோது, கேடிஎம் ட்யூக் (KTM Duke) பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞரையும், இளம்பெண்ணையும், யூடியூபர் சந்தித்தார்.
இளைஞர் கேடிஎம் ட்யூக் பைக்கை ஓட்ட, இளம்பெண் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் இருவருமே ஹெல்மெட் உள்பட எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களையும் அணியவில்லை. கவாஸாகி சூப்பர் பைக் ரைடரை பார்த்ததும், கேடிஎம் பைக் ரைடர் கண்மூடித்தனமாக பயணிக்க தொடங்குகிறார். கௌரவத்தை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் அவர் இதை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

போதாக்குறைக்கு கேடிஎம் பைக்கில் அமர்ந்திருந்த இளம்பெண் வேறு அடிக்கடி பின்னால் திரும்பி, கவாஸாகி பைக் ரைடரை பார்க்கிறார். ஒரு கட்டத்தில் 2 பைக் ரைடர்களும் மிகவும் கண்மூடித்தனமாக பயணம் செய்ய தொடங்குகின்றனர். கிடைக்கின்ற சிறிய இடைவெளிகளில் எல்லாம் நுழைந்து, அவர்கள் பைக்குகளை ஓட்டுகின்றனர்.
ஒரு கட்டத்தில் கேடிஎம் பைக் ரைடர் முன் சக்கரங்களை திடீரென தூக்கி ஸ்டண்ட் செய்ய முயல்கிறார். அந்த பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உண்மையை சொல்வதென்றால் அவர் இதற்கு தயாராகவே இல்லை. எனவே நிலைதடுமாறிய அவர் கீழே விழுவதை போல் சென்று விட்டார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் கீழே விழுவது போல் சென்ற காரணத்தால், கேடிஎம் பைக் ரைடரை அவர் அடித்து கொண்டே செல்வதை வீடியோவில் நம்மால் காண முடிகிறது. மிகவும் அதிர்ச்சிகரமான இந்த வீடியோ, சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி கொண்டுள்ளது.
இதை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், 2 பைக் ரைடர்கள் பொது சாலையில் கண்மூடித்தனமாக பைக் ஓட்டியதை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அத்துடன் பொது சாலைகளில் பைக்குகளில் இதுபோல் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது சாலைகளில் பைக் ரேஸ்களில் ஈடுபடுவது மற்றும் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவது ஆகிய செயல்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களை பொது சாலைகளில் செய்வதே தவறு எனும் நிலையில், ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் இப்படி நடந்து கொள்வது முட்டாள்தனமானது.
இத்தகைய நபர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்தும். இல்லாவிட்டால் இவர்களை பார்த்து இன்னும் பலர், தவறாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். உங்களுக்கு பைக் ஸ்டண்ட் போன்ற விஷயங்களில் ஆர்வம் இருந்தால், தனியார் இடங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் செய்யலாம். அதுவும் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் முழுமையாக அணிந்து கொண்டு!


Click it and Unblock the Notifications