கால்குலேட்டர் கூட திணறுது!! டெல்லி தொழிலதிபரின் லக்சரி கார் கலெக்ஷன்ஸ்... காரை நிறுத்தி வைக்க இடம் பத்தல!
விகாஸ் மலு, இந்த பெயரை சமீப வாரங்களாக அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டது போல் தோன்றலாம். ஏனெனில், குபேர் குழுமத்தின் முதன்மை நிர்வாக இயக்குனரான விகாஸ் மலு தனது விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரில் சமீபத்தில் விபத்தில் சிக்கினார். மும்பை- டெல்லி நெஞ்சாலையில் விகாஸ் மலுவின் ரோல்ஸ்-ராய்ஸ் கார் மிக அதிவேகத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, குறுக்கே வந்த கண்டெயினர் லாரி மீது மோதி பெரும் விபத்திற்கு உள்ளானது.
இந்த சம்பவத்தில் கண்டெயினர் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் என இருவர் பலியாகினர். ரோல்ஸ்-ராய்ஸ் காரின் வலிமையான உடல் கட்டமைப்பால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த விகாஸ் மலு காயத்துடன் உயிர் தப்பினார். சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில், 45க்கும் அதிகமான தொழில்களில் ஈடுப்பட்டுவரும் குபேர் குழுமத்தில் இருந்து பல்வேறு தயாரிப்புகள் பல்வேறு பிராண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், சமையலுக்கு தேவையான மசாலா, தேயிலை, பூஜை சாம்ராணி, ஆயுர்வேத பொருட்கள், ஹேண்ட் சானிடைசர் உள்ளிட்டவற்றில் குபேர் குழுமம் முன்னிலையில் உள்ளது. இத்தகைய குழுமத்தின் முதன்மை நிர்வாக இயக்குனராக கடந்த 1993 முதல் விகாஸ் மலு செயல்பட்டு வருகிறார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, விபத்தில் சேதமடைந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் இல்லாமலேயே 100க்கும் மேற்பட்ட கார்கள் விகாஸ் மலுவிடம் உள்ளன.
ஆனால் அவற்றில் பெரும்பாலானவை சாலைக்கு வந்ததே கிடையாது. மோ விலாக்ஸ் (Mo Vlogs), இந்தியாவின் பிரபலமான யுடியூப்பர்களில் ஒருவர். இவருக்கு ஒருமுறை விகாஸ் மலு உடன் பிரைவேட் ஜெட்டில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் சென்ற அந்த பிரைவேட் ஜெட் விகாஸ் மலுவின் வீட்டிற்கு அருகே தரையிறங்கியது. இந்த வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் பதிவிட்டு உள்ளோம். இந்த வீடியோவின் தலைப்பே, "100 மில்லியன் டாலர் மதிப்பிலான கார் கலெக்ஷன்" என்பதாகும்.

வீடியோவில், பிரைவேட் ஜெட்டில் இருந்து தரையிறங்கியதும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகும், பல்வேறு வாயிற்கதவுகளை கடந்தும் உள்ளே செல்கின்றனர். பின்னர், ஒருவழியாக விகாஸ் மலுவின் இருப்பிடத்தை அடைகின்றனர். அங்கு ஓர் கார் பார்க்கிங் பகுதி உள்ளது. அதனை சென்று பார்வையிட்ட மோ விலாக்ஸ் குழுவினருக்கு மயக்கம் வராத குறை ஒன்று மட்டுமே.
விகாஸ் மலுவின் கேரேஜில் ஏகப்பட்ட அல்ட்ரா-லக்சரி வாகனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை ஸ்பெஷல் எடிசன்களாகும். அதாவது அத்தகைய கார்களை உற்பத்தி செய்த நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தயாரித்து விற்பனை செய்திருக்கும். இதனால், அவற்றை அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமின்றி, வாங்குவதற்கு போட்டி அதிகமாக இருக்கும் என்பதால் அவ்வளவு பணம் இருந்தும் சில சமயங்களில் வாங்க முடியாமல் போகலாம்.

விகாஸ் மலுவின் கேரேஜில் உள்ள ஸ்பெஷல் எடிசன் கார்களில் ஏகப்பட்டவை லம்போர்கினி, பெண்ட்லீ, ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ், அஸ்டன் மார்டீன், மஸ்டங் போன்ற விலையுயர்ந்த பிராண்ட்களை சேர்ந்தவையாக உள்ளன. இதில் குறிப்பிட்டு பார்த்தால், கஸ்டம் செய்யப்பட்ட லம்போர்கினி உருஸ், மன்சோரி கிட்டை கொண்ட பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி, லம்போர்கினி ஹூராகென் எஸ்டிஓ, பெண்ட்லீ பெண்டைகா, பெண்ட்லீ முல்சன்னே உள்ளிட்டவை நம் கண்ணில் படுகின்றன.
ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் கஸ்டம் மற்றும் அஸ்டன் மார்டீன் சூப்பர்லெக்கேரா கார்கள் மற்றவைகளில் இருந்து தனித்து தெரிகின்றன. மெர்சிடிஸ் ஜி.எல்.எஸ்600, ஃபோர்டு மஸ்டங் ஜிடி, டொயோட்டா ஃபார்ச்சூனர்ஸ் போன்றவை சர்வ சாதாரணமாக வெட்ட வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆதலால் இவை கான்வேக்கு பயன்படுத்தப்படுவைகளாக இருக்க வேண்டும். சில கார்களில் போலீஸ் சைரன்கள் கூட பொருத்தப்பட்டு உள்ளன. அவை பாதுகாப்பு வாகனங்களாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்ட கார்களில் பெரும்பாலானவற்றில் '9' எண்ணை கொண்ட நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு பல்வேறு கார்களுக்கு ஓர் விஐபி நம்பர் பிளேட்டை வாங்குவதே கோடி கணக்கில் செலவாகக்கூடிய விஷயம். ஆகையால், நம்பர் பிளேட்டிற்கு ஆன செலவு உள்பட விகாஸ் மலுவின் கார் கேரேஜின் மதிப்பு எவ்வளவு என்பதை கணிக்கவே முடியவில்லை. கீழுள்ள வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல் 100 மில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications
