திருமண நிகழ்ச்சியில் பவனி வந்த ஆடம்பர சொகுசு கார்கள்... விலை தெரிந்தால் மலைத்து போய் விடுவீர்கள்
கர்நாடகாவில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் ஆடம்பர சொகுசு கார்கள் பவனி வந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது. ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர்.

அத்தகைய திருமண நிகழ்ச்சிகளின் ஊர்வலங்களில் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் வலம் வரும். இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளை நாம் ஏற்கனவே கண்டிருந்தாலும், கர்நாடகாவில் நடைபெற்ற திருமணம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சியின் ஊர்வலத்தில் பல்வேறு விலை உயர்ந்த கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் பாரம்பரியமான பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நமது இந்தியாவை பொறுத்தவரை இது வழக்கமான ஒரு விஷயம்தான்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த திருமண நிகழ்ச்சியின் ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட கார்களில், லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே (Lamborghini Aventador SVJ) காரும் ஒன்று. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் மிகவும் விலை உயர்ந்த சூப்பர் கார் இதுவே.

உலகின் மிகவும் அரிதான கார்களில் ஒன்றாக லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே பார்க்கப்படுகிறது. லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே காரில், ஹை-லெவல் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதன் அடிப்படை விலை 8.5 கோடி - 9 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் இதன் ஆன் ரோடு விலை சுமார் 12 கோடி ரூபாயை நெருங்கி விடும்! திருமண நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட இந்த கார் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களாகதான் இந்த கார் இந்திய சாலைகளில் உலா வரவுவதாக கூறப்படுகிறது. மிகவும் விலை உயர்ந்த கார் என்பதோடு மட்டுமல்லாமல், மிகவும் வேகமான கார் என்ற பெருமையும் லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே காருக்கு உண்டு.

லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே காரில், மிகவும் சக்தி வாய்ந்த 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 770 பிஎச்பி பவர் மற்றும் 720 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடியது.

7 ஸ்பீடு சிங்கிள் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலமாக நான்கு சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தி கடத்தப்படுகிறது. லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டி விடும்.

அதாவது லம்போர்கினி அவென்டெடார் காரை காட்டிலும், இது 0.1 வினாடி விரைவானது. கர்நாடக திருமண நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொடர்பான வீடியோவை SupercarsInBangalore வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், லம்போர்கினி உருஸ், மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ், பிஎம்டபிள்யூ 5-சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் உள்ளிட்ட கார்களையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

திருமண நிகழ்ச்சிகளின்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சாதாரண கார்கள் ஊர்வலம் வருவது என்பது இங்கு வாடிக்கையான ஒரு விஷயம்தான். ஆனால் இப்படி விலை உயர்ந்த கார்கள் ஒன்றாக அணிவகுத்து வருவது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமே. இது பலரின் கனவாக கூட இருக்கும்.


Click it and Unblock the Notifications








