லம்போர்கினி கார் வைத்திருந்தால் உங்களுக்கு கொம்பு முளைச்சி இருக்கா? வெச்சி செஞ்சிவிட்ட போலீசார்!!
விலையுயர்ந்த கார் அல்லது பைக்கை வைத்து இருந்தாலே சிலருக்கு எங்கிருந்துதான் தலைகனம் வரும் என்றே தெரியாது. சாலை மொத்தமும் தனக்கு தான் சொந்தம் என்கிற அளவிற்கு வேகமாக செல்வது, வளைந்து வளைந்து செல்வது என சாலையை தெறிக்கவிடுவதை பார்த்திருக்கிறோம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கூட புகுந்து புகுந்து செல்வர். அதிலிலும் லம்போர்கினி (Lamborghini) காரை வைத்திருப்பவர்களை பற்றி எல்லாம் சொல்லவே தேவையில்லை. இந்திய சாலைகளுக்கு லம்போர்கினி கார்கள் ஏற்றவை இல்லை என சொல்லிக் கொண்டே சாலையில் தாறுமாறாக செல்வர்.
அவ்வாறான ஒரு லம்போர்கினி கார் டிரைவரை பற்றியும், அவர் மீது போலீசார் எடுத்துள்ள நடவடிக்கையை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வாகன ஓட்டிகள் பலரை அதிர்ச்சியுற வைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த வீடியோவை ஆதாரமாக வைத்தே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்திருப்பது, டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் நகரத்தில் ஆகும். தலைநகர் டெல்லியிலும், அதனை சுற்றியுள்ள நொய்டா, குருகிராம் நகரங்களிலும் விலையுயர்ந்த கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப அந்த நகரங்களில் நன்கு தரமான சாலைகளும், மேம்பாலங்களும் நீண்ட தொலைவிற்கு போடப்பட்டு உள்ளதாலும், மற்ற பதிவு கட்டணங்களும் குறைவாக இருப்பதாலும் தைரியமாக நிறைய பேர் சொகுசு கார்களை வாங்க விரும்புகின்றனர்.
இதனாலோ என்னவோ தலைநகர் டெல்லியை சுற்றிய பகுதிகளில் ஆபத்தான முறையில் வாகனங்கள் ஓட்டப்படுவதும், அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகமாக உள்ளன. அந்த வரிசையில்தான், இங்கு லம்போர்கினி கார் டிரைவர் ஆக்ரோஷமான முறையில் காரை ஓட்டியுள்ளார். மஞ்சள் நிறத்திலான லம்போர்கினி கல்லார்டோ (Gallardo) காரில் சென்ற அவர், காரின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தவாறு காரை ஓட்டி சென்றுள்ளார்.

இரு கதவுகளை மட்டுமே கொண்ட கல்லார்டோ போன்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை இரு கைகளில் கண்ட்ரோல் செய்வதே கடினம் எனும்போது, இவர் தனது பாதி உடலை காரின் ஜன்னல் வழியாக வெளியே கொண்டு வந்து ஒரு கையை மற்ற வாகன ஓட்டிகளை நோக்கி அசைத்தப்படி, ஒரு கையால் கார் ஓட்டியுள்ளார். அத்துடன், சத்தமாக கத்தியப்படி காரை ஓட்டி சென்றதால் மற்ற வாகன ஓட்டிகளின் கவனம் சிதறியது.
மேலும், மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மற்ற வாகனங்களுக்கு குறுக்கே வளைந்து வளைந்து இந்த லம்போர்கினி கார் டிரைவர் சென்றுள்ளார். இதனை வேறொரு வாகனத்தில் இருந்து வீடியோவாக காட்சிப்படுத்தியவர்கள் அதனை இணையத்தில் வெளியிட, அதனை அடிப்படை ஆதாரமாக வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட லம்போர்கினி கல்லார்டோ கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த சம்பவம் ஆனது குருகிராமில் டி.எல்.எஃப் பேஸ்-1 (DLF Phase-1) பகுதியில் கோல்ஃப் கோர்ஸ் (Golf Course) சாலையில் நடந்துள்ளது. இந்த சாலை ஆனது எப்போதுமே பரபரப்பாக இயங்கக்கூடியது ஆகும். ஆனால், வீடியோவில் சாலை காலியாக உள்ளதால் இந்த சம்பவம் நள்ளிரவு நேரத்தில் நடந்ததாக இருக்கலாம்.
இந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்டுள்ள லம்போர்கினி கல்லார்டோ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது 2005ஆம் ஆண்டில் இருந்து 2014 வரையில் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும். வெறும் இரு இருக்கைகளை மட்டுமே கொண்ட இந்த லம்போர்கினி காரின் விலை 10 வருடங்களுக்கு முன்பே ரூ.2.11 கோடி- ரூ.3.17 கோடியாக இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான சம்பவங்களை தடுக்க, சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது அவசியமாகிறது. மற்றப்படி, இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட லம்போர்கினி கார் டிரைவரை பற்றிய விபரங்கள் கிடைக்க பெறவில்லை. இந்த நிகழ்வின்போது அவர் மது அருந்தி இருக்கக்கூடும் என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications








