கபாலி சினிமாவின் விளம்பர பிரச்சார வாகனமாக மாறிய லம்போர்கினி கார்!
இன்னும் இரு தினங்களில் கபாலி திரைப்படம் ரிலீசாக இருக்கும் நிலையில், இப்போதே திரையரங்குகளில் கபாலி திரைப்படத்திற்கான விளம்பர தட்டிகளுடன் களைகட்டி இருக்கிறது. ரசிகர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் கபாலி திரைப்படத்தையொட்டி தங்கள் பங்குக்கு புதுமையான விளம்பரங்களை செய்து வருகின்றன.

சமீபத்தில் ஏர் ஏசியா நிறுவனம் தனது ஏர்பஸ் ஏ320 விமானத்தில் கபாலி போஸ்டரை ஒட்டியதுடன், சிறப்பு விமானத்தையும் இயக்குவதாக அறிவித்தது. இதேபோன்று, ஓசூரில் உள்ள மாருதி சுஸுகி டீலர், ஸ்விஃப்ட் கார் ஒன்றின் முழுவதும் கபாலி போஸ்டர்களையும், அதில் இடம்பெறும் வசனங்களையும் ஒட்டி அமர்க்களமாக காட்சிக்கு வைத்திருக்கிறது.
இந்த நிலையில், வெளிநாட்டை சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் தனது லம்போர்கினி கார் முழுவதும் கபாலி போஸ்டரை ஒட்டி அலங்கரித்துள்ளார். ஆம், மலேசிய தலைநகர் கோலாலம்பூரை சேர்ந்த ரசிகர் ஒருவர்தான் இவ்வாறு தனது லம்போர்கினி காரை மாற்றி அசத்தியிருக்கிறார். கோலாலம்பூர் சாலைகளில் வலம் வரும் அந்த காரை பலரும் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
மேலும், கபாலி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அந்நாட்டை சேர்ந்த ரசிகர் ஒருவர் கபாலி திரைப்படத்திற்கு விளம்பரம் தேடுவது மட்டும் நோக்கமாக இல்லாமல், ரஜினி மீது வைத்திருக்கும் அன்பை பரைசாற்றும் விதமாக இவ்வாறு செய்துள்ளார்.
அடுத்த இரு நாட்களில் இன்னும் என்னென்ன புதுமையான விளம்பரங்களும், செயல்களிலும் ரஜினி ரசிகர்கள் ஈடுபட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications




























