ஸ்கூட்டரில் போய்ட்டு இருந்தவருக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்... இந்த நாளை ஆயுசுக்கும் மறக்க மாட்டாரு...
இந்திய சாலைகளில் முன்பெல்லாம் சூப்பர் கார்களை பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை மொத்தமாக மாறி விட்டது. மிகவும் விலை உயர்ந்த சூப்பர் கார்களை இந்திய சாலைகளில் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.
எனவே சாலைகளில் சூப்பர் கார்களை போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுத்து, யூடியூப் (YouTube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) தளங்களில் பதிவிடுபவர்கள் கூட நிறைய பேர் உருவாகி விட்டனர். சமையல் மற்றும் காமெடி போன்று, சாலைகளில் தென்படும் சூப்பர் கார்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதற்கு என்றே, சமூக வலை தளங்களில் அவர்கள் பிரத்யேகமான பக்கங்களை வைத்துள்ளனர். ஆனால் அப்படி போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுப்பவர்களை சூப்பர் கார் உரிமையாளர்கள் கண்டு கொள்ள கூட மாட்டார்கள். ஆனால் லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) காரின் உரிமையாளர் ஒருவர், இதற்கு முன் நாம் கேள்விபட்டிராத ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. நிஷாந்த ஷாபூ (Nishant Saboo) என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இவர் சமூக வலை தளங்களில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு நபர் ஆவார். சமீபத்தில் தனது லம்போர்கினி ஹூராகேன் காரை அவர், சாலையில் ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஸ்கூட்டரில் 2 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர், லம்போர்கினி ஹூராகேன் காரை பார்த்தவுடன் ஆச்சரியமடைந்து விட்டார். உடனே தனது செல்போனை எடுத்து, அந்த சூப்பர் காரை வீடியோ எடுக்க தொடங்கினார். இதை கவனித்த நிஷாந்த் ஷாபூ, அப்படியே செல்வதற்கு பதில், காரை உடனடியாக நிறுத்தினார்.

அத்துடன் தனது லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை வீடியோ எடுத்த இளைஞரை அழைத்து காருக்கு உள்ளே உட்கார வைத்தார். அவர் பெயர் யோகேஷ் ஆகும். இவர் ஒரு கார் ஆர்வலர் என்பது, அவரிடம் பேசியதன் மூலமாக, நிஷாந்த் ஷாபூவிற்கு தெரியவந்தது. எனவே தனது லம்போர்கினி ஹூராகேன் காரில், யோகேஷை அவர் சிறிது நேரம் அழைத்து சென்றுள்ளார். கார் ஆர்வலரான யோகேஸின் மனதிற்கு இது நிச்சயம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரில் பயணம் செய்து என்பது சாதாரணமான விஷயமா என்ன?
தனது சூப்பர் காரை வீடியோ எடுப்பவரை அழைத்து, அவருக்கு சிறிது நேரம் பயணம் செய்யும் வாய்ப்பை ஒருவர் வழங்குவது என்பது அரிதான ஒரு விஷயம் ஆகும். நாங்கள் ஏற்கனவே கூறியபடி, இது இதற்கு முன் நாம் கேள்விப்படாத ஒரு விஷயம் ஆகும். எனவே இந்த சம்பவத்தின் வீடியோவை, சமூக வலை தளங்களில் கார் ஆர்வலர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த நேரத்தில் 2 விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். டூவீலர்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் செய்யுங்கள். இந்த வீடியோவில், யோகேஷ் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இது விதிமுறை மீறல் என்பதுடன், ஆபத்தானதும் கூட. எனவே முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
மற்றொன்று சூப்பர் கார்களை போட்டோ, வீடியோ எடுக்கிறேன் என்ற பெயரில், யாரும் சாலை விபத்துக்களில் சிக்கி விட வேண்டாம். சாலையில் எப்போதும் கவனம் இருக்கட்டும். சூப்பர் கார்களின் மீது முழு கவனத்தையும் திருப்பினால், சாலை விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே கவனமாக செயல்படுவது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








