விமானத்தின் டேக்-ஆஃப்பின் போது ரன்வே-யில் குறுக்கே வந்த நாய்!! அடுத்து நடந்தது... டென்ஷனாகிய பயணிகள்!
ஜம்மூ-காஷ்மீரில் உள்ள லே விமான நிலையத்தில், நாய் குறுக்கே வந்ததால் விமானத்தின் டேக்-ஆஃப் ரத்து செய்யப்பட்டிருக்கும் சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த முழு தகவல்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

விமான நிலையங்களில் அவ்வப்போது சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தொழிற்நுட்ப கோளாறுகளினால் ஏற்படுபவையாகவே இருந்துள்ளன. இல்லையென்றால், பயணிகளில் சிலர் செய்யும் கலாட்டாக்களாக இருக்கும்.

ஆனால் ஒரு நாயினால் விமானத்தின் டேக்-ஆஃப் தடைப்பட்டிருப்பதை பற்றி இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த நிகழ்வு சமீபத்தில் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஓர் விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள லே விமான நிலையத்தில் விடி-டபிள்யூஜேஜே என்ற பெயர் கொண்ட விமானம் ஒன்று டெல்லிக்கு புறப்பட தயாரானது. பயணிகள், விமான ஊழியர்கள் மற்றும் விமானி என அனைவரும் விமானத்தில் ஏறிவிட்டனர்.

விமானமும் ரன்வே-யில் மெல்ல மெல்ல தனது வேகத்தை அதிகரித்து பறக்க ஆயத்தமாகியது. ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட். திடீரென எங்கிருந்தோ ஒரு நாய் ரன்வே-யில் குறுக்காக வந்தது. இதை கண்ட விமானி உடனடியாக விமானத்தை நிறுத்திவிட்டார். பின்னர் விமானம் மீண்டும் இயங்க ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீண்டும் ரன்வே வேகமெடுத்து பறந்து செல்லலாமே? என நீங்கள் கேட்கலாம்.

இது சாதாரண விரைவு பேருந்து கிடையாது. ஒரு இரயில் குறிப்பிட்ட நேரத்தில் இருந்து தாமதமாக புறப்பட்டு சென்றாலே அது சந்திக்கும் எதிர்பாராத இடையூறுகள் ஏராளம். அப்படியிருக்கையில், ஒரு விமானம் டேக்-ஆஃப் ஆகாமல் மீண்டும் டெர்மினலை நோக்கி செல்லுமாயின், அதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் மீண்டும் விமானத்தை உடனடியாக எடுத்து செல்ல முடியாது.

ஏனெனில் அந்த நேரத்தில் வேறு ஏதேனும் விமானம் டேக்-ஆஃப் ஆகலாம் அல்லது லேண்டிங் ஆகலாம். ஆதலால் அதிகாரிகளிடம் இருந்து முறையான அனுமதி வரும்வரை மீண்டும் அந்த விமானத்தை இயக்க மாட்டார்கள். இவ்வாறு நாயினால் ஒரு விமானத்தின் டேக்-ஆஃப் நிறுத்தப்பட்டிருப்பது எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை.

ஆனால் பறவைகளினால், போதிய இயற்கை சூழல் இல்லாதததினால் விமானத்தின் டேக்-ஆஃப் & லேண்டிங்குகள் இதற்குமுன் சிலமுறை ரத்து செய்யப்பட்டுள்ளன. நாய் ஒன்றினால் டெல்லிக்கு செல்லும் விமானத்தின் டேக்-ஆஃப் தாமதமாகி இருப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனர், "கோ-ஏர் விமானம் விடி-டபிள்யூஜேஜே (லே-டெல்லி)-இன் டேக்-ஆஃப் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் பாதியில் நிறுத்தப்பட்டது" என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

வழக்கமாக கோ-ஏர் விடி-டபிள்யூஜேஜே விமானம் லே நகரில் இருந்து டெல்லிக்கு தினமும் காலை 10.30 மணியளவில் புறப்பட்டு, 1.30 மணிநேர பயணத்திற்கு பின்னர் மதியம் 12 மணியளவில் டெல்லியை சென்றடையும். பொதுவாகவே விமான புறப்படும் நேரத்தில் அவ்வப்போது தாமதங்கள் ஏற்படுவது உண்டு. ஆனால் நாயினால் டேக்-ஆஃப் தாமதமாகிய இந்த குறிப்பிட்ட விமானத்தின் பயணம் கிட்டத்தட்ட 1.30 மணிநேர தாமதத்திற்கு பிறகு துவங்கியுள்ளது.

அதாவது லே நகரில் இருந்தே இந்த விமானம் மதியம் 12 மணியளவில்தான் புறப்பட்டு, பிற்பகல் 1.55 மணியளவில் டெல்லியை சென்றடைந்துள்ளது. நாய் ஒன்றால் விமானத்தின் டேக்-ஆஃப் பாதியில் நிறுத்தப்பட்டது லே விமான நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்தியாவில் சமீப மாதங்களாக, விமான பொறியியல் தொடர்பான மற்றும் தொழிற்நுட்ப கோளாறுகள் தொடர்பான அறிக்கைகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
NOTE: Images are used for representative purposeonly

இதை ஏன் இப்போது கூற வருகிறேன் என்றால், சில தினங்களுக்கு முன்னர் மும்பை-லே மற்றும் ஸ்ரீநகர்-டெல்லி விமானங்கள் தொழிற்நுட்ப கோளாறுகளினால், இவ்வாறு டேக்-ஆஃப் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் டெர்மினலுக்கே கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், இந்த இரு விமானங்களில் என்ஜின் கோளாறுகள் கண்டறியப்பட்டதாகவும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாடு முழுவதிலும் தொழிற்நுட்ப கோளாறுகள் காரணமாக விமானங்கள் புறப்படும் நேரம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

நாயினால் டேக்-ஆஃப் நிறுத்தப்பட்ட கோ-ஏர் விமானத்தின் இன்றைய (ஜூலை 21) பயணம் கூட கிட்டத்தட்ட 33 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு முற்பகல் 11.03 மணியளவில் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெரும்பாலான விமானங்களின் பயணங்கள் தாமதமாகி வருவதால், அனைத்து விமான சேவை நிறுவனங்களும் இதுகுறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென விமான போக்குவரத்து அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








