இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை தரைமட்டத்திற்கு குறையபோகுது.. ஜம்முவில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை தனிமம்!
இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் முக்கிய பங்களிக்கும் லித்தியம் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் லித்தியம் மூலக் கூறுகள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது இந்தியாவில் இருப்பது கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும். 5.9 மில்லியன் டன்கள் அளவிற்கு இந்தியாவில் லித்தியம் மூலக் கூறுகள் இருப்பதாக மத்திய அரசு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அளவு பெரும் எண்ணிக்கையில் இந்தியாவில் லித்தியம் கண்டறியப்படுவதும் இதுவே முதல் முறை ஆகும்.

இது ஓர் இரும்பு அல்லாத உலோகம்
லித்தியம் என்பது ஓர் இரும்பு அல்லாத உலோகம் ஆகும். இது மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதுவே மிக மிக அதிகளவில் இந்தியாவில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் - ஹைமானா பகுதியிலேயே இது இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது.
51 தனிமங்களின் இருப்பு கண்டுபிடிப்பு
இதன் இருப்பை இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு உறுதிப்படுத்தி இருப்பதாக இந்திய சுரங்க துறை அமைச்சகம் வியாழன் (பிப்ரவரி 9) அன்று தெரிவித்தது. லித்தியம் மட்டுமின்றி தங்கம் போன்ற மிக முக்கியமான தனிமங்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குவிந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமார் 51 கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது.

தமிழகமும் பட்டியல்ல இருக்கு
மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்ளிலும் இந்த அரிய வகை தனிமங்கள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, சத்திஷ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா என மொத்தம் 11 மாநிலங்களிலேயே முக்கிய தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தங்கம், நிலக்கரி நிறைய இருக்கு
தங்கம், பொட்டாசியம், மாலிப்டினம் போன்ற மிக முக்கியமான தாதுக்கள் இருப்பதே கண்டறியப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 7,897 மில்லியன் டன் அளவில் நாட்டில் நிலக்கரி மற்றும் லிக்னைட் ஆகியவை இருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கின்றது. இவற்றில் மின்சார வாகனங்களின் இயக்கத்திற்கு முக்கிய கருவியாக இருக்கும் பேட்டரியை தயாரிக்க உதவும் லித்தியம் கண்டறியப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

மின்சார வாகனங்களின் விலை குறையலாம்
இப்போது வரை இந்தியா கச்சா எண்ணெய்யைப் போல மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளுக்கும் வெளிநாடுகளையே பெருமளவில் எதிர்பார்க்க வேண்டி இருக்கின்றது. இந்த நிலையை போக்க இந்த கனிமங்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அவை பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் மின்சார வாகனங்களின் விலை இன்னும் பலமடங்கு குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
மானியம் வழங்குதல், வரி தள்ளுபடி மற்றும் பதிவு கட்டணம் நீக்கம் போன்ற பல்வேறு சலுகைகளை அரசுகள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும், சமீபத்திய பட்ஜெட் தாக்கலின்போது மின்சார வாகனங்களின் விலையை இன்னும் பலமடங்கு குறைக்கும் பொருட்டு மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்க இறக்குமதி செய்யப்படும் மூலக்கூறு பொருட்களுக்கான வரியை குறைத்து அறிவித்தது. இத்தகைய சூழலிலேயே இந்தியாவிலேயே பேட்டரி தயாரிப்பிற்கு உதவும் லித்தியம் பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








