தெற்காசியாவின் மிக பெரிய பேட்டரி செல் உற்பத்தி ஆலை இந்தியாவில் திறப்பு... எங்கு தெரியுமா?
லாக்9 மெட்டீரியல்ஸ் (Log9 Materials) நிறுவனம் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய பேட்டரி செல் உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்து பார்க்கலாம்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் லாக்9 மெட்டீரியல்ஸ் (Log9 Materials), நாட்டின் முதல் செல் உற்பத்தி நிலையத்தை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த ஆலையின் வாயிலாக உள்நாட்டிலேயே பேட்டரி செல்களை லாக்9 மெட்டீரியல்ஸ் உருவாக்க இருக்கின்றது.

லாக்9 மெட்டீரியல்ஸ் ஓர் மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் டீப் டெக்னாலஜி சார்ந்து இயங்கும் நிறுவனம் ஆகும். தன்னுடைய நிறுவனம் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதை உறுதிப்படுத்தும் வகையில், பல்வேறு புதிய டெக்னாலஜிக் கொண்ட பேட்டரி செல்களை உருவாக்கி வருகின்றது.

இந்த பணியை விரிவாக்கம் செய்யும் வகையிலேயே நிறுவனம் புதிய செல் உற்பத்தி ஆலையை தொடங்கியிருக்கின்றது. பெங்களூருவின் ஜக்கூரு பகுதியில் இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

ஆனால், விற்பனையில் உள்ள பெரும்பாலான மின்வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டே, பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையை மாற்றியமைக்க இந்த ஆலையின் வருகை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லாக்9 மெட்டீரியல்ஸ் நிறுவியிருக்கும் இந்த அதிநவீன ஆலை தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சாலை ஆகும். மேலும், இந்த ஆலை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களை முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக வெளியேற்ற பெரும் பங்களிப்பை வழங்க இருக்கின்றது.

இந்திய அரசாங்கம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை மிக தீவிரமாக ஊக்குவித்து வருகின்றது. குறிப்பாக, மேட்-இன் இந்திய தயாரிப்புகளை பல மடங்கு உத்வேகத்துடன் அது ஊக்குவிக்கின்றது. இந்த இலக்கை எட்ட லாக்9 மெட்டீரியல்ஸின் இந்த செல் உற்பத்தி ஆலை நிச்சயம் உதவும்.

இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் மின் வாகனங்களின் விலை பல மடங்கு அதிகமானதாக இருக்க, பேட்டரி உற்பத்தி நாட்டில் மிக மிகக் குறைவாக இருப்பதும் ஓர் காரணம் ஆகும். இந்த சூழ்நிலையில் உள்நாட்டிலேயே பேட்டரி செல்கள் உற்பத்தி செய்யப்படுவது, அவற்றின் விலையைப் பல மடங்கு குறைக்க உதவும்.

மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களும் கணிசமான குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகும். லாக்9 மெட்டீரியல்ஸ் தனது இந்த ஆலை திறப்பு நாளை 'டே ஜீரோ' என பெருமையுடன் குறிப்பிட்டிருக்கின்றது. அதேநேரத்தில், இந்த நாளே லாக்9 நிறுவனம் தொடங்கப்பட்ட நாளும் ஆகும். 2015ம் ஆண்டின் இன்றைய தினத்தில் லாக்9 மெட்டீரியல்ஸ் பிறந்துள்ளது.

இந்த நாளை இன்னும் பல மடங்கு சிறப்பிக்கும் வகையில் புதிய மெகா செல் உற்பத்தி ஆலையை லாக்9 மெட்டீரியல்ஸ் தொடங்கியிருக்கின்றது. இந்த ஆலை இந்தியாவின் மின்சார இயக்கத்தை மாற்றியமைக்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்த நாளை 'டே ஜீரோ' குறிப்பிட்டுள்ளது.

லாக்9 மெட்டீரியல்ஸின் இந்த ஆலை அடுத்த ஒரு வருடத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 50MWh செல் உற்பத்தி திறனில் இயங்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த 3-5 ஆண்டுகளில் அது 5GWh-க்கும் அதிகமாக உயர்த்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய பிரமாண்ட உற்பத்தி ஆலையையே லாக்9 மெட்டீரியல்ஸ் இன்று தொடங்கி வைத்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் டாக்டர் கே சிவன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், கர்நாடக மாநில தொழில் மற்றும் வர்த்தக ஆணையர் ஸ்ரீமதி, கௌரவ விருந்தினராக குஞ்சன் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ்., மற்றும் லாக்9 நிறுவனத்தின் முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள், வணிக பங்காளிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தவிர இன்னும் பலரும் இதில் பங்கேற்றிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








