இந்த விலை உயர்ந்த கார்கள் எல்லாம் அவங்களோடதா! 'லீக்' ஆன வீடியோவை பார்த்ததும் கோவத்தின் உச்சிக்கே சென்ற மக்கள்!
அதிநவீன தொழில்நுட்ப யுகத்தில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டுள்ளோம். உணவு மற்றும் மளிகை பொருட்கள் எல்லாம், செல்போன் செயலி மூலம் ஆர்டர் செய்தால், அடுத்த சில நிமிடங்களில் நமது வீட்டிற்கே வந்து விடுகின்றன. இந்தியாவில் உணவு டெலிவரியில் ஜொமோட்டோ (Zomato) நிறுவனமும், மளிகை பொருட்கள் டெலிவரியில் பிளிங்இட் (Blinkit) நிறுவனமும் முன்னணியில் உள்ள ஒரு சில நிறுவனங்களில் ஒன்றாகும். ஜொமோட்டோ மற்றும் பிளிங்இட் ஆகிய 2 நிறுவனங்களின் தலைமையகமும் ஹரியானா (Haryana) மாநிலம் குருகிராம் (Gurugram) நகரில்தான் உள்ளன.
இன்னும் சொல்லப்போனால், ஜொமோட்டோ நிறுவனம்தான், பிளிங்இட் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். எனவே 2 நிறுவனங்களின் தலைமையகமும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இங்கு எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), ஃபெராரி ரோமா (Ferrari Roma) மற்றும் பிஎம்டபிள்யூ இஸட்4 எம்40ஐ (BMW Z4 M40i) ஆகிய கார்களை எல்லாம் நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் அஸ்டன் மார்ட்டின் (Aston Martin) ஆடி (Audi) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) ஆகிய நிறுவனங்களின் கார்களையும் நாம் காணலாம்.
இதில் பெரும்பாலான கார்கள், ஜொமோட்டோ தலைமை செயல் அதிகாரி தீபீந்தர் கோயல் (Deepinder Goyal) மற்றும் பிளிங்இட் தலைமை செயல் அதிகாரி அல்பிந்தர் திண்ட்சா (Albinder Dhindsa) ஆகியோருக்கு சொந்தமானவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரல் வீடியோ, சமூக வலை தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஒரு சிலர் இந்த மிகவும் விலை உயர்ந்த கார் கலெக்ஸனை ரசித்து வருகின்றனர். இன்னும் சிலரோ, உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பணம் சுரண்டப்படுவதாக கருத்து தெரிவித்து கொண்டுள்ளனர். இதற்கு ஜொமோட்டோ நிறுவனத்தின் சமீபத்திய ஒரு நடவடிக்கையே காரணமாக அமைந்துள்ளது.
ஜொமோட்டோ நிறுவனம் முன்பு பிளாட்பார்ம் கட்டணமாக (Platform Fees) 5 ரூபாயை வசூல் செய்து கொண்டு இருந்தது. ஆனால் இதை சமீபத்தில் 6 ரூபாயாக உயர்த்தியது. இது 20 சதவீத உயர்வு ஆகும். இப்படிப்பட்ட சூழலில் இந்த வீடியோ வெளியான காரணத்தால்தான், சமூக வலை தளங்களில் பலரும், ஜொமோட்டோ நிறுவனத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
''பிளாட்பார்ம் கட்டணம் மூலமாகவும், ஹோட்டல்களிடம் இருந்தும், வாடிக்கையாளர்களிடம் இருந்தும் அதிக கட்டணம் வசூல் செய்தால், உங்கள் பார்க்கிங் பகுதி இப்படி விலை உயர்ந்த கார்களை கொண்டதாகதான் இருக்கும்'' என நெட்டிசன் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். மற்ற நெட்டிசன்கள் பலரும் கிட்டத்தட்ட இதே கருத்தைதான் பதிவு செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜொமோட்டோ தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல், கார் ஆர்வலர் ஆவார். அவரது கார் கலெக்ஸன் பற்றிய தகவல்களை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமே பலமுறை வெளியிட்டுள்ளது. எனவே அவரது அலுவலகத்தில் விலை உயர்ந்த கார்களை பார்ப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications








