தமிழக நிறுவனம் உருவாக்கிய பறக்கும் டாக்சி... இதை எப்போது வானத்தில் பார்க்கலாம்? இதோ முழு விபரம்!
தமிழக நிறுவனம் ஒன்று பறக்கும் டாக்சியை உருவாக்கியிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் முக்கிய தகவல்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இ-பிளேன் (ePlane) நிறுவனம் விரைவில் வர்த்தக துறை சார்ந்து இயங்கக் கூடிய பறக்கும் டாக்ஸியை ப்ரோட்டோ டைப்பில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர் பிரஞ்சல் மேத்தா ஆகியோரால் நிறுவப்பட்ட நிறுவனமே இது.

இந்த நிறுவனமே புதியதாக ப்ரோட்டோ டைப்பில் மின்சார பறக்கும் டாக்ஸியை உருவாக்கி இருக்கின்றது. இப்பறக்கும் டாக்சிக்கு நிறுவனம் இ200 (e200) எனும் பெயர் வைத்துள்ளது. இந்த வாகனம் 2024ம் ஆண்டிற்குள் இந்தியா வான் எல்லைக்குள் பறக்கும் என நம்பப்படுகின்றது. சில தகவல்கள் 2023ம் ஆண்டிலேயே பறக்கும் எலெக்ட்ரிக் டாக்சி காட்சியளித்துவிடும் என தெரிவிக்கின்றன.

இ200 பறக்கும் டாக்சியின் சிறப்பு வசதிகள்:
இது ஓர் இரண்டு இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்சி ஆகும். 200 கிமீ வரை ஏற்றிச் செல்லும். இத்துடன், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை அது பயணிக்கும். அதேநேரத்தில், இந்த பறக்கும் டாக்சி ஹெலிகாப்டர்களை போல் செங்குத்தாக டேக்-ஆப் ஆகும்.

ஆகையால், விமானங்களுக்கு தேவைப்படுவதைப் போல் ஓடுதளம் இதற்கு தேவைப்படாது. இதன் பறக்கும் திறனுக்காக நான்கு ப்ரோபெல்லர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், இரண்டு செங்குத்தாக டேக்-ஆஃப் செய்யவும், மற்ற இரண்டு முன்னோக்கி பறக்கவும் உதவும்.

சார்ஜ் செய்வது எப்படி?
வழக்கமாக மின்வாகனங்களை எப்படி சார்ஜ் செய்வோமே அதே பாணியே இதற்கும் தேவைப்படுகின்றது. அதேநேரத்தில், ஃப்ளாஷ் சார்ஜிங் முறையிலும் பறக்கும் டாக்சியை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

எப்போது இ200 பறக்கும் டாக்சி தயாராகும்?
நிறுவனம் தெரிவித்திருப்பதன்படி, கார்கோவிற்கான சான்றிதழை 2022 டிசம்பருக்குள்ளாகவும், டாக்சி பயன்பாட்டிற்கான அறிமுகத்தை செப்டம்பர் 2024க்கு உள்ளாகவும் தயாராகிவிடும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், 2025ம் ஆண்டிற்குள் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் சான்றிதழைப் பெறுவதையும் தயாரிப்பு நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது இ200 பறக்கும் டாக்சி வடிவமைப்பின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆகையால், கூடிய விரைவில் இப்பறக்கும் டாக்சி வெகு விரைவில் சோதனையோட்ட பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், இபிளேன் நிறுவனம் மேலும் சில பறக்கும் வாகனங்களையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், இ6 மற்றும் இ50 ப்ரோட்டோடைப் ஆகிய பறக்கும் வாகனங்களையும் இ-பிளேன் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதில், இ6 என்பது காம்பேக்ட் ரக எலெக்ட்ரிக் பறக்கும் வாகனம் ஆகும். இதுவும் செங்குத்தாக தரையிறங்குதல் மற்றும் வானில் பறத்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்.

ஆறு கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை இது ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் ரேஞ்ஜ் திறன் 80 கிமீ ஆகும். இதைக்காட்டிலும் அதிக சூப்பரான எலெக்ட்ரிக் டாக்சியாக இ50 இருக்கின்றது. இதில் 50 கிலோ வரையிலான பொருட்களை ஏற்றி அனுப்ப முடியும்.

ஆனால், இதனை ப்ரோட்டோ-டைப்பிலேயே நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதன் வருகை 2023ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்தே இ200 பறக்கும் டாக்சியின் வருகையும் அமைய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








