Madhya Pradesh-இல் 20 வயது இளைஞர் உருவாக்கிய எலக்ட்ரிக் சைக்கிள் - மொத்தம் செலவான தொகை வெறும் இவ்வளவுதானா!!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெறும் ரூ.20,000 மதிப்பில் ஒரு எலக்ட்ரிக் பை-சைக்கிளை உருவாக்கி அசத்தி உள்ளார். யார் இந்த இளைஞர்? இவர் உருவாக்கியுள்ள தயாரிப்பு எந்த அளவிற்கு தரமானதாக உள்ளது? என்பது பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலம் சடர்புர் நகரத்தை சேர்ந்தவர் ஆதித்யா ஷிவ்ஹரே. 20 வயது மட்டுமே ஆன இவர் தனது சொந்த முயற்சியில் எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த எலக்ட்ரிக் சைக்கிளின் முக்கிய சிறப்பம்சமே இதனை உருவாக்க செலவிடப்பட்ட தொகை ஆகும். ஆம்... ஆதித்யா ஷிவ்ஹரே வெறும் ரூ.20 ஆயிரம் செலவில் இந்த எலக்ட்ரிக் சைக்கிளை உருவாக்கி உள்ளார்.

ஒருமுறை இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 30 கிமீ தொலைவிற்கு தாராளமாக பயணிக்கலாம் என கூறும் ஆதித்யா ஷிவ்ஹரே, இந்த சைக்கிளில் போதுமான எடையில் சுமைகளையும் எடுத்து செல்ல முடியும் என உறுதியாக கூறுகிறார். செயல்படுதிறனிலும், தொழிற்நுட்ப வசதிகளிலும் பல முன்னணி பிராண்ட்களின் தயாரிப்புகளுக்கு ஆதித்யா ஷிவ்ஹரேவின் இந்த எலக்ட்ரிக் சைக்கிள் எந்த விதத்திலும் சளைத்தது இல்லை என கூறப்படுகிறது.
ஆனால் இந்த எலக்ட்ரிக் சைக்கிளை இந்த இளைஞர் தேவையற்ற, பயன்படுத்த முடியாத பாகங்களில் இருந்து உருவாக்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆக்ஸலரேட்டர், பிரேக், விளக்குகள் மற்றும் ஹார்ன் என ஓர் சைக்கிளுக்கு தேவையான அனைத்து அடிப்படை அம்சங்களும் இதில் உள்ளன. அத்துடன், வரைப்படத்தை பார்த்து சைக்கிளை இயக்குவதற்கு உதவியாக, மொபைல் போனை தாங்கி பிடிக்கும் ஸ்டாண்ட் ஒன்றையும் ஹேண்டில்பாரில் இந்த நபர் பொருத்தியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் சடர்புர் நகரத்தில் இந்த எலக்ட்ரிக் சைக்கிளினால் பிரபலமாகி உள்ள ஆதித்யா ஷிவ்ஹரே கூறுகையில், "ஆயிரம் மற்றும் லட்ச ரூபாய்களில் விற்பனை செய்யப்படும் பைக்குகளை இன்றைய காலத்தில் ஏழை மக்களால் வாங்க இயலாது. இதனால் எனக்கு ஒரு யோசனை வந்தது. அதன் விளைவாக நான் உருவாக்கிய பை-சைக்கிளை எவரொருவரும் வாங்கலாம். சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டால், இந்த மாடலை மேலும் மேம்படுத்தலாம். இந்த இ-பைசைக்கிளின் பெயர் ஏ1 ஆகும்" என்றார்.
ஆதித்யா ஷிவ்ஹரே ஏற்கனவே தனது 16 வயதின்போது வேறொரு விஷயத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து பாராட்டுகளை பெற்றிருந்தார். சடாபுர் நகரத்தில் தன்னை பிரபலமாக்கிய இந்த விஷயம் குறித்து ஆதித்யா ஷிவ்ஹரே பேசுகையில், "16 வயதில் நான் வயர்கள் இல்லாமல் மின்னோட்ட சுற்றை உருவாக்கினேன் என்பதை கூற விரும்புகிறேன். இதனை மாநில அளவில் மட்டுமில்லாமல், பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டினார்.

தற்போது வரையில் எனது கற்றலுக்கு எனது வழிக்காட்டி எலக்ட்ரிக் பல்பை கண்டுப்பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார்" என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆதித்யா ஷிவ்ஹரேவின் தற்போதைய நோக்கம் என்னவென்றால், தனது கனவு வாகனமான இந்த ஏ1 எலக்ட்ரிக் சைக்கிளை மற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் விற்பனைக்கு கொண்டுவருவதாகும். இதற்கு அரசாங்கத்தின் உதவியை இவர் நாடியுள்ளார். அரசாங்கம் செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தேடி பார்த்தோமேயானால், நிச்சயம் ஒரு ஆதித்யா ஷிவ்ஹரே கிடைப்பார். அந்த அளவிற்கு நம் நாட்டு இளைஞர்களின் அறிவாற்றல் சிறப்பானதாக உள்ளது. அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அந்தந்த மாநில அரசாங்கங்கள் சில பல உதவிகளை செய்தாலே போதுமானது. தற்போது ஆதித்யா ஷிவ்ஹரே மத்திய பிரதேச மாநில அரசின் உதவியை நாடி இருப்பது போன்று.


Click it and Unblock the Notifications








