காருக்கு மாட்டு சாணி கோட்டிங்... டாக்டராக இருந்தும் இப்படியா - வடமாநிலத்தவர்களை இதில் மிஞ்ச முடியாது!!
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தனது காரை பாதுகாக்க மருத்துவர் ஒருவர் மாட்டு சாணியால் கோட்டிங் செய்துள்ளார். இந்த அளவிற்கு வழிய, வழிய மூளையை வைத்துள்ள அந்த மருத்துவர் யார்? இந்த மாட்டு சாணி கோட்டிங் குறித்து அவர் கூறுவது என்ன? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியர்களுக்கும் மாட்டு சாணிக்கும் இடையே ஓர் நெருங்கிய பிணைப்பு உள்ளதை கூறியே ஆக வேண்டும். குறிப்பாக, உத்திர பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலத்தவர்கள் தெருக்களில் திரியும் மாடுகளை விரட்டி, விரட்டி பிடித்து, அவற்றின் சிறுநீரை மடக், மடக் என குடித்த சம்பவங்கள் பலவற்றை இதற்குமுன் செய்திகளில் பார்த்துள்ளோம். அவர்கள் நினைத்திருப்பது போன்று மாட்டு சிறுநீரில் எந்தவொரு மருத்துவ பலன்களும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறிய பின்னரும், இவ்வாறான செயல்களை அவர்கள் நிறுத்திய பாடில்லை.

சரி, மாட்டு சிறுநீரை வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என்று பார்த்தால், மாட்டு சாணியையும் விட்டு வைப்பதில்லை. உடலில் இருந்து வெளிப்படும் சூட்டை குறைக்க, மாட்டு சாணியை உடல் முழுக்க பூசி கொள்வது, மேலும் தங்களது கார்களின் வெளிப்பக்கம் முழுவதிலும் மாட்டு சாணியை பூசுவது என குணப்படுத்தக்கூடிய மனநோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் புதியதாக இணைந்துள்ள ஹோமியோபதி மருத்துவர் ஒருவரை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க உள்ளோம்.
மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தை சேர்ந்தவரான இந்த மருத்துவரின் பெயர் சுஷில் சாகர் ஆகும். சாகர் மாவட்டத்தில் திலக்கஞ்ச் பகுதியில் வசிக்கும் சுஷில் சாகர் ஹோமியோபதி படிப்பை படித்திருந்தும் மாட்டு சாணி வெப்பத்தை தணிக்கக்கூடியது என்பதை ஆணித்தனமாக நம்புகிறார். இந்த விஷயம் நீண்ட நாட்களாக இவரது மண்டைக்குள் ஓடி கொண்டிருந்த நிலையில், தனது காருக்கு மாட்டு சாணி கோட்டிங்கை சமீபத்தில் கொடுத்துள்ளார்.

இவ்வாறு செய்வதால், காரினுள் வெயிலின் வெப்பம் இறங்குவது தடுக்கப்படும் என்பது சுஷில் சாகரின் நம்பிக்கை. ஆனால், சுஷில் சாகர் மாட்டு சாணியை வைத்து கடந்த சில மாதங்களாக ஆய்வு நடத்தியதாகவும், அதன் பின்பே இவ்வாறான செயலில் இறங்கியுள்ளதாகவும் அங்கிருந்தும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மருத்துவர் சாகர் அளித்த பேட்டியில், "கோடையில் காரின் மேல் உள்ள தாள் வெப்பத்தை ஈர்க்கிறது.
மற்றும் காருக்குள் வெப்பநிலையை அதிகரிக்கிறது. மாட்டு சாணம் பூசுவதால், காரின் உட்புற வெப்பநிலை உயராது. கோடை காலத்தில் காருக்குள் அமர்ந்திருக்கும் போது ஏற்படும் வெப்பம் இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது" என்றார். கோடை காலத்தில் ஏசி-ஐ ஆன் செய்தால், காரின் கேபின் குளிர்ச்சி ஆகுவதற்கு சில நிமிடங்களை எடுத்து கொள்ளும். அதுவரையில் கூட தாக்குப்பிடிக்க முடியாத காரணத்தாலேயே இந்த மருத்துவர் இவ்வாறு செய்துள்ளார்.

இவர் தனது காருக்கு கொடுத்திருக்கும் புதிய கோட்டிங்கில் மாட்டு சாணி மட்டுமே கலந்துள்ளது, வேறு எதுவும் இல்லை. வெப்பம் மட்டுமின்றி, மழைநீரில் இருந்தும் காரை இந்த கோட்டிங் பாதுகாக்கும் என கூறும் மருத்துவர் சுஷில் சாகர், இந்த கோட்டிங்கை 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். சாகர் மாவட்டத்தில் உள்ள குராய் சிவில் மருத்துவமனையில் கடந்த 2016இல் இருந்து மருத்துவராக சுஷில் சாகர் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கார், ஓர் மூடிய பரப்பு ஆகும். ஆதலால், மற்ற பொருட்களை காட்டிலும் காரினுள் சற்று அதிகமாகவே வெப்பம் இறங்குவது இயல்புதான். இதனை சமாளிக்கவே ஏசி வழங்கப்படுகிறது. இந்த ஏசி காற்று போதாது என நினைப்பவர்கள், காரின் ஏசி சிஸ்டத்தை பெரியது படுத்தலாம். அல்லது ஆஃப்டர் மார்க்கெட் ஏசி சிஸ்டத்தை வாங்கி பொருத்தலாம். அதை விடுத்து, இவ்வாறு மாட்டு சாணியை கார் முழுவதும் பூசி கொண்டு திரிவது சிரிப்பை தான் ஏற்படுத்துகிறது. மாட்டிற்கு பகுத்தறிவு இருந்தால், அதுவும் இதை பார்த்து சிரித்துவிடும்.


Click it and Unblock the Notifications









