தமிழகத்தில் இனி நடக்கப்போவது இதுதான்... சென்னை ஐகோர்ட் விடுத்த எச்சரிக்கையால் சீறும் போலீசார்...
சென்னை ஐகோர்ட் விடுத்த அதிரடி எச்சரிக்கையை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கையை கடுமையாக்கி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இங்கு சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. எனவே சாலை விபத்துக்கள் காரணமாக உலகிலேயே அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணம். குடிபோதையில் வாகனங்களை இயக்குவதும், செல்போனில் பேசி கொண்டே வாகனங்களை ஓட்டுவதும் இந்தியாவில் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. இவை வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து, சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன.

ஆனால் சாலை விபத்துக்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமராக்கள் மூலமும், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

இதன் மூலம் அவர்களது வீடுகளுக்கே அபராத ரசீது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வெளிநாடுகளை போல் அபராதம் மிக கடுமையாக இல்லாமல் இருந்ததும் கூட வாகன ஓட்டிகளுக்கு அலட்சியத்தை ஏற்படுத்தியது என சொல்லலாம். எனவேதான் தற்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை மிக கடுமையாக அதிகரிக்கப்படுகிறது.

இதனிடையே இந்தியாவில் வாகன ஓட்டிகள் செய்யும் மற்றொரு பொதுவான விதிமுறை மீறல் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குவதுதான். எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட, ஹெல்மெட் அணிவதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி.

ஆனால் இந்த உத்தரவு ஒரு சில நகரங்களில் மட்டும் ஏதோ பெயரளவிற்கு கடைபிடிக்கப்படுகிறது. எஞ்சிய நகரங்களில் இந்த உத்தரவை பெரும்பாலானோர் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வதில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரும், இதனை கண்டும், காணாமல் இருக்கும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த நிலைதான் உள்ளது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாய ஹெல்மெட் விதி தமிழகத்தில் முறையாக அமல்படுத்தப்படாததால் நீதிபதிகள் தங்களின் கடுமையான அதிருப்தியை தெரிவித்தனர். அத்துடன் சரமாரியாக பல்வேறு கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

எனவே டூவீலர்களில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் போலீசார் தற்போது இந்த விஷயத்தில் மிக தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் தமிழக தலைநகர் சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று (29ம் தேதி) நடந்த வாகன தணிக்கையில் மட்டும் ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 20 ஆயிரம் வழக்குகளை போக்குவரத்து போலீசார் அதிரடியாக பதிவு செய்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டியவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு எதிராக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து ஒரே நாளில் 20 லட்ச ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் 100 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகை வெகு விரைவில் 1,000 ரூபாயாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மீதான நடவடிக்கை வரும் நாட்களில் இன்னும் தீவிரப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் கூடுதல் கமிஷனர் (டிராபிக்) அருண் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த விஷயத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டாம் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''நாங்கள் வாகன தணிக்கை நடத்தினால், விதிமுறைகளை மீறியவர்களுக்கு ஆதரவாக பரிந்துரைகள் வரும்.

உயர் போலீஸ் அதிகாரிகள், ஊடகத்துறையினர் மற்றும் வக்கீல்கள் உள்ளிட்டோர்களிடம் இருந்து எங்களுக்கு செல்போன் மூலமாக இவ்வாறு அடிக்கடி பரிந்துரைகள் வரும். ஆனால் இனி நாங்கள் யாருக்கும் கருணை காட்டப்போவதில்லை. யாரிடம் இருந்து பரிந்துரைகள் வந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது'' என்றனர்.

முன்னதாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வழக்கு பதிவு செய்யாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனி வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








