மதுரைல ஏறி உக்காந்தா போதும்! கண்ணை மூடி தொறக்கறதுக்குள்ள பெங்களூர் போயிரலாம்! அதிர்ச்சியில் ஆம்னி பஸ் ஓனர்கள்!
இந்திய ரயில்வே துறையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (Vande Bharat Express Trains) பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மார்ச் 15ம் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் இயங்கி வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை 51 ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் படிப்படியாக அதிகரிக்கப்படவுள்ளது. ஏனெனில் பல்வேறு புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதில், மதுரை-பெங்களூர் (Madurai-Bangalore) வழித்தடமும் ஒன்றாகும். மதுரை-பெங்களூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படவுள்ளதாக கடந்த ஒரு சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சீறிப்பாயலாம். மதுரை-பெங்களூர் இடையே ஆரஞ்ச் கலர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை-பெங்களூர் இடையேயான தொலைவு 435 கிலோ மீட்டர்கள் ஆகும். தற்போதைய நிலையில் பெரும்பாலான ரயில்கள், மதுரையில் இருந்து பெங்களூரை அடைவதற்கு சுமார் 7.30 மணி நேரம் எடுத்து கொள்கின்றன.
ஆனால் இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலோ 6 மணி நேரம் அல்லது வெறும் 5.30 மணி நேரத்தில் மதுரையில் இருந்து பெங்களூர் சென்றடைந்து விடும் என கூறப்படுகிறது. மதுரை-பெங்களூர் இடையே இயக்கப்படவிருப்பது மினி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். அதாவது இந்த ரயிலில் 8 கோச்கள் மட்டுமே இருக்கும்.

தேவை ஏற்பட்டால், கோச்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்போது மொத்தம் 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிகவும் முக்கியமானவை.
அத்துடன் சென்னை சென்ட்ரல்-கோவை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா (ஆந்திர பிரதேச மாநிலம்), சென்னை எழும்பூர்-நெல்லை, கோவை-பெங்களூர் ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் மதுரை-பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கூடிய விரைவில் இணையவுள்ளது. இதை தொடர்ந்து பயணிகள் அதிகமாக எதிர்பார்க்கும் திருச்சி-பெங்களூர் (Trichy-Bangalore) இடையேயான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் தொடங்கப்படவுள்ளது. பெங்களூர் நகரில் பணியாற்றி வரும் தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா (Cauvery Delta) பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு இந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மதுரை-பெங்களூர் மற்றும் திருச்சி-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொதுமக்களுக்கு உடனடி தேவையாக உள்ளன. தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளை இந்தியாவின் ஐடி தலைநகருடன் இணைக்கும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், அறிமுகத்திற்கு பிறகு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பது எங்கள் கருத்து.
மதுரை-பெங்களூர் மற்றும் திருச்சி-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டால், அது ஆம்னி பஸ்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் நாங்கள் கருதுகிறோம். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மதுரை, திருச்சி மக்களுக்கு மட்டுமல்லாது, பெங்களூர் வரை இடையில் உள்ள பல்வேறு மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








