வெறும் 6 மணி நேரத்தில் மதுரை - பெங்களூரு பயணிக்கும் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்த திட்டம்!
மதுரையில் இருந்து பெங்களூரு வரை வந்தே பாரத் ரயிலை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தற்போது துவங்கி உள்ளது. விரைவில் மதுரை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் விற்கும் சென்னை எழும்பூரில் இருந்து ஈரோடு, திருப்பூர், வழியாக கோவைக்கும். சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி ,மதுரை வழியாக திருநெல்வேலிக்கும் தென்னக ரயில்வே சார்பில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தெற்கு மத்திய ரயில்வே சார்பில் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு திருப்பதி வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் தென்னக ரயில்வேக்கு அடுத்த புதிய வந்தே பாரத் ரயில் ஒன்றை ஒதுக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலும் தயாரித்து பயன்பாட்டிற்கு வரும்போது அது ஒவ்வொரு ரயில்வேக்கும் சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இப்படியாக அடுத்து தென்னக ரயில்வேக்கு ஒதுக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தமிழ்நாட்டிற்குள் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட இது இறுதியாகிவிட்ட நிலையில் தற்போது மதுரை-பெங்களூர் ரூட்டில் உள்ள தண்டவாளங்கள் மற்றும் பிற வசதிகளை வந்தே பாரத் ரயில் பயணிப்பதற்காக தகுந்தார் போல் மாற்றி அமைப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் ரயில்வே வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல் மூலம் நமக்கு மதுரை-பெங்களூரு வந்தே பாரத்தில் உறுதி செய்யப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. இந்த ரயில் பகல் நேர ரயிலாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்களில் 16 பெட்டிகள், 8 பெட்டிகள் என இரண்டு வெர்ஷன்கள் உள்ளன.
இதில் மதுரை-பெங்களூர் பகல் நேர வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பகல் நேர ரயில் என்பதால் பயணிகள் எண்ணிக்கை இரவு நேர ரயில் போல அதிகமாக இருக்காது என்பதால் குறைவான பெட்டிகளுடனேயே முதலில் துவங்கப்படும் பின்னர் தேவைக்கு ஏற்ப பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.

இந்த ரயில் மதுரையில் இருந்து கிளம்பி திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர், வழியாக பெங்களூர் வரை செல்கிறது. இதில் கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர், ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக வந்தே பாரத் ரயிலில் உள்ள அதை எக்ஸிக்யூடிவ் கிளாஸ் மற்றும் சேர் கிளாஸ் ஆகிய இரண்டு பெட்டிகள் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. வழக்கம் போல வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் கட்டணம் சாதாரண ரயில் டிக்கெட்டை விட அதிகமாக தான் இருக்கும். இருந்தாலும் தனியார் ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணத்தை விட நிச்சயம் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் பயணம் நேரத்தை பொருத்தவரை மதுரையிலிருந்து கிளம்பி பெங்களூரு செல்ல அதிகபட்சம் 6 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் அறிமுகமாகும் காலத்தில் சற்று அதிக நேரத்தை எடுத்துக் கொண்டாலும் நாட்கள் செல்ல செல்ல அதன் பயணம் நேரம் குறைக்கப்பட்டு 6 மணி நேரம் அல்லது 5:30 மணி நேரத்திற்கு குறைவான நேரமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு ரயில்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அதிக எண்ணிக்கையில் ரயில்கள் இருக்கின்றன. இந்நிலையில் இந்த பெங்களூரு ரயில் மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலர் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்த வாய்ப்புள்ளது


Click it and Unblock the Notifications









