30 ஆண்டுகளாக இவர் பஸ்ஸை இயக்கி வந்தது இந்த வழித்தடத்திலா!! மதுரை அரசு பஸ் டிரைவரின் கண்கலங்க வைக்கும் வீடியோ!
30 ஆண்டு காலமாக அரசு பேருந்தை இயக்கி வந்த ஓட்டுனர் தனது பணி நிறைவு நாளில் தான் இயக்கிவந்த அரசு பேருந்தை கட்டி தழுவி விடைப்பெற்று சென்றுள்ளார். மதுரையில் நடந்துள்ள இந்த கண் கலங்க வைக்கும் நிகழ்வு குறித்த வீடியோவை இனி பார்க்கலாம்.
நம் தமிழ்நாட்டில் அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றுவோரின் அதிகப்பட்ச வயது வரம்பு 60. அதாவது, 60 வயதை நிறைவு செய்தவர்கள் தங்களது உடல்நிலையை கருத்தில் கொண்டும், அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடும் நோக்கிலும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டியது அவசியமாகும். சில துறையை சார்ந்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்கு பின்னர் ஓய்வுத்தொகையை மாநில அரசாங்கம் வழங்குகிறது.

முதல்முறையாக வேலைக்கு சேரும் சமயத்தில் இறுதியில் ஓய்வுத்தொகை கிடைக்கும் என்பது சந்தோஷமான விஷயமாக தெரியலாம். ஆனால் ஓய்வு காலக்கட்டத்தை எட்டும் தருவாயில், ஓய்வுத்தொகை கூட வேண்டாம்... என்னை இன்னும் சில காலத்திற்கு பணி செய்ய அனுமதியுங்கள் என்பதே பல அரசு ஊழியர்களின் ஆசையாக மாறிவிடும். ஏனெனில், 20 - 30 ஆண்டுகளாக ஒரே வேலையை செய்யும்போது நம்மை அறியாமலேயே அந்த வேலைக்கு நம்மை முழுமையாக அர்பணித்துவிடுவோம்.
ஆதலால், ஓய்வு காலத்தில் இந்த வேலையை செய்யாமல் எப்படி காலத்தை கடத்துவது என்கிற பயம் தலைத்தூக்க ஆரம்பித்துவிடும். இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அந்த வேலையில் இருந்து ஓய்வு பெற்றுத்தானே ஆக வேண்டும், அதுதானே காலத்தின் கட்டாயம். அந்த வகையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் அரசு பேருந்து ஓட்டுனர், தான் 30 ஆண்டு காலமாக இயக்கி வந்த அரசு பேருந்தை கட்டி தழுவி பிரியா விடைப்பெற்று சென்றுள்ளார்.

பார்ப்போரின் நெஞ்சை கரைய வைக்கக்கூடிய இந்த நிகழ்வை வேறொருவர் தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது. ஓய்வு பெற்றுள்ள இந்த அரசு பேருந்து ஓட்டுனரின் பெயர் முத்துப்பாண்டி ஆகும். பைக்காரா என்ற பகுதியை சேர்ந்தவரான இவர் மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
தான் ஓய்வு பெறும் நாளிலும் கடைசியாக ஒருமுறை பொதுமக்களை ஏற்றி கொண்டு பேருந்தை இயக்கிய முத்துப்பாண்டி கடைசியாக பேருந்தை டிப்போவில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு வணங்கி முத்தமிட்டு, கட்டி தழுவி கண்ணீர் ததும்ப, தன் வாழ்வில் பெற்ற திருமணம், சமூகத்தில் மதிப்பு, கிடைத்த பயன்களை பேருந்திடம் எடுத்துக்கூறி, பணி ஓய்வு பெறுவதாக அதனிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் மீண்டும் ஒருமுறை பேருந்துக்குள் ஏறிய அவர் தான் 30 ஆண்டுகளாக அமர்ந்துவந்த இருக்கை, பிடித்துவந்த ஸ்டேரிங் சக்கரத்திற்கும் தனது முத்தத்தை கொடுத்துவிட்டு பேருந்தில் இருந்து கீழிறங்கினார். அதன்பின், சக ஊழியர்களிடமும் தனது நன்றியை தெரிவித்த முத்துப்பாண்டி திருப்பரங்குன்றம் - மகாலட்சுமி காலனி செல்லும் வழித்தட எண் 31-ஏ கொண்ட அரசு பேருந்தை இயக்கி வந்தார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எல்லாருக்கும் அவர்களது வேலையின் மீது காதல் இருக்கும். அவ்வாறான காதல் இருப்பதுப்போல் உணரவில்லை என்றால், நீங்கள் இப்போதுதான் அந்த பணியை செய்ய துவங்கியுள்ளீர்கள் என்று அர்த்தம். முத்துப்பாண்டி போல் ஓய்வு பெறும் காலத்தை எட்டும்போது உங்களை அறியாமலேயே குறைந்தது ஒரு சொட்டு கண்ணீரை ஆவது சிந்துவீர்கள்.


Click it and Unblock the Notifications









