தேதி அறிவிச்சாச்சு! மதுரையில் மெட்ரோ பணிகள் எப்பொழுது துவங்குகிறது தெரியுமா?
மதுரை மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கை வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதல் கிடைத்த பின்பு பணிகள் துவங்கப்படும் என தெரியவந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் பின்பு உடனடியாக இந்தத் திட்டத்திற்கான குழு அமைக்கப்பட்டு இந்த திட்டத்தை செயல்முறைப்படுத்தும் பணிகள் ஜரூராக துவங்கியது.

மதுரை மெட்ரோ ரயில் திட்டக்குழுவில் உள்ள அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தினர். அதன்படி முதல் கட்டமாக மதுரை திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் பாதையை அமைக்க முடிவு செய்தனர். இதற்கான மண் பரிசோதனையும் ஆங்காங்கே வேகமாக நடந்து வந்தது.
மேலும் மெட்ரோ ரயில் பாதைகளை அமையும் வழியில் உள்ள இடங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருமங்கலத்தில் இருந்து தோப்பூர் வழியாக திருப்பரங்குன்றம் பழங்காநத்தம் மீனாட்சி அம்மன் கோவில் கோரிப்பாளையம் தல்லாகுளம் மாட்டுத்தாவணி வழியாக ஒத்தக்கடை வரை இந்த மெட்ரோ ரயில் பாதையை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கான நடைமுறை சிக்கல்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டு முழுமையான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. தற்போது 90 சதவீதமான திட்டங்கள் தயாராகிவிட்டதாகவும் வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதிக்குள் முழுமையான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் மதுரை மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
இதற்காக சமீபத்தில் திட்ட இயக்குனர் அர்ஜுனன், திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவின் முதன்மை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மதுரை திருமங்கலம், தோப்பூர், மதுரை ரயில்வே ஸ்டேஷன், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிய பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகளை நடத்தினர்.

அப்பொழுது அவர்கள் கூறும் போது தற்போது உள்ள திட்டத்தின் படி மதுரை வசந்த நகர் முதல் தல்லாகுளம் வரை பாதாள சுரங்கம் அமைக்கப்பட்டு மெட்ரோ பாதை அமைக்கப்படும் என தெரிவித்தனர். இந்த மெட்ரோ பாதை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கீழே செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழங்கால கட்டிடங்கள் பாதிப்படையாத வகையில் இந்த கட்டுமான பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் மீனாட்சி அம்மன் கோவில் மாசி வீதிகளில் ஒரு மெட்ரோ ஸ்டேஷன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ஸ்டேஷன் கோவிலில் சித்திர திருவிழாவின் போது தேர் திருவிழா நடக்கும் போது எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டமிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் பாதாள மெட்ரோ பாதையில் குறுக்கே வைகை ஆறு இருப்பதால் அந்தப் பகுதியில் இருந்து தல்லாகுளம் பகுதி வரை ஒரு டணல் மற்றும் வசந்த நகர் பகுதியில் இருந்து வைகை ஆற்றங்கரை வரை ஒரு டணல் என இரண்டு டணல்களாக கட்டமைக்கப்படுகின்றது. இதில் வைகை ஆறு முதல் தல்லாகுளம் வரையிலான டணல் கட்டமைக்கப்பட அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது.
இது போக மெட்ரோ ரயில்களை பராமரிப்பு செய்ய தோப்பூர் பகுதியில் ஒரு பராமரிப்பு மையத்தை உருவாக்க உருவாக்க முடிவு செய்துள்ளனர். வரும் ஜூலை மாதம் திட்ட இயக்குனர் சொன்னது படி தமிழக அரசிடம் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்த திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் இது குறித்து தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்.
தமிழக அரசு ஒப்புதலுக்குப் பிறகு இந்த திட்டம் குறித்த தகவல் மத்திய அரசுக்கும், மதுரை மாநகராட்சிக்கும் அனுப்பி வைக்கப்படும்.மத்திய அரசும், மதுரை மாநகராட்சியும் ஒப்புதல் வழங்கிய பின்பு இந்தத் திட்டத்திற்கான பணிகள் துவங்கும். முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி தான் துவங்கும். நிலம் கையகப்படுத்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்த பின்பு அடுத்த கட்டமாக பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளை அமைக்கும் பணிகளை துவங்குவார்கள்.
தற்போது உள்ள திட்டத்தின் படி பணிகள் சீராக நடந்தால் வரும் 2027 ஆம் ஆண்டிற்குள் மதுரையில் மெட்ரோ செயல்பாட்டிற்கு வந்து விடும். இது வெறும் முதற்கட்ட பணி தான். இரண்டாம் கட்டமாக விமான நிலையம் முதல் கட்டுபுலிநகர் வரையிலும் மணலூர் முதல் நாகமலை புதுக்கோட்டை வரையிலும் ரயில் பாதைகளை அமைக்க திட்டம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகம் மிக வேகமாக மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதே வேகத்தில் சென்றால் மிக சீக்கிரமாக தமிழகத்தில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் வசதி கொண்ட நகரங்கள் விரைவிலேயே உருவாகும்.


Click it and Unblock the Notifications









