இந்தியால இப்படி ஒரு சொகுசு ரயிலா! இதுல போறதுக்கு பதிலா வீடு வாங்கீரலாம்! தூக்கி வாரிப்போடும் டிக்கெட் கட்டணம்!
நாம் அனைவரும் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது ரயில்களில் பயணம் செய்திருப்போம். பிளாட்பார்ம்களில் நிலவும் குழப்பம், காலதாமதம், அதிகப்படியான சத்தம் மற்றும் கூட்டம் என ரயில் பயணங்களில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. ஆனாலும் பஸ் மற்றும் விமானங்களை விட, ரயிலுக்குதான் பலர் முன்னுரிமை வழங்குகின்றனர்.
டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவு என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். ஆனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வகையில், மிகவும் அதிக கட்டணம் வசூல் செய்யும் ரயில்களும் இந்திய தண்டவாளங்களில் ஓடி கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு சொகுசு ரயிலை பற்றிதான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் (Maharajas Express) ரயிலை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம்.

ஐஆர்சிடிசி என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்தான் (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation), மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வருகிறது. இது உலகின் முன்னணி சொகுசு ரயில்களில் ஒன்றாகும். இந்தியாவில் இப்படி ஒரு ரயிலா? என அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மிகவும் சொகுசாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை நீங்கள் சுற்றி பார்க்க முடியும். மொத்தம் 4 வழித்தடங்களில் மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த பயணங்களுக்கு, தி இந்தியன் பனோரமா (The Indian Panaroma), தி இந்தியன் ஸ்பிளெண்டர் (The Indian Splendour), தி ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா (The Heritage of India) மற்றும் ட்ரசர்ஸ் ஆஃப் இந்தியா (Treasures of India) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த 4 பயணங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதில், ட்ரசர்ஸ் ஆஃப் இந்தியா பயணம் மட்டும் 4 பகல்கள்/3 இரவுகளை கொண்டதாகும். மற்ற 3 பயணங்களும் 7 பகல்/6 இரவுகளை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இன்ஸ்டாகிராம் (Instagram) பயனர் ஒருவர், மஹாராஜாஸ் எக்ஸ்பிரல் ரயில் எப்படி இருக்கும்? என்பதை ஒரு வீடியோ மூலம் நம் அனைவருக்கும் காட்டியுள்ளார். இந்த வீடியோவை பல ஆயிரக்கணக்கானோர் 'லைக்' செய்துள்ளனர்.
இந்த வீடியோவில் காட்டப்பட்டிருப்பது மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் 'பிரசிடெண்டியல் சூட்' (Presidential Suite) ஆகும். இதன் அறை கதவை ஒருவர் திறப்பதுடன், இந்த வீடியோ தொடங்குகிறது. கதவை திறந்தவுடன் இது ரயிலா? அல்லது ஆடம்பர மாளிகையா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. ஹால், உணவு அருந்தும் இடம், 2 மாஸ்டர் பெட்ரூம்கள், ஷவர் உடன் பாத்ரூம் என இந்த வீடியோவை பார்க்க பார்க்க நமக்கு ஆச்சரியம் மேலோங்குகிறது.
இதற்கான கட்டணம் 19 லட்ச ரூபாய்க்கும் மேல் என இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. துல்லியமாக சொல்வதென்றால், 19,90,800 ரூபாய் + GST என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கட்டணமா? என நீங்கள் ஆச்சரியத்துடன், சந்தேகமும் அடையலாம். ஆனால் இது உண்மைதான். மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கூட 'பிரசிடெண்டியல் சூட்' கட்டணமாக 19,90,800 ரூபாய்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 சீசனுக்கான கட்டணம் ஆகும்.
அத்துடன் இது தி இந்தியன் ஸ்பிளெண்டர், தி ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா மற்றும் தி இந்தியன் பனோரமா ஆகிய பயணங்களுக்கான 'பிரசிடெண்டியல் சூட்' கட்டணம் ஆகும். எனவே இந்த பயணங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால், ஜிஎஸ்டி உடன் சேர்த்து, 20 லட்ச ரூபாய்க்கும் மேல் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். அதே நேரத்தில் ட்ரெசர்ஸ் ஆஃப் இந்தியா பயணத்திற்கான 'பிரசிடெண்டியல் சூட்' கட்டணம் 10,83,600 ரூபாய் என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கும் ஜிஎஸ்டி உண்டு.
எனினும் மினி பார், பெரிய பனரோமிக் விண்டோக்கள், ஏசி, வை-ஃபை மற்றும் லைவ் டீவி என இந்த ரயிலில் ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் வைரல் வீடியோ (Viral Video) தற்போது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. ''இந்த ரயிலில் பயணிப்பதற்கு பதிலாக, சொத்து எதையாவது வாங்கி விடுவேன்'' என நெட்டிசன் ஒருவர் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளார். உண்மைதான். சுமார் 20 லட்ச ரூபாய் இருந்தால், வீடு, நிலம் என ஏதாவது சொத்துக்களை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








