உத்தர பிரதேசத்துக்கு அடுத்துதான் தமிழ்நாடு இந்த விஷயத்திலும்! கார் கம்பெனிகளின் டார்க்கெட் மொத்தமும் அங்க தான்
உலகளவில் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கிலான கார்கள் இந்தியாவில் மக்களால் வாங்கப்படுகின்றன. கார்கள் மட்டுமின்றி, பயணிகளை அழைத்து செல்லும் வாகனங்களின் விற்பனையும் நம் நாட்டில் சிறப்பாக உள்ளது. இவ்வாறான வாகனங்களை பயணிகள் வாகனங்கள் என அழைக்கின்றனர். இந்த பயணிகள் வாகனங்கள், கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட இந்திய மாநிலங்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.
இந்த விபரங்களை வெளியிட்டு இருப்பது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) ஆகும். மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் தான் வாகன விற்பனையும் சிறப்பாக இருக்கும் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. இந்த விஷயத்தில்தான் மஹாராஷ்டிரா (Maharashtra) மற்றும் உத்தர பிரதேசம் (Uttar Pradesh) மாநிலங்கள் அதிக மக்கள் தொகை மூலமாக முன்னிலை வகிக்கின்றன.

குறிப்பாக, மஹாராஷ்டிரா ஆனது மும்பை, தானே, புனே, நாக்பூர் என இந்திய அளவில் பிரபலமான நகரங்கள் பலவற்றை கொண்டிருப்பதன் மூலம் வாகனங்கள் விற்பனையில் ஜொலிக்கிறது. 2024 ஏப்ரலில் இருந்து 2025 மார்ச் வரையில் மஹாராஷ்டிராவில் மட்டும் சுமார் 5 லட்சத்து 6 ஆயிரத்து 254 பயணிகள் வாகனங்கள் மக்களால் வாங்கப்பட்டு உள்ளன.
இதில், மஹாராஷ்டிராவில் விற்கப்பட்ட கார்கள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்லும் வேன்களின் எண்ணிக்கை மட்டுமே அடங்குகின்றன. 2-வீலர்/3-வீலர்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களை எல்லாம் சேர்த்தால் எண்ணிக்கை எங்கேயோ போகும். இந்தியாவில் கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிராவில் விற்பனை செய்யப்பட்டவை மட்டும் 11.8% ஆகும்.

அதாவது, இந்தியாவில் விற்பனையாகும் 10இல் ஒரு பயணிகள் வாகனம் நிச்சயமாக மஹாராஷ்டிராவில் விற்பனை ஆகிறது. மஹாராஷ்டிராவை போல், இந்திய மார்க்கெட்டில் 10 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தை கொண்டிருக்கும் உத்தர பிரதேசம் இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 530 பயணிகள் வாகனங்கள் உத்தர பிரதேசத்தில் ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குஜராத் (Gujarat) இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. மேற்கூறப்பட்ட ஒரு வருடத்தில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 54 பயணிகள் வாகனங்கள் குஜராத்தில் மக்களால் வாங்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த இந்திய எண்ணிக்கையில் 8.2% ஆகும். கர்நாடகா 3,09,464 பயணிகள் வாகனங்கள் விற்பனை உடன் 4வது இடத்திலும், ஹரியானா 2,94,331 பயணிகள் வாகனங்கள் விற்பனை உடன் 5வது இடத்திலும் உள்ளன.

இருசக்கர வாகனங்களின் விற்பனையை பொறுத்தவரையில், மஹாராஷ்டிராவை முந்தி உத்தர பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் உத்தர பிரதேசத்தில் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 43 ஆயிரத்து 410 ஆகும். இது கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த 2-வீலர்கள் விற்பனையில் 14.5% ஆகும்.
2வது இடத்தில் நாம் எதிர்பார்த்ததை போல் மஹாராஷ்டிரா மாநிலம் 20 லட்சத்து 91 ஆயிரத்து 250 2-வீலர்கள் விற்பனை உடன் உள்ளது. 3வது இடத்தில் எந்த மாநிலம் உள்ளது தெரியுமா? நம் தமிழ்நாடு ஆகும். 2024-25ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் 14 லட்சத்து 81 ஆயிரத்து 511 இருசக்கர வாகனங்கள் மக்களால் வாங்கப்பட்டுள்ளன. பயணிகள் வாகனங்கள் விற்பனையில் மட்டுமின்றி, 2-வீலர்கள் விற்பனையிலும் கர்நாடகா மாநிலம் 4வது இடத்தை பிடித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பயணிகள் வாகனங்கள் விற்பனையில் தமிழ்நாடு சற்று பின்தங்கி இருப்பினும், 2-வீலர்கள் விற்பனையில் இந்திய அளவில் 3வது இடத்தை பிடித்திருப்பது ஆச்சிரியம் கலந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் இருந்து, தமிழ்நாட்டில் 2-வீலர்கள் விற்பனை தான் அதிகமாக உள்ளதை அறிய முடிகிறது. கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் முதல் இரு இடங்களை மஹாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் பிடித்திருக்க, தமிழ்நாடு 4வது இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications









