பெட்ரோல், டீசல் கார் ஓனர்களுக்கு தலையில் இடியை இறக்கும் அரசு... மொத்தமா தடைக்கு பிளான் போடுறாங்க!
மஹாராஷ்டிரா (Maharashtra) மாநில அரசு, மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) பயன்படுத்துவதை அதிகரிக்கும் முயற்சியாக ஓர் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அதற்கான வேலைகளில் ஏற்கனவே இறங்கிவிட்டது. இதன் விளைவாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்கள் ஓரங்கட்டப்படும் சூழல் உருவாகி உள்ளது. மஹாராஷ்டிராவில் அப்படி என்ன நடக்க போகிறது. வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியா உள்பட உலகம் மொத்தமுமே எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை தான் சார்ந்து இருக்க போகின்றன என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனாலேயே எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுப்பட்டு வருகிறது. இதன் விளைவாக எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

அதேபோல், அந்தந்த மாநில அரசாங்கங்களும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதிலும், மக்கள் அவற்றை பயன்படுத்த ஊக்குவிப்பதிலும் தீவிரமாக உள்ளன. இருப்பினும், ஒரு சிலர் இப்போதும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுவதை பார்க்க முடிகிறது. அரசாங்கங்களின் மானியங்களினால் எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் குறைவாக இருந்தாலும், அவற்றை விரைவாக சார்ஜ் செய்யும் வசதி இன்னும் நாடு முழுவதும் விரிவடையவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், மும்பையில் முற்றிலுமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பதை பற்றி மஹாராஷ்டிரா மாநில அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், இதற்காக 7 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள மஹாராஷ்டிரா அரசு, அதற்கான வாய்ப்புகளை பற்றி அறிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லியை போன்று மும்பையிலும் காற்று மாசுவின் நிலைமை மோசமாகிவிட கூடாது என்பதற்காக இவ்வாறான நடவடிக்கையை மஹாராஷ்டிரா அரசு கொண்டுவருவதாக கூறப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதிர் குமார் ஸ்ரீவஸ்தாவா அவர்கள் தலைமை தாங்குகிறார்.

இவரது தலைமையிலான குழு ஆய்வு நடத்தி இன்னும் 3 மாதங்களில் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என மஹாராஷ்டிரா மாநில அரசு ஆணையிட்டுள்ளது. மும்பையின் இணை போலீஸ் கமிஷ்னர், மஹாநகர் கேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் உள்பட பல முக்கியமான நிர்வாகிகள் இந்த 7 பேர் கொண்ட குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
மேலும், ஆட்டோமொபைல் சார்ந்தவர்களும் இந்த குழுவில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். அவர்கள் பெறும் கருத்துகளையும் 7 பேர் கொண்ட குழுவினர் கருத்தில் எடுத்துக் கொள்வர். மும்பை மாநகராட்சியின் கீழ் உள்ள தானே, ராய்கட் மற்றும் பல்கர் மாவட்டங்களிலும் இந்த ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது நல்ல விஷயம் தான். ஆனால், அதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களை முற்றிலுமாக பயன்படுத்தவே கூடாது என தடை விதிப்பது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. இதற்கு பதிலாக, இனி யாரும் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்க முடியாத படி அவற்றின் விற்பனைக்கு வேண்டுமாயின் தடை விதிக்கலாம்.


Click it and Unblock the Notifications








