தகர டப்பா பஸ்கள் எல்லாத்தையும் ஒன்னு விடாம அழிக்க முதல்வர் உத்தரவு! இன்னொரு சந்தோஷமான விஷயமும் நடக்க போகுது!
உலகில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் தலைநகரான டெல்லியே (Delhi) மிக கடுமையான காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி மூச்சு திணறி வருகிறது. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள்தான் மிகவும் முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக பழைய வாகனங்கள். எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க வேண்டும் என்றால், பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் அரசாங்கமே பழைய வாகனங்களை தொடர்ச்சியாக இயக்கி கொண்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்படும் பஸ்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அரசு பஸ்களுடன் சேர்த்து, அரசு அதிகாரிகளின் பயன்பாட்டில் உள்ள ஏராளமான வாகனங்களும் கூட, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில்தான் உள்ளன.

அந்த வாகனங்களை எல்லாம் பயன்பாட்டில் இருந்து அகற்ற தற்போது மஹாராஷ்டிரா மாநில அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல் அமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) சமீபத்தில் பொறுப்பேற்றார். இதை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை அவர் பிறப்பித்துள்ளார். இதன்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில் 15 வயதை கடந்த பஸ்களை 'ஸ்கிராப்' செய்வதற்கு, அதாவது அழிப்பதற்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் 13 ஆயிரம் பழைய அரசு வாகனங்களை, சேவையில் இருந்து அகற்றவும் அவர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதவிர பழைய வாகனங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட பிறகு, எஞ்சிய பஸ்களை, எல்என்ஜி (LNG) மற்றும் சிஎன்ஜி (CNG) மூலமாக இயங்கும் வகையில் மாற்றுவதற்கும், மஹாராஷ்டிரா மாநில முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவிற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏனெனில் இந்த நடவடிக்கைகள் அனைத்துமே, மஹாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவி செய்யும். குறிப்பாக பஸ்களை எல்என்ஜி மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் மாற்றுவதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் உமிழ்வு குறைவதுடன், பஸ்களை இயக்குவதற்கான செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது பஸ்களின் எரிபொருள் செலவிற்காக அரசாங்கம் செலவிடும் தொகை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது நடக்கும்பட்சத்தில் மறுபக்கம் பஸ்களை இயக்குவதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் லாபம் தானாகவே உயர்ந்து விடும். எனவே முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் உத்தரவிற்கு நல்ல பலன் கிடைக்கும் என அம்மாநில அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹாராஷ்டிரா மாநில முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் தற்போதைய உத்தரவு உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் இதை வெறுமனே உத்தரவுடன் நிறுத்தி விடாமல், உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்தாக உள்ளது.
அத்துடன் மற்ற மாநிலங்களும் இதே வழியை பின்பற்றி, சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை குறைக்க முயல வேண்டும். முன்னதாக தமிழகத்திலும் தற்போது சிஎன்ஜி மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கணிசமான தொகையை தமிழக போக்குவரத்து துறை சேமிக்க தொடங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே எதிர்காலத்தில் மேற்கொண்டு நிறைய பஸ்களை சிஎன்ஜி மூலம் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








