குஜராத்துக்கு போக போறதா யாருங்க சொன்னா?... பிரபல கார் நிறுவனம் இந்த விஷயத்தில் தெளிவா இருக்கு!!
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். நீண்ட வருடங்களாக செயல்பட்டுவரும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் என்று பார்த்தால், நிச்சயமாக அதில் மஹிந்திரா நிறுவனத்திற்கும் ஒரு இடம் இருக்கும். ஆரம்பத்தில் டிராக்டர்கள் விற்பனையில் ஈடுப்பட்டுவந்த இந்த நிறுவனம், தற்போது கார்கள் விற்பனையிலும் முன்னணியில் உள்ளது. இத்தகைய மஹிந்திரா நிறுவனம் மஹாராஷ்டிராவில் உள்ள அதன் உற்பத்தி தொழிற்சாலையை காலி செய்ய உள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளிவந்தது. இந்த நிலையில், அதற்கு மஹிந்திரா நிறுவனம் தனது பதிலை தெரிவித்துள்ளது.
நம் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிபூண்டி உள்ளிட்ட தொழில் வளாகங்களை போன்று, மஹாராஷ்டிராவில் உள்ள மிக பெரும் தொழில் வளாகம் சாகான் ஆகும். புனேவுக்கு அருகே அமைந்துள்ள சாகான் பகுதியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்டுள்ளன. அவற்றுள் மஹிந்திரா & மஹிந்திராவும் ஒன்றாகும்.

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றுள், வாகனங்களை உற்பத்தி செய்யும் மஹிந்திரா நிறுவனமும் ஒன்றாகும். புனேவின் சாகானில் பரந்து விரிந்த தொழிற்சாலை உடன் மார்க்கெட்டில் மஹிந்திரா வலுவாக காலூன்றி உள்ளது. இந்த நிலையில், புனேவில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு மஹிந்திராவின் வாகன உற்பத்தி தொழிற்சாலை இடம் மாற உள்ளதாக கடந்த சில வாரங்களாக ஒரு செய்தி உலா வந்துக் கொண்டிருக்கிறது.
இது நம்பும் அளவிற்கு இல்லை என ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம். அதன்படி, வாகன உற்பத்தி தொழிற்சாலையை புனேவின் சாகானில் இருந்து இடம் மாற்றும் எந்த திட்டமும் இல்லை என மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டுளது. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலில், இது முற்றிலும் தவறானது மற்றும் இதை நம்ப வேண்டாம் என மஹிந்திரா தெரிவித்துள்ளதாம்.

புனேவின் சாகானில் இருந்து உற்பத்தி தொழிற்சாலையை இடம் மாற்றும் எந்தவொரு திட்டமும் தங்களிடத்தில் இல்லை என மஹிந்திரா தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எங்களுக்கு அவ்வாறான எந்த அறிக்கையும் மஹிந்திராவில் இருந்து கிடைக்க பெறவில்லை.
புனேவில் உள்ள மஹிந்திராவின் தொழிற்சாலை ஆனது வருடத்திற்கு 3 லட்ச வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு திறன் கொண்டதாக உள்ளது. இந்த 3 லட்ச வாகனங்களில் 50,000 கனரக லாரிகள் அடங்குகின்றன. 700 ஏக்கர்களுக்கும் அதிகமான பரப்பளவில் இந்த தொழிற்சாலை பரந்து விரிந்துள்ளது. குஜராத்தில் மட்டுமின்றி, மஹாராஷ்டிராவிலும் புதிய உற்பத்தி தொழிற்சாலைக்கான இடம் பார்க்கும் வேலைகளில் மஹிந்திரா ஈடுப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் நமக்கு தகவல்கள் கிடைத்தன. ஆனால், இதுவும் வதந்தியே ஆகும்.

புனேவில் தற்போது இருக்கும் தொழிற்சாலையை விரிவுப்படுத்துவதில் தான் மஹிந்திரா ஆர்வமாக உள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்களுக்கு ஏற்ப தொழிற்சாலையை பெரிதுப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. மஹிந்திராவில் இருந்து தற்போதைக்கு எக்ஸ்யூவி400 என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வரும் ஆண்டுகளில் புதியதாக அறிமுகம் செய்ய பல்வேறு எலக்ட்ரிக் கார்களை மஹிந்திரா பிளான் செய்து வைத்துள்ளது.
மஹாராஷ்டிராவில் புனேவில் மட்டுமின்றி, நாஷிக் என்கிற பகுதியிலும் மஹிந்திராவுக்கு சொந்தமான வாகன உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இவை இரண்டிலும் சேர்த்து அதிகப்பட்சமாக ஒரு வருடத்திற்கு 8 லட்சம் வாகனங்களை மஹிந்திரா உற்பத்தி செய்கிறது. மஹாராஷ்டிராவில் தற்போது இருக்கும் தொழிற்சாலைகளை சுற்றி தான் புதியதாக நிலம் வாங்க மஹிந்திரா யோசித்து வருகிறதே தவிர்த்து, வேறு மாநிலத்திற்கு செல்லும் ஐடியாவில் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் சமீபத்திய தார் ராக்ஸ் வாகனத்திற்கு 1.76 லட்ச புக்கிங்குகள் உடன் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக சமீபத்தில் பார்த்திருந்தோம். இந்த நிலையில், வதந்திக்கு மஹிந்திரா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஃபோர்டு வைத்திருந்த வாகன உற்பத்தி தொழிற்சாலையை வாங்குவதற்கு மஹிந்திரா ஆர்வம் காட்டியது. ஆனால், அது கடைசியில் டாடா மோட்டார்ஸின் கைக்கு சென்றுவிட்டது.


Click it and Unblock the Notifications









