இந்திய மாணவர்கள் இத்தன பேர் வெளிநாட்ல மருத்துவம் படிக்குறாங்களா? துடிதுடித்து போன தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா!
இந்திய மாணவர்களுக்காக இந்தியாவில் மருத்து கல்லூரியை தொடங்கும் திட்டத்தில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் தொழிலதிபராக ஆனந்த் மஹிந்திரா (Mahindra) இருக்கின்றார். குறிப்பாக, டுவிட்டரில் அவர் மிகவும் துடிப்பான நபராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பதிவு ஒன்றை மேற்கோள் காட்டி, அவர் ஓர் டுவீட்டை செய்திருக்கின்றார்.

இந்த டுவீட்டின் வாயிலாக, மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் மிக விரைவில் மருத்துவ படிப்பிற்கான நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கான பணியில் களமிறங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன்-ரஷ்யா போரே காரணமாக இருக்கின்றது. இது காரணமா! எப்படி? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த போரின் காரணத்தால் பல்வேறு தகவல்கள் நமக்கு தெரிய வந்திருக்கின்றன. அந்தவகையில், வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் எத்தனை பேர் கல்விக்காக பயணம் செய்திருக்கின்றனர் என்பது பற்றிய தகவலும் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

பலர் மருத்துவ படிப்பிற்காகவே அதிகளவில் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புள்ளி விபரங்களையே சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அது வெளியிட்டிருக்கும் தகவலின்படி, அதிகபட்சமாக இந்திய மாணவர்கள் 23 ஆயிரம் பேர் சீனாவிலும், உக்ரைனில் 18 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 16,500 பேரும், பிலிப்பைன்ஸில் 15 ஆயிரம் பேரும் மருத்துவ படிப்பிற்காக பயணித்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இங்கு மட்டுமின்றி ஜார்ஜியா, கிர்கிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கும் மருத்துவ படிப்பிற்காக இந்திய மாணவர்கள் சென்றிருக்கின்றனர். இவ்வாறு லட்சக் கணக்கில் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்காக பயணித்திருப்பது ஆனந்த் மஹிந்திராவை ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. இதுவே அவரை டுவிட்டரில் பதிவிடவும் தள்ளியிருக்கின்றது.

"இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த அளவு பற்றாக்குறை இருக்கிறதா. நம்முடைய மஹிந்திரா யுனிவர்சிட்டி வளாகத்தில் ஓர் புதிய மருத்துவ படிப்பிற்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான யோசனையை ஆராய முடியுமா?" என நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவரை டேக் செய்து அவர் பதிவு போட்டிருக்கின்றார்.

ஆகையால், மஹிந்திரா யுனிவர்சிட்டியில் மிக விரைவில் ஓர் புதிய மருத்துவ படிப்பிற்கான அலகு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவிற்கு டுவிட்டர் பயனர்கள் பலர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்ற இந்த மாதிரியான வேலையில் இந்த டுவீட் வேகமாக வைரலாகத் தொடங்கியிருக்கின்றது.

ஒரு சிலர் இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான கட்டமைப்புகள் குறைவு என்று குறை கூறி வருகின்றனர். அதேவேலையில், மறு புறம் நீட் தேர்வே இந்திய மாணவர்களின் இந்த நிலைமைக்கு காரணம் ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எச்டி குமாராசாமி, உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்ததற்கு காரணம் நீட் தேர்வே காரணம் என குற்றம் சாட்டினார்.

பன்னிரண்டாம் வகுப்பில் மிக சிறப்பான மதிப்பைப் பெற்ற நவீனுக்கு இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைக்கவில்லை. இதற்கு தடைக் கல்லாக இருந்தது நீட் தேர்வு. இந்தியாவின் பெரும்பாலான மாணவர்களின் மருத்துவ கனவை இதுவே சிதைத்திருக்கின்றது என மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தகுதியான இந்திய மாணவர்களின் மருத்துவ படிப்பை நனவாக்கும் வகையில் ஓர் மருத்துவ படிப்பு கல்லூரியை தொடங்க ஆய்வு செய்யுமாறு ஆனந்த் மஹிந்திரா கூறியிருக்கின்றார். மஹிந்திரா பல்கலைக் கழகம் ஏற்கனவே பிஏ, பிபிஏ, பிஏ எல்எல்பி, எம்.டெக், எம்பி, பிச்டி மற்றும் பொறியியர் உள்ளிட்ட பட்ட படிப்புகளை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: படங்கள் உதராணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








