லட்சங்களை கொட்டி கார் வாங்குறது பெருசு இல்ல!! இந்த விஷயத்தை எல்லாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்!
மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார் ஒன்று கடற்கரை மணலில் சிக்கிக் கொண்டுள்ளது. பின்னர், அந்த ஸ்கார்பியோ கார், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் இந்த சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களை இங்கே பார்க்கலாம்.
சேறு, சகதியில் வாகனம் ஓட்டுவது எந்த அளவிற்கு கடினமானதோ அதேபோன்று, மணல் நிறைந்த கடற்கரை பகுதியில் வாகனம் ஓட்டுவதும் சிரமமானதே ஆகும். இன்னும் சொல்லப் போனால், கடற்கரை மணலில் வாகனம் சிக்கிக் கொண்டால், அது மிகவும் ஆபத்தில் சென்று முடியவும் வாய்ப்புள்ளது.

ஏனெனில், சிக்கிக்கொள்ளும் வாகனம் அலைகளினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படலாம். இருப்பினும், சிலர் இன்னும் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். அலைகளுக்கு மிக அருகாமையில் வாகனம் ஓட்டி, அதனை மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டு, லைக்ஸை பெறவே நிறைய பேர் முயற்சிக்கின்றனர்.
அந்த வரிசையில், இங்கு ஒருவர் தனது மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் மஹாராஷ்டிராவில் உள்ள கன்படிபுலே பகுதி கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது, அலைகளுக்கு மிக அருகே தனது காரை அவர் கொண்டு போகையில், அது ஈரமான மணலில் சிக்கிக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ, கார் மணலில் சிக்கிக் கொண்டதில் இருந்து ஆரம்பிக்கிறது.

இதனால், எவ்வாறு கார் மணலில் சிக்கிக் கொண்டது என்பது தெரியவில்லை. ஸ்கார்பியோ காரை ஓட்டிய டிரைவரும் அதனை பற்றி எதுவும் கூறவில்லை. ஸ்கார்பியோ காரின் பின் சக்கரங்கள் மணலில் நன்றாக சிக்கிக் கொண்டன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், காரின் பின் சக்கரங்கள் முழுவதுமாக மணலில் புதைந்துவிட்டது.
நேரம் போக, போக கடலில் அலைகளின் உயரம் அதிகரிப்பதுபோல் வீடியோவில் தெரிகிறது. காரை மணலில் இருந்து மீட்க அதனை ஓட்டி வந்தவர் என்னென்னவோ முயற்சிகளை செய்து பார்த்துள்ளார். கடற்கரைக்கு வந்தவர்களும் அவருக்கு உதவி செய்தனர். ஆனால் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. மணலில் சிக்கியுள்ள இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஆனது, அதன் 2-வீல்-டிரைவ் வெர்சனாக இருக்கலாம்.

இதனால்தான், காரின் பின் சக்கரங்கள் மட்டும் ஆழமாக புதைந்துள்ளன. அதன்பின், நல்லவேளையாக கடவுள் போல் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் ஓட்டி ஒருவர் இந்த நபருக்கு உதவ முன்வந்துள்ளார். சிக்கிக் கொண்ட ஸ்கார்பியோ காருக்கு முன்பக்கமாக குறிப்பிட்ட தூர இடைவெளியில் பாதுகாப்பாக அந்த பிஎம்டபிள்யூ கார் நிறுத்தப்பட்டது.
பின்னர், அந்த காரையும், ஸ்கார்பியோ காரையும் இணைத்து ஒரு கயிறு கட்டப்பட்டது. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஆனது லக்சரி எஸ்யூவி கார் மட்டுமல்ல, ஆற்றல்மிக்க காரும் கூட. இந்த பிஎம்டபிள்யூ காரில் பவர்ஃபுல் என்ஜின் உடன் எக்ஸ் டிரைவ் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் உள்ளது. அவற்றின் மூலமாக, இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் உதவியுடன் மணலில் சிக்கிக் கொண்ட ஸ்கார்பியோ கார் வெற்றிக்கரமாக மீட்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 4x2 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட கார்கள் சாதாரண சாலையை தவிர்த்து, வேறு எங்கும் ஓட்டுவதற்கு ஏற்றவை அல்ல. ஆதலால், உங்கள் வாகனத்தில் 4x2 டிரைவ் சிஸ்டம் உள்ளதா அல்லது ஆல்-டிரைவ்-சிஸ்டம் உள்ளதா என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம். இல்லையேல் இவ்வாறுதான் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வீர்கள்.


Click it and Unblock the Notifications









