தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு! குழந்தையுடன் வந்த ஹிந்தி குடும்பத்துக்கு சேலத்தில் நேர்ந்த கதி! பாவம்யா அவங்க!
இந்திய சாலைகளில் நிறைய பேர் பைக்குகளை தாறுமாறாக ஓட்டி வருகின்றனர். ஏராளமான விபத்துக்களுக்கு இது காரணமாகிறது. ஆனால் சில சமயங்களில் இந்த தவறுகளை பைக் ஓட்டிகள் ஒப்பு கொள்வது கிடையாது. எதிர் தரப்பினர் மீது பழி சுமத்துவதற்கே அவர்கள் முயற்சி செய்கின்றனர்.
குறிப்பாக எதிர் தரப்பினர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலோ, உள்ளூர் மொழியை பேச தெரியாவிட்டாலோ நிலைமை கொஞ்சம் மோசமாகி விடுகிறது. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் (Tamil Nadu) நிகழ்ந்திருப்பது, கொஞ்சம் வேதனையான விஷயம்.

ப்ரதீக் சிங் என்ற யூடியூப் (YouTube) சேனலில் இந்த சம்பவத்தின் வீடியோ (Video) பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்தான் ப்ரதீக் சிங்கிற்கு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். இதன் பேரில் ப்ரதீக் சிங் தனது சேனலில், அவருக்கு ஆதரவாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபரும் கூட யூடியூப் சேனல் வைத்துள்ளார். அவர் தனது குடும்பத்துடன் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) காரில் பயணம் செய்து, அந்த அனுபவங்களை பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்த வரிசையில் தமிழ்நாட்டின் சேலம் பகுதியில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோதுதான் அவருக்கு மோசமான அனுபவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் உடன் இருந்தனர். சேலத்தை ஒட்டிய ஒரு கிராமப்புற பகுதியில் அவர்கள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணம் செய்த சாலை மிகவும் குறுகலாக இருந்தது. எனவே ஒவ்வொரு வளைவிலும் அவர் முன்னெச்சரிக்கையாக ஹாரனை அடித்து கொண்டே வந்தார். ஆனால் சாலையில் வாகன போக்குவரத்து பெரிதாக இல்லை. இருப்பினும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி சென்றவர், மிதமான வேகத்தைதான் கடைபிடித்தார்.
அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது, பைக்கில் 2 பேர் திடீரென ராங்-சைடில் வந்தனர். இத்தனைக்கும் இந்த வளைவில் திரும்பும்போதும், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டிரைவர் ஹாரன் அடித்தார். ஆனால் பைக்கில் வந்தவர்கள் அதை கவனிக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள் நிலை தடுமாறினர்.
அந்த நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டிரைவர் ப்ரேக் பிடித்து விட்டார். ஆனால் பைக்கில் வந்தவர்களால், பைக்கை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை. தாறுமாறாக ஓடிய பைக், சற்று தூரம் தள்ளி கீழே விழுந்தது. அவர்கள் இருவரும் உள்ளூரை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இருவரும் ஹெல்மெட் வேறு அணியவில்லை.
அதிர்ஷ்டவசமாக அவர்கள் காரின் மீது மோதவில்லை. அத்துடன் கீழே விழுந்தபோதிலும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் கீழே விழுந்து எழுந்ததும், மஹிந்திரா ஸ்கார்பியோ என் டிரைவருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர். குறிப்பாக காரில் வந்தவர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் இல்லை மற்றும் அவர்களுக்கு தமிழ் தெரியாது என்பது தெரிந்ததும், அவர்களின் குரல் உயர்ந்தது.
காரில் இருந்தவர்கள் இது தங்களின் தவறு அல்ல என்றும், உங்கள் தவறுதான் என்றும் அவர்களுக்கு புரிய வைக்க முயன்றனர். ஆனால் பைக்கில் வந்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கே மொழி ஒரு பிரச்னையாக இருந்தது என்பது உண்மை. ஒரு கட்டத்தில் ஆங்கிலத்தில் பேசுவதை நிறுத்தி விட்டு தமிழில் பேசுங்கள் என பைக்கில் வந்தவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் காரில் வந்தவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. அவர்கள் வட இந்தியாவை சேர்ந்த ஹிந்தி பேசும் குடும்பம் போல் தெரிகிறது. ஒரு கட்டத்தில் வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி வந்தவர் கூறிய பிறகுதான், நீண்ட வாக்குவாதத்தை கை விட்டு விட்டு, பைக்கில் வந்தவர்கள் கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையிலேயே மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் வந்தவர்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. காரின் முன் மற்றும் பின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகியுள்ளன. இதைதான் அவர்,ப்ரதீக் சிங் என்ற யூடியூபருக்கு அனுப்பி, வெளி உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
காரில் கேமராக்கள் இருப்பது மிகவும் அவசியம் என நாங்கள் கடந்த காலங்களில் நிறைய முறை கூறியுள்ளோம். அதை இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. உடனடியாக உங்கள் காரில் கேமராக்களை பொருத்தி கொள்வது நல்லது. சாலை விபத்துக்கள் நிகழும்பட்சத்தில், உங்கள் மீது தவறு இல்லாவிட்டால், நீங்கள் இந்த கேமரா காட்சிகளை ஒரு ஆதாரமாக சமர்ப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications