ஒரே வாரத்தில் தனியா கழண்டு விழுந்த வீல்! அதும் ஓடிட்டு இருக்கும்போதே! அவங்க கம்பெனி காரை வாங்கவே பயமா இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N). இந்த காரில் சமீப காலமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை வாங்கிய ஒரு சில நாட்களிலேயே மிகப்பெரிய பிரச்னை ஒன்று ஏற்பட்டுள்ளது.
நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ள வாடிக்கையாளர், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி, புத்தம் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்துள்ளார். பெரும்பாலும் வேலைக்கு செல்வதற்காக நகர பகுதிகளில் மட்டுமே அவர் காரை ஓட்டி வந்தார். இந்த சூழலில் ஆகஸ்ட் 16ம் தேதி, மனைவியுடன் அவர் ஷாப்பிங் சென்றுள்ளார்.

அப்போது பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்த முயன்றபோது, சஸ்பென்ஸன் உடைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் முன் பக்கத்தில் உள்ள ஒரு சக்கரமும் கழன்று வந்துள்ளது. அப்போது மணி இரவு 8.30 ஆகியிருந்தது. எனவே டீலர்ஷிப் நிர்வாகத்தால் நிகழ்விடத்திற்கு மெக்கானிக்குகளை அனுப்பி வைக்க முடியவில்லை.
எனவே மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் உரிமையாளர், மறுநாள் டீலர்ஷிப்பை மீண்டும் தொடர்பு கொண்டார். ஆனால் 30 கிலோ மீட்டர் தொலைவு காரணமாக அப்போதும் மெக்கானிக்குகள் வரவில்லை. ஆனால் தொடர்ச்சியாக முயற்சி செய்ததன் விளைவாக, கார் நின்று கொண்டிருந்த இடத்திற்கு ஒரு வழியாக டீலர்ஷிப்பில் இருந்து மெக்கானிக்குகள் வந்தனர்.

ஆனால் தற்காலிகமாக மட்டுமே அவர்களால் பிரச்னையை சரி செய்ய முடிந்தது. மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் உரிமையாளர், டீலர்ஷிப்பில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு காரை ஓட்டி செல்லும் வகையில், அவர்கள் தயார் செய்து தந்து விட்டனர். காரை அங்கு கொண்டு சென்ற பிறகு, பல்வேறு பாகங்கள் இலவசமாகவே மாற்றி தரப்பட்டுள்ளது.
அதாவது ஒட்டுமொத்தமாக முன் பக்க சஸ்பென்ஸன் உள்ளிட்டவற்றை அவர்கள் இலவசமாக மாற்றி தந்துள்ளனர். எனினும் புத்தம் புதிய காரில் இப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டதால், அதன் உரிமையாளர் அதிருப்தியடைந்துள்ளார். இந்த பிரச்னை ஏன் ஏற்பட்டது? என்பதற்கு மஹிந்திரா நிறுவனம் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் இப்படிப்பட்ட ஒரு பிரச்னை ஏற்படுவது இது முதல் முறையல்ல. மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்து 10 கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டிய நிலையில், பிரேக் டவுன் ஆகி நின்ற நிகழ்வுகள் எல்லாம் நடந்துள்ளன.
சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் குப்பை தொட்டி என பேனர் ஒட்டியிருந்தார். வாங்கியதில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டிருந்ததுதான் இதற்கு காரணம். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து, மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் உற்பத்தியில் பிரச்னைகள் இருக்கிறதோ? என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ-என் வெறும் 30 நிமிடங்களிலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்ற கார். அதிகம் பேருக்கு டெலிவரி செய்ய வேண்டியுள்ளதால், மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி தரத்தில் சமரசம் செய்து கொண்டு விட்டதா? என்ற சந்தேகத்தையும் இந்த பிரச்னைகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.
பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்படும் புத்தம் புதிய காரில் பிரச்னை என்றால், யாராலும் அதை ஏற்று கொள்ள முடியாது. எனவே மஹிந்திரா நிறுவனம் இந்த பிரச்னையில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. இனி இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் மஹிந்திரா நிறுவனத்திற்கு உள்ளது.


Click it and Unblock the Notifications