ஒரு ஊரையே ஏத்தீட்டு போலாம்! 17 பேர் பயணிக்க கூடிய மஹிந்திரா கார்! இதை வாங்க எல்லாரும் வரிசையில் நிக்க போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதால், மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
தற்போதைய நிலையில் 6 சீட்டர், 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் என 3 ஆப்ஷன்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே அதிகபட்சமாக மஹிந்திரா ஸ்கார்பியோ காரில், 9 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்றில் மொத்தம் 17 பேர் பயணம் செய்துள்ளனர் என்றால் உங்கள் நம்ப முடிகிறதா?

ஆம், இதை நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். ஆரம்பத்தில் நாங்களுமே கூட இதை நம்பவில்லைதான். ஆனால் சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வைரல் வீடியோவை பார்த்த பின்னர், இதை நம்பாமல் இருக்க முடியவில்லை. இந்த வைரல் வீடியோவில், மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் இருந்து ஒருவர் பின் ஒருவராக மொத்தம் 17 பேர் இறங்குவதை பார்க்க முடிகிறது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என மொத்தம் 17 பேர் இந்த காரில் பயணம் செய்துள்ளனர். சமூக வலை தளங்களில் இந்த வைரல் வீடியோ பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. ஆனால் இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இது முதல் முறை அல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதை விட பயங்கரமான சம்பவங்களை எல்லாம் கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம். உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு மிகவும் விசித்திரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஒரே ஆட்டோ ரிக்ஸாவில் மொத்தம் 27 பேர் பயணம் செய்ததுதான் அந்த விசித்திரமான சம்பவம்!
இத்தனைக்கும் இந்த ஆட்டோ அதிவேகமாக சென்றது. இதை பார்த்த காவல் துறை அதிகாரிகள், ஆட்டோ நிறுத்தினர். அப்போது ஒருவர் பின் ஒருவராக 27 பேர் கீழே இறங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். இதன் காரணமாக காவல் துறை அதிகாரிகள் அந்த ஆட்டோ ரிக்ஸாவை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற பயணங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஏனெனில் இத்தகைய பயணங்கள் மிகவும் ஆபத்தானவை. பார்ப்பதற்கு இந்த பயணங்கள் செலவை குறைக்கும் ஒன்றாகவும், லாபத்தை அதிகரிக்கும் ஒன்றாகவும் தோன்றலாம். ஆனால் சாலை விபத்துக்கள் நிகழ்ந்தால், அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
எனவே வாகனங்களில் இது போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. இத்தகைய பயணங்களை மேற்கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. நடவடிக்கைகள் பாயாதபட்சத்தில் இன்னும் பலர் இத்தகைய செயல்களில் ஈடுபட தொடங்கி விடுவார்கள்.


Click it and Unblock the Notifications








