சர்வீஸ் சென்டர் செய்த அக்கிரமத்தை கண்டுபிடித்த கார் ஓனர்! இப்படிலாம் ஏமாத்தறாங்களா! வண்டியை விடவே பயமா இருக்கு
எந்தவொரு கார் நிறுவனம் என்றாலும், அதன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளில் ஒன்றாக விற்பனைக்கு பிந்தைய சேவை உள்ளது. அதாவது கார்களில் ஏற்படும் பிரச்னைகளை சரியான முறையிலும், விரைவாகவும் சரி செய்து தர வேண்டும். அத்துடன் வாடிக்கையாளர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஒரு கார் நிறுவனத்தால் சாதிக்க முடியும். காரை தலையில் கட்டி விட்டோம். அவ்வளவுதான் என நினைக்கும் நிறுவனங்களால், சந்தையில் நீண்ட காலம் நீடித்து நிற்க முடியாது. ஆனால் நிறைய நிறுவனங்களின் விற்பனைக்கு பிந்தைய வாடிக்கையாளர் சேவை மிகவும் மோசமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த சூழலில் மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் ஒன்று, வாடிக்கையாளர் ஒருவரிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்ட தகவல் தற்போது வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் என்ன செய்தார்கள்? என தெரிந்தால், உங்களுக்கு கோவம் கூட ஏற்படலாம்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ யூ-டியூப் (YouTube) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் பேசும் நபர், டெல்லியில் உள்ள ஒரு மஹிந்திரா சர்வீஸ் சென்டரில், தனது ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) காரை விட்டதாக கூறுகிறார். காரில் பிரச்னைகள் இருந்ததால், அதை சரி செய்வதற்காக சர்வீஸ் சென்டரிடம் அவர் காரை ஒப்படைத்துள்ளார்.

அதன் பிறகு ஒரு சில நாட்கள் கழித்து, அவரின் தந்தையிடம் இருந்து அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. உனது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை ஓட்டுவது யார்? என தந்தை கேட்டுள்ளார். அப்போது காரை சர்வீஸ் சென்டரில் விட்டிருக்கும் தகவலை அவர் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு தந்தை, ''இப்போதுதான் சாலையில் உனது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை பார்த்தேன். நான் நிறுத்துமாறு கூறியும் கார் நிற்கவில்லை'' என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகன், உடனடியாக விசாரணையில் இறங்கினார். மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில், கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதி இருக்கிறது.
இதன் மூலம் கார் எங்கே உள்ளது? கடைசி ட்ரிப்? உள்ளிட்ட விபரங்களை அவர் சோதனை செய்தார். அப்போது சர்வீஸ் சென்டரில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர், காரை எடுத்து கொண்டு ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருப்பது தெரியவந்தது. சர்வீஸ் சென்டர் ஊழியர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரை ஓட்டியுள்ளார்.
சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் அவர் ஜாலியாக காரில் சுற்றியதாக கூறப்படுகிறது. கார் எங்கெல்லாம் சென்றது? என்பதை தனது செல்போனிலேயே உரிமையாளர் பார்த்து விட்டார். எனவே உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு சென்று, இது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது ஊழியர் காரை எடுத்து கொண்டு வெளியே சென்றதை சர்வீஸ் சென்டர் ஒப்பு கொண்டது.
ஆனால் இந்த செயலுக்காக அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. ஊழியருக்கு ஆதரவாக அவர்கள் பேசியதாக தெரிகிறது. இந்திய தயாரிப்பு என்பதாலேயே மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை வாங்கியதாக இந்த வீடியோவில், உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இனி ஒருபோதும் மஹிந்திரா தயாரிப்புகளை வாங்க மாட்டேன் என அவர் வேதனையுடன் கூறுவதை காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது தொடர்பாக மஹிந்திரா நிறுவனம் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் உரிமையாளரின் அனுமதி இல்லாமல், ஊர் சுற்றுவதற்காக காரை பயன்படுத்தியதை ஏற்க முடியாது. நிறைய சர்வீஸ் சென்டர்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.
அதாவது சர்வீசுக்கு வரும் கார்களை, உரிமையாளர்களின் அனுமதி இல்லாமலேயே, ஊழியர்கள் தங்கள் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, தவறுகளை தடுப்பது அவசியம். இல்லாவிட்டால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.


Click it and Unblock the Notifications