25 கிமீ மைலேஜ் தரும் மஹிந்திரா தார்.. எல்லாரும் 10-12 கிமீ மட்டுமே தருதுனு சொல்லுறாங்களே இது எப்படி சாத்தியம்!
இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் மஹிந்திரா தார் (Mahindra Thar)-ம் ஒன்றாகும். இதனாலேயே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடலாகளில் ஒன்றாக தார் காட்சியளிக்கின்றது. விற்பனைக்கு வந்து ஆண்டுகள் சில ஆகின்ற போதிலும் இப்போதும் டிமாண்ட் குறையாமலேயே இந்த காருக்கு கிடைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில், இதன் 5 டோர் வெர்ஷன் விற்பனைக்கு வந்திருப்பது லேசாக 3 டோர் தாருக்கு பாதிப்பை ஏற்படுத்திருக்கின்றது. இருப்பினும் கணிசமான அளவு நல்ல வரவேற்பு அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய காரையே மைலேஜ்-க்கு ஆசைப்பட்டு சிஎன்ஜி (CNG) வாகனமாக மாற்றி இருக்கின்றனர். தலைநகர் டெல்லியிலேயே இந்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி கார்களின் மீதான மோகம் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதன் விளைவாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சிஎன்ஜி வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே வழக்கமான பெட்ரோல் 4X4 வசதிக் கொண்ட தார் கார் மாடலை சிஎன்ஜி வாகனமாக மாற்றியிருக்கின்றனர். இதன் வாயிலாக இந்தியர்கள் எந்த அளவிற்கு சிஎன்ஜி வாகனம் மீது மோகம் கொண்டவர்களாக மாறியிருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்த வாகனம் ஓராண்டே பழைய வாகனம் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
சந்தைக்கு பிறகான சிஎன்ஜி கிட்டைப் பயன்படுத்தியே வழக்கமான பெட்ரோல் எஞ்சின் கொண்ட தார் காரை அதன் உரிமையாளர் சிஎன்ஜி வாகனமாக மாற்றியிருக்கின்றார். இதனால் அந்த வாகனம் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாறியிருக்கின்றது. இதேபோல், குறைவான மாசையே வெளியேற்றும் வாகனமாகவும் அது மாறியிருக்கின்றது.
பெட்ரோல் வாகனங்களைவிட சிஎன்ஜி சற்று குறைவான மைலேஜையே வெளியேற்றும். ஆனால், ஆஃப்டர் மார்க்கெட் சிஎன்ஜி கருவியை இந்த காரில் பயன்படுத்தி இருப்பதால் எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றை கிளைம் செய்வதில் அவர் சிக்கலைச் சந்திக்க நேரிடலாம் என யூகிக்க முடிகின்றது. சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கம்பெனி வாயிலாக பொருத்தப்படும் சிஎன்ஜி கிட்களை மட்டுமே ஆதரிக்கின்றனர்.
ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்து பொருத்தப்படும் சிஎன்ஜி கிட்களுக்கு அவர்கள் ஆதரவளிப்பதில்லை. இருப்பினும் இதுபற்றி துளியளவும் கவலையின்றி தார் உரிமையாளர் சிஎன்ஜி வாகனமாக மாற்றி இருக்கின்றார். இதற்கு அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வே காரணமாக உள்ளது. இந்த நபர் ஆண்டு ஒன்றிற்கே 70 ஆயிரம் கிமீ முதல் 80 ஆயிரம் கிமீ பயணம் மேற்கொள்ளும் நபர் என தெரிகின்றது.
இதற்கு சான்றாக அவருடைய முந்தைய கார் மாடல் இருக்கின்றது. முன்னதாக அவர் ஹோண்டா அக்கார்டு காரையே பயன்படுத்தி வந்திருக்கின்றார். அந்த காரில் அவர் 5.75 லட்சத்திற்கும் அதிகமான கிமீ வரை பயணித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே எரிபொருளுக்காக செலவிடும் பெரும் தொகையை குறைக்கும் பொருட்டு அவர் தற்போது சிஎன்ஜி கிட்டை தன்னுடைய ஒரு வயதுக் கொண்ட தார் காரில் பொருத்தி இருக்கின்றார்.
இதை பொருத்திய பின்னர் வெறும் 8 கிலோ சிஎன்ஜிக்கே தார் கார் 200 கிமீ வரை மைலேஜ் தருவதாக கூறப்படுகின்றது. அதாவது, கிலோ ஒன்றிற்கு சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட மஹிந்திரா தார் 25 கிமீ வரையில் மைலேஜ் தருகின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.
மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் பயணித்தும் இந்த அளவு அதிக மைலேஜையே தார் வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், பெட்ரோலை பயன்படுத்தி இந்த வாகனத்தில் பயணித்தபோது அவருக்கு வெறும் 7 கிமீ முதல் 10 கிமீ வரையில் மட்டுமே மைலேஜ் கிடைத்திருக்கின்றது. மேலும், இப்போதே அவர் இந்த காரில் 50 ஆயிரம் கிமீ தூரம் வரை பயணித்துவிட்டார். இதன் வாயிலாக பெரும் தொகையையும் அவர் சேமித்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிகழ்வு மற்ற தார் கார் பயன்பாட்டாளர்களையும் சிஎன்ஜி வாகனமாக மாற்ற தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், இன்சூரன்ஸ் கவர் செய்வதில் சிக்கல் இருப்பதால் இதை செய்யும் முன் யோசிப்பது நல்லது. அதேவேளையில், இந்த மாற்றம் குறித்து தகவலை ஆர்சி புத்தகத்தில் பதிவு செய்துவிட்டால் இன்சூரன்ஸை கிளைம் செய்வதில் சிக்கல் ஏற்படாது என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








