டிரைவர் செய்த ஒரு சிறிய தவறு! கண்ணிமைப்பதற்குள் எல்லாம் முடிந்தது - மயிரிழையில் தப்பிய செக்யூரிட்டி!!
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகளவில் நடப்பதற்கு போதிய ஓட்டுனர் பயிற்சி இல்லாதவர்கள் வாகனம் ஓட்டுவதும் ஒரு காரணமாகும். முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பினும், பலருக்கு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதை கூறியே ஆக வேண்டும். அதேபோல், முழுமையாக வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ளாதவர்கள் விபத்து சமயங்களில் வெகுவாக பதற்றம் அடைகின்றனர். இதனால் விபத்தில் ஏற்படும் சேதாரங்கள் அதிகமாகுகின்றன. அந்த வகையில், இங்கு ஒருவர் செய்த சிறிய தவறினால் நிறைய சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
காரினுள் பிரேக் மற்றும் ஆக்ஸலரேட்டர் பெடல்கள் மிக மிக அருகாமையில் வழங்கப்பட்டிருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். டிரைவர் அவற்றை எளிதாக பயன்படுத்துவதற்காக இவ்வாறு வழங்கப்படுகின்றன. ஆனால், ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் பெடல்களின் பணிகள் மொத்தமாக நேரெதிரானவை. இதனாலேயே, அனைத்து 4-சக்கர வாகனங்களிலும் ஒரே மாதிரியான ஆர்டரில் பிரேக் & ஆக்ஸலரேட்டர் பெடல்கள் வழங்கப்படுகின்றன.

அவ்வப்போது வாகனங்களை ஓட்டி, அனுபவம் வாய்ந்தவர்களுக்கு எது பிரேக் பெடல், எது ஆக்ஸலரேட்டர் பெடல் என்பது அவற்றை பார்க்காமலேயே தெரியும். ஆனால், போதிய அளவிற்கு வாகனம் ஓட்டிய அனுபவம் இல்லாதவர்கள் இந்த விஷயத்தில் எப்போதும் ஒருவித குழப்பத்துடனே இருப்பார்கள். இது சில நேரங்களில் விபத்தில் கொண்டுப்போய் முடிக்கிறது.
அந்த வகையில், இங்கு ஒரு மஹிந்திரா தார் ஓட்டுனர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸரேட்டர் பெடலை மிதித்துள்ளார். இதன் காரணம், நிற்க வேண்டிய அந்த தார் வாகனம் படிக்கட்டில் ஏறி எதிரே இருந்த கடையின் கண்ணாடி கதவுகளில் மோதி நின்றுள்ளது. இந்த சம்பவம், கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஓர் உணவகத்திற்கு வெளியே நடைபெற்றுள்ளது.

சம்பவத்தின்போது, இந்த தார் ஓட்டுனர் அந்த உணவகத்துக்கு தனது வாகனத்துடன் வந்துள்ளார். அப்போது இந்த எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுள்ளது. இத்தனைக்கும், இந்த தார் வாகனத்தை பார்க் செய்வதற்கு உணவகத்தின் பாதுகாவலர் உதவி செய்துள்ளார். அதனையும் மீறி இந்த விபத்து நடந்துள்ளது. நல்லவேளையாக, விபத்தில் வாகனத்திற்கு முன்னால் இருந்து வழிக்காட்டிக் கொண்டிருந்த அந்த பாதுகாவலருக்கு எதுவும் ஆகவில்லை.
வாகனம் முன்னோக்கி சீறி பாய்வதை கண்டதும் அந்த பாதுகாவலர் விலகி சென்றுவிட்டார். அதேபோல், இந்த மோதலில் உணவகத்தின் கண்ணாடி கதவுகள் உடையவில்லை. ஆனால், சேதமடைந்துள்ளன. படிக்கட்டின் மீது ஏறி சென்றதால், வாகனத்தின் வேகம் குறைந்துள்ளது. இல்லையேல், சீறிப் பாய்ந்த வேகத்தில் நிச்சயமாக உணவகத்தின் கண்ணாடி கதவுகளை வாகனம் உடைத்து சுக்கு, நூறாக்கி இருக்கும்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் உணவகத்திற்கு வெளியே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. வெளியே சத்தத்தை கேட்டதும் உணவகத்திற்குள் இருந்தவர்கள் அதிர்ச்சி உடன் வெளியே வந்து பார்ப்பதை வீடியோவில் காணலாம். தனது தவறை உணர்ந்து, வாகனத்தை பின்னோக்கி கொண்டு சென்ற நேரத்திலும் டிரைவர் பதற்றம் குறையாமல் இருந்துள்ளார். ஏனெனில், ரிவர்ஸில் வந்தவர் அங்கிருந்த வேறோரு காரின் மீது மோதியுள்ளார்.
அதாவது, இந்த தார் வாகனத்தின் டிரைவர் 2 முறை விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதில் இருந்து இந்த டிரைவர் வாகனம் ஓட்டுவதில் அனுபவம் இல்லாதவர் என்பதை அறிய முடிகிறது. அல்லது மது போதையில் இருந்திருக்கலாம். இதனால்தான், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட தார் டிரைவருக்கு பெரியளவில் அபராத தொகை விதிக்கப்பட்டு இருக்கும் என்பது உறுதி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் வாகனத்தின் எந்த வேரியண்ட் இது என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தார் விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் நிறைய பேருக்கு சரியாக வாகனம் ஓட்ட தெரியவில்லை என்பது கசப்பான உண்மை. இதுகூட கேரளாவில் நடந்துள்ள இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









