நியூ இயரில் இப்படி நடக்கும்னு சத்தியமா நினைத்திருக்க மாட்டாரு... இந்த வருஷம் எத்தனை பேர காவு வாங்க போகுதோ!!
2024ஆம் ஆண்டு முடிந்து புதிய 2025ஆம் ஆண்டு துவங்கவுள்ளது. இந்த ஆண்டில் இதை செய்ய வேண்டும் என ஒவ்வொரு புத்தாண்டிற்கும் ஏதேனும் ஒரு விஷயத்தை தீர்மானமாக எடுப்போம். அதை செய்கிறோமோ இல்லையோ... ஆனால் ஒவ்வொரு புத்தாண்டையும் கோலாகலமாக வரவேற்க மட்டும் மறப்பது இல்லை. உலகமே கொண்டாடும் இந்த பண்டிகையை, மற்றவர்கள் யாரும் கொண்டாடாத வகையில் வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்றே பலரும் நினைக்கின்றனர். அதுவே சிலருக்கு ஆபத்தாக முடிந்துள்ள சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம். அவ்வாறுதான் இங்கு ஒருவர் தனது மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்துடன் வித்தியாசமான முறையில் புத்தாண்டை கொண்டாடி உள்ளார்.
அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, தான் வெளியிட்ட வீடியோவினாலேயே அவர் போலீசாரின் தண்டனைக்கு உள்ளாகி உள்ளார். இதனால், அவர் புத்தாண்டை காவல் நிலையத்தில் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது? வாங்க இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியா முழுவதுமே பனி அதிகமாக பொழிந்து வருகிறது. இதன் காரணமாகவே புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்னும் சூடுப்பிடித்துள்ளன. அடிக்கும் குளிருக்கு இதமாக நெருப்பு மூட்டப்பட்ட இடத்தில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றே எல்லாருக்கும் தோன்றும். ஆனால், நாம் இந்த செய்தியில் பார்க்க போகும் இளைஞர், நடுரோட்டில் பெட்ரோல் (Petrol)-ஐ கொண்டு தீ கொளுத்தி உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ஷேக் பிலால் என்கிற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண்-2இல் நடந்துள்ள இந்த சம்பவத்தில், சாலையில் பெட்ரோலை '2024' என்பதுபோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். அதாவது, தீ எரியும்போது '2024' என்கிற எண் தெரிகிறது. இவ்வாறு, தீப்பற்றி எரிந்துக் கொண்டிருக்க, அதற்கு பின்னால் இளைஞர் தனது மஹிந்திரா தார் வாகனத்தில் சாய்ந்தப்படி நின்றுக்கொண்டு வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார். அவர் எதிர்பார்த்ததை போன்று, அந்த வீடியோவும் வைரலாகிய நிலையில், அது போலீசாரின் கவனத்திற்கும் வந்துள்ளது.

அப்புறம் என்ன... நம்பர் பிளேட் உள்ளிட்டவற்றை வைத்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்ட போலீசார், பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். ஏனெனில், இந்த நிகழ்வுகள் அனைத்தும் இரவு நேரத்தில் மேம்பாலம் ஒன்றின் மீது நடத்தப்பட்டுள்ளது. இது இன்னும் ஆபத்தானது என்றுதான் சொல்ல வேண்டும். பற்றி எரியும் தீ அவ்வழியாக செல்லும் ஏதேனும் வாகனத்தில் பட்டால், அந்த வாகனம் தீப்பிடித்து எரியவும் வாய்ப்புள்ளது.
அத்தகைய நேரத்தில், அந்த வாகனத்தின் டிரைவர் பதற்றதில் ஸ்டேரிங்கை வேகமாக திருப்பினால், அந்த வாகனம் பாலத்தில் இருந்து கீழே விழவும் வாய்ப்புள்ளது. இவ்வளவு ஏன், இந்த செயலில் ஈடுப்பட்ட இளைஞரின் மஹிந்திரா தார் வாகனத்தில் கூட தீப்பொறி பட வாய்ப்புள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு நெருப்புக்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்தி வீடியோ எடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, மேம்பாலத்தில் தீ எரிவதை பார்க்கும் மற்ற வாகன ஓட்டிகளின் கவனம் சிதற நேர்ந்தாலும் அதுவும் விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், வீடியோவில் காட்சித்தரும் நபருக்கு பின்னால் நிற்கும் முற்றிலும் கருப்பு நிறத்திலான மஹிந்திரா தார் 3-கதவு வாகனம் ஆனது முற்றிலுமாக மாடிஃபை செய்யப்பட்டதாக உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது இதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம், இணைய மோகம் என்றால் அதில் மாற்று கருத்து இல்லை. இவ்வாறுதான் பலர் தான் செய்வது தவறு என்றே தெரியாத நிலை உள்ளது. முக்கியமாக, சாலைகளில் இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவது குற்றம் என்கிற விழிப்புணர்வு நம் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். ஏனெனில், சாலையில் நீங்கள் மட்டுமில்லை, உங்களை போன்று ஆயிரக்கணக்கிலானோர் செல்கின்றனர்.


Click it and Unblock the Notifications









