வாழ்க்கையில் இதை மறக்கவே மாட்டாரு! அபராதம் மட்டுமில்ல... நேராக ஜெயிலுக்கு போக வேண்டியது தான்!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக சமீபத்தில் விற்பனைக்கு வந்த தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், எந்தவொரு சாலையிலும் இயங்கக்கூடிய இந்த வாகனத்தின் திறன் ஆகும். ஆனால், பெங்களூரில் தார் ராக்ஸ் வாகன ஓட்டி ஒருவர் விசித்திரமான முறையில் தனது வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். மேலும், அதற்காக அவர் அதிரடியாக போலீசாரால் கைதும் செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர் நிறைய விஷயங்களில் பிரபலமானது. அவற்றுள் ஒன்று, போக்குவரத்து நெரிசல் ஆகும். பெங்களூரில் தொடர்ந்து அதிகரித்துவரும் மக்கள் தொகையின் காரணமாக, சாலையில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துக் கொண்டே வருகிறது. இதனை சமாளிக்க புது, புது சாலைகளும், மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், ஒருபக்கம் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், பெங்களூரில் குறுகிய தொலைவு பயணத்திற்கு கூட நீண்ட நேரம் ஆகிறது. இதில் வெறுப்படைந்து சொந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக, மெட்ரோ இரயில், பேருந்து போன்ற பொது பயன்பாட்டை பயன்படுத்த நிறைய பேர் ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இங்கு ஒரு மஹிந்திரா தார் ராக்ஸ் வாகன ஓட்டி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, நடைப்பாதையில் வாகனத்தை ஓட்டியுள்ளார். நடைபாதையில் நடந்து சென்றவர்களை பயமுறுத்தும் வகையில் தார் ராக்ஸ் வாகனத்தை இவர் ஓட்டி செல்வதை அங்கிருந்த வேறொரு வாகன ஓட்டி தனது மொபைல் போனில் படம்பிடித்து இணையத்தில் வெளியிட, அது வைரலாகி உள்ளது.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது மட்டுமின்றி, அது சம்பந்தப்பட்ட தார் ராக்ஸ் வாகன ஓட்டிக்கு பெரும் தலைவலியாகவும் அமைந்துள்ளது. ஏனெனில், பெங்களூரில் பொதுவாகவே போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை மிகவும் கடுமையாக கண்காணிப்பர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. அதிலிலும், இணைய வளர்ச்சி விரிவடைந்த பிறகு, பெங்களூரில் வீடியோக்கள், புகைப்படங்கள் மூலமாக போலீசாரிடம் சிக்கியவர்கள் ஏராளம்.
அந்த வகையில், நடைப்பாதையில் வாகனம் ஓட்டிய இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் வாகன ஓட்டியும் போலீசாரால் அடையாளம் காணப்பட்டு, அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தின் போது அவர் பயன்படுத்திய தார் ராக்ஸ் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம், கடந்த நவம்பர் 28ஆம் தேதி பெங்களூரின் ஹூடி சர்கிள் பகுதியில் நடந்துள்ளது.

இவ்வாறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்த போதிலும், பெங்களூரில் சாலை விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் 17- 23 என்கிற 1 வாரத்தில் மட்டும் மொத்தம் 9 ஆயிரத்து 912 வழக்குகள் சாலை விதிமுறைகளை மீறியதற்காக வாகன ஓட்டிகள் மீது பதியப்பட்டுள்ளன. இதன் மூலம் அபராதமாக கிடைத்த தொகை, சுமார் ரூ.66.46 லட்சம் ஆகும்.
இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் வாகன ஓட்டியின் செயலுக்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால், தரமான ஆஃப்-ரோடு வாகனமான மஹிந்திரா தார் ராக்ஸின் நன்மதிப்பு கெடுகிறது. 5-கதவுகளை கொண்ட தார் ராக்ஸ் வாகனத்தை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மஹிந்திரா அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.22.49 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க இது சூப்பரான ஐடியா போன்று தோன்றலாம். ஆனால், நடைப்பாதையில் வாகனம் ஓட்டுவது சாலை விதிமுறைகளை பொறுத்தவரையில் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால், இந்த செயலில் ஈடுப்பட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதில் பெரியதாக ஆச்சிரியமில்லை.


Click it and Unblock the Notifications









