ஷோரூமை விட்டு வெளிய கூட வரல! அதுக்குள்ள நொறுங்கீருச்சு! ரொம்ப ஆசையா டெலிவரி எடுக்க போனவங்களுக்கு நடந்த சோகம்!
புதிய கார் வாங்குவது என்பது மிகவும் உற்சாகமான அனுபவத்தை தரும். பொதுவாக புதிய கார் வாங்க வேண்டும் என்றால், மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். குறிப்பாக மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வருபர்கள், புதிய கார் வாங்க வேண்டும் என்றால், மிக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
எனவே புதிய காரை டெலிவரி எடுக்கும் நாளில், மனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். ஆனால் இந்த உற்சாகத்தை ஒரு சிலர் சரியாக கையாள தவறி விடுகின்றனர். இதன் காரணமாக புதிய காரை டெலிவரி எடுத்த அடுத்த ஒரு சில வினாடிகளிலேயே விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.

டெல்லியில் (Delhi) தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் இதற்கு உதாரணம். சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. Prateek Singh என்பவரின் யூடியூப் சேனலில் இந்த வைரல் வீடியோ (YouTube) பதிவிடப்பட்டுள்ளது.
புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) கார் ஒன்று, டெலிவரி எடுக்கப்பட்ட சமயத்தில், பயங்கரமான விபத்தில் சிக்கியதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் காரை வாங்கியவர் ஒரு பெண் ஆவார். அவர் காரை டெலிவரி எடுத்த நாளில், முதல் தளத்தில் மஹிந்திரா தார் ராக்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அவர் தவறுதலாக ஆக்ஸலரேட்டரை வெகுவாக அழுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முதல் தளத்தின் கண்ணாடியை உடைத்து கொண்டு, மஹிந்திரா தார் ராக்ஸ் கார் கீழே தலைகீழாக கவிழ்ந்தது. டெலிவரி எடுக்கும் நாளில் புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில், மஹிந்திரா தார் ராக்ஸ் மிக கடுமையாக சேதமடைந்து விட்டது. ஆனால் இந்த விபத்தில் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது? என்பது போன்ற தகவல்கள் எதுவும் உறுதியாக தெரியவில்லை. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 12.99 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 23.39 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆனால் டெலிவரி எடுக்கும் நாளில் விபத்தில் சிக்கியது, மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை.
ஆனால் இந்தியாவில் புதிய காரை டெலிவரி எடுக்கும் நாளில், அவற்றில் விபத்தை ஏற்படுத்துவது என்பது இது முதல் முறை நடக்கும் சம்பவம் கிடையாது. கடந்த காலங்களிலும் பல முறை டெலிவரி எடுக்கும் நாளில் புத்தம் புதிய கார்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதில், ஒரு சில நிகழ்வுகளையும் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவின் தொடக்கத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய காரை டெலிவரி எடுக்கும் நாளில், மனம் மிக உற்சாகமாக இருக்கும். அந்த உற்சாகத்தை நாம் கவனமாக கையாள வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற விபத்துக்களில் சிக்க நேரிடலாம். இதன் விளைவாக மகிழ்ச்சியான ஒரு நாள், இறுதியில் சோகத்தில் முடிந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாகவே கார் உள்பட எந்தவொரு வாகனம் என்றாலும், அதன் டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால், நாம் மிகவும் நிதானமாகவும் மற்றும் கவனமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும் என்பதை அனைவரும் மனதில் வைத்து கொள்வது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








