வெளிநாடுகளை பார்த்து வாய் பிளந்தது போதும்! இந்த ஊர் போலீசார் குடுத்து வெச்சவங்க... மஹிந்திரா காரில் ரோந்து!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுவரும் வாகனம், தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். முன்பு விற்பனையில் இருந்த 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திரா தார் வாகனங்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வாகனத்தை வாங்க பலத்தரப்பட்ட மக்களும் போட்டி போட்டு வருகின்றனர். இருப்பினும், இன்னமும் போலீசாரின் பயன்பாட்டிற்கு தார் ராக்ஸ் வாகனங்கள் பரவலாக வரவில்லை.
இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் போலீஸ் துறையாக நாகலாந்து (Nagaland) மாநில போலீசார் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கி உள்ளனர். நாகலாந்து மாநிலம் ஆனது மலை தொடர்களினால் ஏற்ற இறக்கமான சாலைகளை அதிகம் கொண்ட மாநிலம் ஆகும். இத்தகைய மாநிலத்திற்கு தார் ராக்ஸ் ஆனது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

ஏனெனில், அந்த அளவிற்கு ஆஃப்-ரோடுகளில் இயங்கும் திறன்களை தார் ராக்ஸ் வாகனங்கள் கொண்டுள்ளன. ஆனால், அதற்கு நீங்கள் இந்த வாகனத்தை 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் வாங்க வேண்டும். 4x2 டிரைவ் சிஸ்டத்துடன் வாங்கினால் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதை சமீபத்தில்தான் ஒரு நிகழ்வோடு நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.
சிவப்பு நிறத்தில் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை நண்பர்கள் சிலர் ஏரிக்கு அருகே கொண்டு சென்ற போது வாகனத்தின் பின் சக்கரங்கள் சேற்றில் சிக்கி உள்ளன. ஆனால், அவர்களது தார் ராக்ஸ் வாகனம் 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட வாகனம் கிடையாது என்பதால், அவர்களால் சேற்றில் இருந்து வாகனத்தை வெளியே கொண்டுவர முடியவில்லை. பின்னர் டிராக்டர் ஒன்றை வரவழைத்து வாகனத்தை மீட்டனர்.

ஆதலால், நாகலாந்து போலீசார் 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட தார் ராக்ஸ் வாகனத்தை தான் வாங்கி இருப்பார்கள். இந்தியாவிலேயே முதல் போலீசாராக இந்த வாகனத்தை வாங்கி இருப்பதை நாகலாந்து போலீசார் வீடியோ உடன் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவில், கிரிக்கெட் மைதானம் ஒன்றில் நடைபெற்ற போட்டிக்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் கொண்டு சென்ற வாகனமாக மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பார்க்க முடிகிறது.
போலீசாரின் வாகனம் என்பதால், முழுவதும் வெள்ளை நிறத்திலான இந்த தார் ராக்ஸ் வாகனத்தில் ஆங்காங்கே போலீசார் என்பதை குறிக்கும் விதத்திலான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது. மேலும், போலீசாரின் பயன்பாட்டிற்கு ஏற்ப மேலும் சில கஸ்டமைசேஷன்கள் (Customisations) மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இது வழக்கமான தார் ராக்ஸ் வாகனத்தில் இருந்து வேறுப்பட்டதாக இருக்கும்.
இந்த தார் ராக்ஸின் மேற்கூரையில் பெக்கான் (Beccon) விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதையும், அதற்கு கீழே சிவப்பு நிறத்திலான போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதையும் காணலாம். தார் ராக்ஸ் வாகனத்தை 2 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்கிறது.
இதில், டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் 4x4 டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. அதுவும், விலைமிக்க டாப் டீசல் வேரியண்ட்களில் மட்டுமே ஆகும். மற்ற வேரியண்ட்களில் பின்-சக்கர-டிரைவ் சிஸ்டம் மட்டுமே வழங்கப்படுகிறது. இரு என்ஜின் ஆப்ஷன்கள் உடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போலீசாரின் பயன்பாட்டிற்கு பெரும்பாலும் டாப் வேரியண்ட்கள் வாங்கப்படுவது இல்லை. ஏனெனில், போலீசார் வாகனத்தின் அனைத்து வசதிகளையும் அதிகம் பயன்படுத்த போவதில்லை என்பதால், எண்ட்ரீ-லெவல் அல்லது மிட்-வேரியண்ட்டை தான் வாங்குவார்கள். ஆனால், நாகலாந்து போலீசார் இவ்வாறான வாகனத்தை வாங்கி இருப்பதால், இது ரோந்து பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டதா அல்லது ஏதேனும் தனிப்பட்ட விஐபி-க்கு பாதுகாப்பு கொடுக்க வாங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








