கெத்தா ஓட்டி சென்று, எல்லார் முன்பும் ஒரே அசிங்கமா போய்டுச்சு! மஹிந்திராவில் இந்த வண்டியை பார்த்து வாங்கனும்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வாகனம், தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். 2020ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. கூடுதல் கதவுகளுடன், கூடுதல் இடவசதி மூலமாக கூடுதல் சவுகரியத்துடன் தார் ராக்ஸ் கொண்டுவரப்பட்டதால், 3-கதவு தார் வாகனத்தை வாங்க சற்று தயக்கம் காட்டியவர்கள் 5-கதவு தார் ராக்ஸை வாங்கி வருகின்றனர்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தார் ராக்ஸ் வாகனத்தின் அறிமுகத்திற்கு பிறகு 8,000- 9,000ஐ தொட ஆரம்பித்தது. கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் ஒருபடி மேலே சென்று 10 ஆயிரத்திற்கும் அதிகமான மஹிந்திரா தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கிலான மக்கள் போட்டி போட்டு வாங்கும் அளவிற்கு தார் ராக்ஸ் ஓர் தரமான வாகனம் ஆகும். தார் வாகனங்களை ஆஃப்-ரோடு (Off-road) வாகனங்களாக மஹிந்திரா சுட்டிக் காட்டுகிறது. அதாவது, எந்தவொரு கரடு, முரடான பாதைகளுக்கும், ஏற்ற இறக்கமான பாதைகளுக்கும் கொண்டு செல்லக்கூடியதாக மஹிந்திரா தார் வாகனங்கள் விளங்குகின்றன.
ஆனால், இதற்கு நீங்கள் ஆல்-வீல்-டிரைவ் (All-wheel-drive) சிஸ்டத்துடன் தார் வாகனத்தை வாங்க வேண்டும். அப்போதுதான், வாகனத்தின் நான்கு சக்கரங்களையும் தனித்தனியாக கண்ட்ரோல் செய்வதன் மூலமாக மோசமான பாதைகளிலும் வாகனத்தை ஓட்ட முடியும். அதுவே, பின்-சக்கர-டிரைவ் (Rear-wheel-drive) சிஸ்டத்துடன் வாங்கினால், அந்த தார் வாகனம் சாதாரணமான சாலைகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும்.

ஏனெனில், பின்-சக்கர-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட வாகனத்தில் என்ஜினின் இயக்க ஆற்றல் வாகனத்தின் பின் சக்கரங்களுக்கு செல்லும். அதன் மூலமாக, ஆஃப்-ரோடு பயணங்களுக்கான திறன்களை வாகனத்தில் பெற முடியாது என்பதை அவ்வப்போது சிலர் மறந்துவிடுகின்றனர். அவ்வாறு, பின்-சக்கர-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை சிலர் ஏரி நீர் படுக்கையின் ஓரத்தில் ஓட்டி சென்ற போது சந்தித்த துயரங்களை பற்றி தான் இனி பார்க்க போகிறோம்.
நண்பர்கள் சிலர் தங்களது சிவப்பு நிறத்திலான மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தில் அடிக்குற கோடை வெயிலுக்கு இதமாக நீர் நிரம்பிய ஏரி ஒன்றை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். நீரை பார்த்த சந்தோஷத்தில் வாகனத்தை ஏரிக்கு மிக அருகாமையில் ஓட்டி சென்ற போது, தார் ராக்ஸ் வாகனத்தின் பின் சக்கரங்கள் சேற்றில் சிக்கியுள்ளன.
வாகனத்தை ஸ்டார்ட் செய்து பின்னால் இருந்து பலர் தள்ளி பார்த்தும் சேற்றில் இருந்து வாகனத்தை வெளியே கொண்டுவரப்பட முடியவில்லை. முன்னால் சில இன்ச் தூரத்திற்கு நகர்த்தினாலும், மீண்டும் சேற்றிலேயே வந்து வாகனம் சிக்குவதை இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காண முடிகிறது. இதுவே, ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட தார் ராக்ஸ் வாகனம் என்றால், எளிதாக சில வினாடிகளில் சேற்றில் இருந்து வெளியே கொண்டுவந்திருக்க முடியும்.
4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட வாகனமாக இருந்திருந்தால் முதலில் சேற்றில் சிக்கியே இருக்காது. இந்த குறிப்பிட்ட தார் ராக்ஸ் வாகனம் சேற்றில் சிக்கியதற்கு ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட வாகனம் என்பது மட்டுமின்றி, இந்த வாகனத்தில் டயர்களும் இவ்வாறான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றவை ஆக இல்லை. சேற்றில் சிக்கிய இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பின்னர் டிராக்டரின் (Tractor) உதவி உடன் மீட்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தார் ராக்ஸ் வாகனத்தில் டீசல் என்ஜின் வேரியண்ட்களில் சிலவற்றில் மட்டுமே ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. மற்றவைகளில் பின்-சக்கர-டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அத்தகைய வேரியண்ட்களுள் ஒன்றுதான், இந்த சேற்றில் சிக்கிய தார் ராக்ஸ் ஆகும். இந்த வாகனத்தின் பின் சக்கரத்திற்கு மேலே 'RWD' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதை வைத்தே இது பின்-சக்கர-டிரைவ் சிஸ்டம் கொண்ட வாகனம் என்பதை உறுதியாக கூறுகிறோம்.


Click it and Unblock the Notifications








