பல்டியடித்த மஹிந்திரா எக்ஸ்யூவி 500... பிரயோஜனமில்லாத ஏர்பேக்ஸ்
கர்நாடகாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் ஒன்று பல்யடித்து விபத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆயினும், அதிக பாதுகாப்பு வசதிகள் இருந்தும் அவை ஒன்றும் விபத்தின்போது பயன்படவில்லை என்பதே இப்போது சமூக வளைதளங்களிலும், ஆட்டோமொபைல் தளங்களிலும் பேச்சாக கிடக்கிறது.

மழையின்போது விபத்து
மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் அந்த காரின் டயர்கள் வழுக்கியதால் கார் பல்டியத்திருக்கிறது.

வேகம்
மணிக்கு 90 வேகத்தில் அந்த கார் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பல்டியடித்துள்ளது. அப்போது, சாலையோர பள்ளத்தில் உருண்டுள்ளது. அங்கிருந்த தென்னை மரத்தால், அந்த கார் குளத்தில் விழாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

பயணிகள்...
அந்த காரில் 5 பேர் பயணித்திருக்கின்றனர். கார் மிக மோசமாக சேதமடைந்த போதிலும், அவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஏர்பேக்ஸ் விரிவடையவில்லை...
விபத்தில் சிக்கிய கார் மஹிந்திரா எக்ஸ்யூவியின் டபிள்யூ 8 என்ற உயர்வகை வேரியண்ட். இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் சைடு கர்டெயின் ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ஆனால், அவை எதுவுமே விபத்தின்போது கைகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், ஒரு ஏர்பேக் கூட விரிவடையவில்லை என்பதுதான் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

மஹிந்திராவுக்கு தகவல்
இதுதொடர்பாக, காரின் வாடிக்கையாளர் மஹிந்திராவுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரோல்ஓவர் எனப்படும் கவிழ்ந்து உருளும்போது ஏர்பேக்குகள் விரிவடைவதிலும் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாகவும் விவாதிக்கப்படுகிறது.
Photo Credit: Team BHP


Click it and Unblock the Notifications








