நம்ம ஊர் டிரைவர்களுக்கு இந்த டெக்னாலஜி எல்லாம் சரிப்பட்டு வராது!! கொஞ்சம் மிஸ் ஆச்சு... கதை காலி!
தொழிற்நுட்ப வளர்ச்சி எந்த அளவிற்கு பயனுள்ளதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட என்பதை மறுபடியும் நிரூப்பிக்கும் விதமாக, இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) கார் ஒன்றில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்ன என்பதையும், இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்காலத்தில், டிரைவர் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கக்கூடியவை வகையிலான கார்கள் உருவாக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சாலை விபத்துகளை குறைக்க ஆட்டோமேட்டிக் கார்களால் மட்டுமே முடியும் என கூறுபவர்களும் இருக்கின்றனர். டிரைவர்-இல்லா கார்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும் என்றாலும், அதற்கு நாம் இப்போதே தயாராக துவங்கிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், ஆங்கிலத்தில் சுருக்கமாக அடாஸ் (ADAS) எனப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆனது தானியங்கி கார்களின் ஆரம்ப கட்டம் ஆகும். அதாவது, அடாஸ் உதவியுடன் எல்லா நேரங்களிலும் காரை தன்னிச்சையாக இயங்க வைக்க முடியாது என்றாலும், இந்த அட்வான்ஸ்டு தொழிற்நுட்பத்தின் உதவியுடன் காரை அவசர நேரத்திலும் திருப்பங்கள் அற்ற நெடுஞ்சாலையிலும் தானாக இயங்க வைக்க முடியும்.
ஆனால், இந்தியாவிலும் இந்த அடாஸ் தொழிற்நுட்பத்தை டிரைவர்கள் சிலர் தவறாக உபயோகப்படுத்துவதை சமீப காலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. இந்த வரிசையில், தற்போது மற்றுமொரு மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் டிரைவர் தனது காரின் அடாஸை தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
நெடுஞ்சாலை ஒன்றில் அதிவேகத்தில் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் சென்றுக் கொண்டிருந்த போது, அடாஸை ஆக்டிவேட் செய்துவிட்டு காரின் 2வது வரிசை இருக்கையில் டிரைவர் குப்புறப்படுத்து உறங்குவதுபோல் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோவில், காரின் டிரைவர் இருக்கை காலியாக இருப்பதையும், அதிவேகமாக இந்த கார் இயங்கும் நெடுஞ்சாலையையும் காணலாம்.
இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தின்போது, இந்த எக்ஸ்யூவி700 காரினுள் இருவர் இருந்துள்ளனர். ஒருவர், இருக்கையில் படுத்து உறங்கும் டிரைவர். மற்றொருவர், காரின் முன் இருக்கையில் அமர்ந்தப்படி இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் ஆவார். சாதாரணமாகவே, இரவு நேரங்களில் ஹைவேயில் கார் ஓட்டுவது கொஞ்சம் சவாலானது. அப்படியிருக்கையில், இவர்கள் ஆபத்தை உணராமல் அடாஸில் காரை ஆட்டோமேட்டிக்காக இயக்கி உள்ளனர்.

ஏற்கனவே கூறியதுபோல், அடாஸ் ஆனது அவசர காலத்தில் விபத்தை தவிர்க்கும் விதமாக இன்றைய கால மாடர்ன் கார்களில் வழங்கப்படுகிறது. புதியதாக கார் வாங்கும்போது காரில் அடாஸ் உள்ளதா என பார்ப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், அடாஸ் இருக்கும் கார்களில் இவ்வாறான ஆபத்தான பயணங்களை மேற்கொள்வோரும் அதிகரித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் லைக்ஸையும், கமெண்ட்ஸையும் பெறவே நிறைய பேர் இவ்வாறான செயல்களில் ஈடுப்படுகின்றனர். இந்த வீடியோக்களை பார்க்கும் இளம் தலைமுறையினரும் இவ்வாறு கார் ஓட்ட ஆசைப்படலாம். ஆதலால், இவ்வாறான டிரைவிங்குகள் ஆபத்தானது மட்டுமின்றி, தவறான முன் உதாரணமும் ஆகும். ஆகையால், இந்த செயல்களை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: செல்போனும், சமூக வலைத்தளங்களும் தான் உலகம் என்று வாழ்பவர்கள் வெறும் சில லைக்ஸுக்காக இவ்வாறு தங்களது உயிரை பணயம் வைக்கின்றனர். சாலை விபத்துகளை குறைப்பதற்காக வழங்கப்படும் தொழிற்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதால், எதிர்காலத்தில் அடாஸ் தொழிற்நுட்பம் கார்களில் இல்லாமல் போகலாம். அதாவது, அடாஸ் தொழிற்நுட்பத்தை மத்திய அரசு தடை செய்வதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








