கார்ப்பிரேட் நிறுவனத்துக்கு இவ்வளவு கடவுள் பக்தியா!! புது புது காரை வாரி வழங்குது- சனஸ்தானத்திடம் கார் சாவிகள்
மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) கார் ஒன்று சீரடியில் உள்ள ஸ்ரீ சாய் பாபா கோயிலுக்கு நன்கொடையாக மஹிந்திரா நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா டிரஸ்ட் மூலமாக வழங்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்யூவி700 காரை கோயில் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.
இந்தியா, பழமையான பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை கொண்ட நாடு. நம் நாட்டில் பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்கள் நிறைய உள்ளன. அவை அனைத்தையும் அரசாங்கங்கள் மட்டுமே பார்த்து கொள்ள இயலாத காரணத்தினாலும், இந்திய மதங்களின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினாலும் கார்ப்பிரேட் நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களாக தங்களை இணைத்து கொண்டுள்ளன.

இதற்காகவே சில தனியார் நிறுவனங்கள் தனியாக ஒரு குழு/ அமைப்பை கொண்டுள்ளன. இந்த வகையில் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் மஹிந்திரா டிரஸ்ட் அமைப்பின் சார்பில் சீரடியில் உள்ள ஸ்ரீ சாய் பாபா கோயிலுக்கு தங்களது குழுமத்தில் தயாரிக்கப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி ஸ்ரீ சாய் பாபா கோயிலின் சனஸ்தானத்திடம் நன்கொடையாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வழங்குவதை சாய் பாபா கோயிலில் ஓர் சிறிய நிகழ்ச்சி போல் மஹிந்திரா நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியை வீடியோவாக காட்சிப்படுத்தியும் யுடியூப்பில் வெளியிட்டுள்ளனர். அந்த யுடியூப் வீடியோவை இந்த செய்தியின் இறுதியில் காணலாம்.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மஹிந்திரா எக்ஸ்யூவி700 நன்கொடை காரின் சாவி மஹிந்திரா & மஹிந்திராவின் ஆட்டோமொபைல் பிரிவின் முதன்மை நிர்வாக அதிகாரியும், மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக குழு உறுப்பினருமான வீஜய் நக்ரா அவர்களால் ஸ்ரீ சாய் பாபா சனஸ்தானத்தின் மேலாண்மை அதிகாரி மருத்துவர். ஆகாஷ் கிஸ்வே அவர்களிடம் வழங்கப்பட்டது.

பின்னர் மருத்துவர். ஆகாஷ் கிஸ்வே அளித்த பேட்டியில், "மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் எப்போது புதிய மாடலை நாட்டில் அறிமுகப்படுத்தினாலும், அவற்றுள் முதல் கார்களை ஸ்ரீ சாய் பாபா சனஸ்தானத்திற்கு வழங்குவதை மறப்பது இல்லை" என கூறியவர், தற்போது வழங்கப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு முன் பொலேரோ, ஸ்கார்பியோ, ஸிலோ, லோகன், மேக்ஸிமோ, யுவ்ராஜ் டிராக்டர், எக்ஸ்யூவி500, எக்ஸ்யூவி300, மராஸ்ஸோ, தார் உள்பட ஏறக்குறைய 14 வாகனங்களை ஸ்ரீ சாய் பாபா கோயிலுக்கு மஹிந்திரா குழுமம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரை 2021 ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் மஹிந்திரா அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும் எக்ஸ்யூவி700 காரை வெள்ளை நிறத்தில் ஸ்ரீ சாய் பாபா கோயிலுக்கு மஹிந்திரா நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது. சீரடி ஸ்ரீ சாய் பாபா கோயிலுக்கு வழங்கப்பட்டு இருப்பது எக்ஸ்யூவி700 காரின் விலைமிக்க உயர்நிலை வேரியண்ட்டான ஏ.எக்ஸ்7எல் ஆகும்.

'ஏ.எக்ஸ்7எல்' என்ற பெயரில் உள்ள 'எல்'(L) என்பது லக்சரி தொகுப்பை குறிக்கிறது. அதாவது, நன்கொடை எக்ஸ்யூவி700 காரில் லக்சரி அம்சங்கள் உள்பட எந்தவொரு குறையுமின்றி அனைத்து தொழிற்நுட்பங்களும் இருக்கும். எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்7எல் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த வேரியண்ட்டை மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம்.
மோனோகோக் சேசிஸில் உருவாக்கப்படும் எக்ஸ்யூவி700 காரை முன்-சக்கர-டிரைவ் வெர்சனில் அல்லது அனைத்து-சக்கர-டிரைவ் வெர்சனில் வாங்கலாம். மஹிந்திரா பிராண்டில் இருந்து தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக விளங்கும் எக்ஸ்யூவி700 முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காருக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கோயிலுக்கு நன்கொடையாக வழங்கும் காரில் எந்தவொரு குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக டாப் வேரியண்ட்டில் எக்ஸ்யூவி700 காரை மஹிந்திரா வழங்கியுள்ளது. ஆதலால், என்ஜின் & கியர்பாக்ஸ் தேர்விலும் எந்தவொரு பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக டீசல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வில் எக்ஸ்யூவி700 காரை வழங்கி இருக்கலாம். அதேபோல், மஹிந்திராவின் இந்த நன்கொடை காரில் அனைத்து-சக்கர-டிரைவ் சிஸ்டம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









