15 நாள்தான் டைம்! ரோட்ல சின்ன குழி கூட இருக்க கூடாது! அதிகாரிகளின் தோல உரிக்க போறாங்க! ஆர்டர் போட்டது அவராச்சே
இந்திய சாலைகளில் நிகழும் விபத்துக்களுக்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை மட்டும் காரணமாக கூறி விட முடியாது. மோசமான நிலையில் இருக்கும் சாலைகளால், எத்தனையோ விபத்துக்கள் இங்கு நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள், விபத்துக்களை மட்டும் ஏற்படுத்துவதில்லை. கூடவே போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கும் அவை காரணமாகின்றன. ஒரு சில சாலைகளில் எல்லாம் வாகனங்கள் ஊர்ந்துதான் சென்றாக வேண்டும் என்ற நிலைமை காணப்படுகிறது. நன்கு வளர்ச்சியடைந்த பெரு நகரங்களிலும் கூட, இதுதான் கள நிலவரம்.
இதற்கு கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை (Bangalore) நம்மால் ஒரு உதாரணமாக கூற முடியும். இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் பெங்களூர், வருடம் முழுவதும் சீராக நிலவும் குளிர்ச்சியான சீதோஷண நிலைக்கும், பூங்காங்களுக்கும் பெயர் பெற்றது. கூடவே போக்குவரத்து நெரிசலுக்கும்தான்!

இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகிலேயே போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக பெங்களூர் உள்ளது. இதற்கு பெங்களூர் நகரில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ஒரு சில நாட்களில் எல்லாம் போக்குவரத்து நெரிசலில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அத்துடன் சாலைகளில் உள்ள குழிகள், பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்வதையும் அடிக்கடி பார்க்க முடியும். இது தொடர்பாக பிபிஎம்பி எனப்படும் கிரேட்டர் பெங்களூர் பெருநகர மாநகராட்சி (BBMP - Bruhat Bengaluru Mahanagara Palike) அதிகாரிகளிடம் புகார் கொடுத்து கொடுத்து வாகன ஓட்டிகள் ஓய்ந்து போய் விட்டனர்.

ஆனால் அடுத்த 15 நாட்களில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, பெங்களூர் வாகன ஓட்டிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாரின் (DK Shivakumar) உத்தரவுதான் இதற்கு காரணம். வாகன ஓட்டிகளின் தொடர்ச்சியான புகார்களையடுத்து, பிபிஎம்பி அதிகாரிகளுக்கு டிகே சிவக்குமார் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இதன்படி அடுத்த 15 நாட்களுக்குள், பெங்களூர் மாநகரம் முழுவதும், சாலைகளில் உள்ள குழிகள் மற்றும் பள்ளங்களை பிபிஎம்பி அதிகாரிகள் சரி செய்தாக வேண்டும். இந்த 15 நாள் காலக்கெடு முடிவடைந்த பின்னர், பெங்களூர் பெருநகரம் முழுமைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாலைகளை ஆய்வு செய்யவுள்ளதாக டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதனால் கவனிப்பு கேட்டு கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் பெங்களூர் பெருநகர சாலைகளுக்கு, அடுத்த 15 நாட்களில் விடிவுகாலம் பிறந்து விடும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். இது நடக்கும்பட்சத்தில், பெங்களூர் பெருநகரில் சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெங்களூர் நகரில் ஒரு சில சமயங்களில் வாகனங்களில் வீட்டில் இருந்து அலுவலகம் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால், பயணத்தின்போது பல்வேறு அசௌகரியங்களை வாகன ஓட்டிகள் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டால், உண்மையில் மகிழ்ச்சியே!


Click it and Unblock the Notifications








