லம்போர்கினி காரை இந்த நடிகர் அவசரப்பட்டு வாங்கிட்டார் போல... 5 வருடங்களில் செகண்ட்-ஹேண்ட் மார்க்கெட்டில்!!
முன்னணி மலையாள நடிகர் பிரித்விராஜ் தன்னிடம் இருந்த லம்போர்கினி கார் ஒன்றை வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். அவரது இந்த முடிவிற்கு காரணம் என்ன? பிரித்விராஜிடம் இருந்த எந்த லம்போர்கினி கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
கேரள மக்களுக்கும் ஆட்டோமொபைல் வாகனங்களுக்கும் இடையே ஓர் நெருங்கிய பிணைப்பு உள்ளது. புதியதாக கார் வாங்கினாலும் சரி, பைக் வாங்கினாலும் சரி மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரியும் வகையில் அந்த வாகனம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்றே கேரள மக்கள் பலர் நினைப்பர். அப்படி இருக்கையில், மலையாள திரைப்பட நடிகர்கள் வாகனங்கள் விஷயத்தில் யோசிப்பது இன்னும் தனித்துவமானது.

நிச்சயம் எல்லா மலையாள நடிகர், நடிகைகளிடமும் குறைந்த ஒரு லக்சரி அல்லது ஸ்போர்ட்ஸ் கார் ஆவது இருக்கிறது. மலையாள திரையுலகின் மெகா ஸ்டாராக விளங்கும் மம்முட்டி மற்றும் அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மான் ஆகிய இருவரும் கார்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். குறிப்பாக, துல்கர் சல்மான் இதற்கென தனியாக ஒரு கேரேஜையே நடத்தி வருகிறார். அதேபோல் மற்றொரு முன்னணி மலையாள நடிகரான பிரித்விராஜும் கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
குறிப்பாக, கடந்த 2018இல் லம்போர்கினி ஹூராகென் காரை நடிகர் பிரித்விராஜ் வாங்கியது அந்த சமயத்தில் நாடு முழுவதும் பரவலாக கவனிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் வாங்கிய லம்போர்கினி உருஸ் காரையே பிரித்விராஜ் தனது அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஆரம்பித்தார். ஏனெனில் நம் நாட்டு சாலைகளுக்கு ஹூராகென் போன்ற தாழ்வான ஸ்போர்ட்ஸ் கார்களை காட்டிலும், உருஸ் போன்ற லக்சரி எஸ்யூவி கார் இன்னும் ஏற்றதாக இருக்கும்.
இதனால் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த தனது 2018 லம்போர்கினி ஹூராகென் காரை விற்கும் முடிவிற்கு நடிகர் பிரித்விராஜ் வந்தார். இந்த நிலையில் இந்த லம்போர்கினி காரை ராயல் டிரைவ் என்ற செகண்ட்-ஹேண்ட் கார் டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக கோழிக்கோடை சேர்ந்த வி சனந்த் என்பவர் வாங்கியுள்ளார். கோழிக்கோடில் அமைந்துள்ள ஃபான்சி லைட் டீலர்ஷிப் மையமான இண்டோ எலக்ட்ரிக் மார்ட் -இன் சிஇஓ, வி சனந்த் ஆவார்.
ராயல் டிரைவ் ஷோரூமில் பிரித்விராஜின் ஹூராகென் காரை டெலிவிரி எடுக்க வி சனந்த் வரவில்லை. அதற்கு பதிலாக தனது இரு மகன்களை அனுப்பி வைத்துள்ளார். இத்தனை வருடங்களில் இந்த காரை வெறும் 1,100கிமீ தொலைவு மட்டுமே பிரித்விராஜ் இயக்கியுள்ளார். இது பின் சக்கரங்களின் மூலமாக இயங்கக்கூடிய லம்போர்கினி ஹூராகென் காரின் எல்பி580 வேரியண்ட் ஆகும். உலகளவில் பிரபலமடைந்த லம்போர்கினி ஹூராகென் கார்களுள் இந்த வேரியண்ட்டும் ஒன்றாகும்.

இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.4.5 கோடி என்ற அளவில் உள்ளது. இந்த ஹூராகென் காரில் 5.2 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 572 பிஎச்பி மற்றும் 540 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை அடைய குறைந்தது 3.4 வினாடிகளை எடுத்து கொள்ளும் இந்த லம்போர்கினி காரின் டாப்-ஸ்பீடு 320kmph ஆகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
பிரத்விராஜ் போன்ற பிரபல நடிகரிடம் இருந்து ஒரு லக்சரி காரை பெறுவதற்கு யாருக்கு தாங்க பிடிக்காமல் இருக்கும். அதுவும், அவர் வெறும் 1,100கிமீ தொலைவு மட்டுமே காரை ஓட்டியுள்ளதால் இது கிட்டத்தட்ட புதிய லம்போர்கினி ஹூராகென் கார் தான். தயாரிக்கப்பட்ட வருடம் தான் 5 வருடங்கள் பின்னால் உள்ளது. செகண்ட்-ஹேண்டில் வாங்கியதால், நிச்சயமாக ரூ.4.5 கோடியை வி சனந்த் செலுத்தி இருக்க மாட்டார் என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications








