யூடியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணா போதும் போல! காரின் விலை எப்படியிருந்தாலும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமா இருக்கும்
அபிஜித் (Abhijith), பிரபல மலையாள யூடியூப்பர் மற்றும் டிரேட் டிராவலர் (Trade Traveler) ஆவார். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பயணங்களை அவ்வப்போது மேற்கொள்ள விரும்புபவர். அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி வெளியிடுவதன் மூலம் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் அபிஜித்தை பலர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில், அபிஜித் புதியதாக விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஒன்றை கண்ணை கவரக்கூடிய கவர்ச்சிக்கரமான நிறத்தில் வாங்கியுள்ளார். அப்படி என்ன மாதிரியான பிஎம்டபிள்யூ காரை இவர் வாங்கியுள்ளார் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
யூடியூப் சேனல் துவங்கி பிரபலமாகி விட்டாலே கணிசமான வருவாயை பெறலாம் என சொல்லும் அளவிற்கு, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாக பலர் பெரிய, பெரிய தொகைகளை சம்பாதித்து வருகின்றனர். இந்த வகையில், அபிஜித்தும் கணிசமான வருவாயை இந்த வழியில் ஈட்டி வருகிறார்.

இதனுடன் சேர்த்து, டிரேட் டிராவல் எனப்படும் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் ஏஜெண்ட் ஆகவும் அபிஜித் பணியாற்றி வருகிறார். இதுதான் அவருக்கு அதிக பணம் ஈட்டும் தொழிலாக உள்ளது. எந்த அளவிற்கு அதிக பணம் என்றால், இந்த சிறிய வயதிலேயே அபிஜித் புதியதாக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
தனது வாழ்வில் நடக்கும் எல்லா முக்கியமான விஷயங்களையும் வீடியோவாக காட்சிப்படுத்தி யூடியூப்பில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் அபிஜித் புதியதாக கார் வாங்கிய நிகழ்வை மட்டும் மறப்பாரா என்ன?... அதுவும் பிஎம்டபிள்யூ போன்ற விலையுயர்ந்த காரை வாங்கியிருப்பதை இன்னும் சில வாரங்களுக்கு கண்டெண்ட்டாக பயன்படுத்த அபிஜித் திட்டமிட்டு இருப்பார் என்பது உறுதி.

யூடியூப்பர் அபிஜித் புதியதாக வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் கிரான் கூபே (BMW 2-Series Gran Coupe) கார் ஆகும். ஸ்னாப்பர் ராக்ஸ் ப்ளூ மெட்டாலிக், பிளாக் சாப்பையர் மெட்டாலிக், மிசானோ ப்ளூ மெட்டாலிக், ஸ்டோர்ம் பே, மெல்போர்ன் ரெட் மெட்டாலிக், அல்பைன் வொயிட் நான்-மெட்டாலிக் என 6 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த பிஎம்டபிள்யூ கார் கிடைக்கிறது.
இதில் ஸ்னாப்பர் ராக்ஸ் ப்ளூ மெட்டாலிக் நிறத்தில் தான் 2-சீரிஸ் கிரான் கூபே காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் அதிகமாக விளம்பரப்படுத்துகிறது. ஏனெனில், மற்ற நிறங்களுடன் ஒப்பிடுகையில் இந்த நிறம் கொஞ்சம் கூடுதல் கவர்ச்சிக்கரமானதாக உள்ளது. இத்தகைய நிறத்தில்தான் பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் கிரான் கூபே காரை யூடியூப்பர் அபிஜித் வாங்கியுள்ளார்.

பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் கிரான் கூபே காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.43.90 லட்சத்தில் இருந்து ரூ.46.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 220ஐ எம் ஸ்போர்ட், எம் பெர்ஃபார்மன்ஸ் எடிசன் மற்றும் 220டி எம் ஸ்போர்ட் என 3 விதமான வேரியண்ட்களில் இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படுகிறது.
2.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் 2-சீரிஸ் கிரான் கூபே கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கிடைக்கிறது. விற்பனையில் இந்த பிஎம்டபிள்யூ காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் மற்றும் ஆடி ஏ4 கார்கள் போட்டியாக விளங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை குறைவான பிஎம்டபிள்யூ காராக இருப்பினும், 2-சீரிஸ் கிரான் கூபே காரின் ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.50 லட்சத்தை தாண்டிவிடும். இந்த காரை எந்த என்ஜின் உடன் யூடியூப்பர் அபிஜித் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அபிஜித்தை போலவே அவரது புதிய பிஎம்டபிள்யூ காரும் பார்க்க மிகவும் ஸ்டைலாக உள்ளது.


Click it and Unblock the Notifications









