விறுவிறுப்பாக நடந்த வழக்கு... ஐகோர்ட் உத்தரவு கேட்டுச்சா? இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது!!
விறுவிறுப்பாக நடைபெற்ற வழக்கில், ஐகோர்ட் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களுக்கு, மால்கள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளன. ஆனால் அவர்களால் ஏற்படுத்தி தரப்பட்டுள்ள பார்க்கிங் வசதியை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே சமயம் ஒரு சில மால்கள் பார்க்கிங் செய்ய அனுமதிப்பதற்காக, வாகன உரிமையாளர்களிடம் இருந்து அளவுக்கு அதிகமான கட்டணத்தை வசூலிக்கின்றன.

எனவே வேறு வழியில்லாத வாகன உரிமையாளர்கள் வேண்டா வெறுப்பாக கட்டணம் செலுத்திதான் பார்க்கிங் செய்து வருகின்றனர். இந்த சூழலில் மால்கள், மல்டிபிளக்ஸ்கள் மற்றும் ஷாப்பிங் நிறுவனங்கள் உள்ளிட்டவை, வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்காமல், அவர்களுக்கு பார்க்கிங் வசதியை செய்து தர வேண்டும் என குஜராத் ஐகோர்ட் கடந்த புதன் கிழமை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

General Development Control Regulation 2017 (GDCR)-ன் விதிமுறைகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஆனந்த் எஸ் தாவே மற்றும் நீதிபதி பைரன் வைஷ்ணவ் ஆகியார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்தான் இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. குஜராத் பில்டிங் மற்றும் நகர திட்டமிடல் விதிமுறைகளை அலசி ஆராய்ந்த பிறகு இந்த முடிவிற்கு நீதிபதிகள் வந்துள்ளனர்.

பில்டிங் உரிமையாளர்கள் பார்க்கிங் வசதியை கட்டாயமாக வழங்க வேண்டும் என இந்த விதிகள் கூறுகின்றன. இதில், ''வழங்க வேண்டும்'' என்ற வார்த்தையை நீதிபதிகள் உற்று நோக்கியுள்ளனர். அதாவது கட்டணம் இல்லாமல் பார்க்கிங் வசதியை வழங்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையும் சுவாரஸ்யமானதுதான்.

அனைத்து விஷயங்களும் கடந்த ஆண்டில் இருந்துதான் தொடங்குகின்றன. வாகனங்களை பார்க்கிங் செய்வற்கு கட்டணம் வசூல் செய்வதை GDCR அனுமதிப்பதில்லை. எனவே இனி கட்டணம் வசூலிக்க கூடாது என மால் உரிமையாளர்களுக்கு, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கடந்த ஆண்டு உத்தரவிட்டனர். அவ்வளவுதான். மால் உரிமையாளர்கள் வெகுண்டெழுந்து விட்டனர்.

உடனடியாக நீதிமன்ற கதவை தட்டினர். சிங்கிள் ஜட்ஜ் பென்ச் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ''இலவசமாக'' பார்க்கிங் வசதி வழங்குவதை GDCR கட்டாயமாக்கவில்லை என நீதிபதி உத்தரவிட்டார். எனவே உங்கள் உத்தரவை திரும்ப பெற்று கொள்ளுங்கள் என போக்குவரத்து போலீசாருக்கும் அவர் அறிவுறுத்தினார்.

என்றாலும் பார்க்கிங் கட்டணம் அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார். எனவே பார்க்கிங் கட்டணங்களை வரைமுறைப்படுத்துவதற்கு தேவையான கொள்கைகளை வகுக்கும்படி மாநில அரசுக்கு அவர் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மால் உரிமையாளர்களுக்கு மனம் வரவில்லை. உடனடியாக மேல்முறையீட்டிற்கு சென்றனர்.

அங்கு பார்க்கிங் கட்டணங்களை நெறிமுறைப்படுத்தும் சட்டம் இருக்க முடியாது. எங்களது இடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்குகிறோம். இதற்காக ஒரு நிறுவனம் கட்டணம் வசூலிக்க முடியும். எனவே பார்க்கிங் கட்டணங்களை வரைமுறைப்படுத்துவதற்கான கொள்கையும் இருக்க முடியாது என வாதிட்டனர். ஆனால் மேல்முறையீட்டில் அவர்களின் வாதம் செல்லுபடியாகவில்லை. வழக்கை தீர விசாரித்த டிவிஷன் பென்ச், பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க முடியாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. எப்படியோ இனி வாகன உரிமையாளர்களுக்கு சந்தோஷம்தான்.


Click it and Unblock the Notifications








