பாட்ஷா மாதிரி பெரிய பேக்ரவுண்ட்! ஆடி கார்ல வீடு வீடா பால் ஊத்தறது அவரா! நேர்ல பாக்க பெரிய கூட்டமே கூடுது!
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மனதிற்கு பிடிக்காத வேலையை நிறைய பேர் செய்து கொண்டுள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என தங்கள் மனதிற்கு பிடித்த வேலையைதான் செய்கின்றனர். அதேபோல் இந்த சமுதாயம் என்ன நினைக்கும்? என்பதையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது கிடையாது. இதற்கு அமித் பாடனா ஒரு உதாரணம். இவர் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியை சேர்ந்தவர். இவரை பற்றி நாங்கள் இங்கே பேசி கொண்டிருப்பதற்கு காரணம் உள்ளது.
இவர் முதலில் ஒரு வங்கியில் வேலை செய்து வந்தார். உண்மையில் வங்கியில் வேலை என்பது பலரின் கனவு. கை நிறைய சம்பளம், குளு குளு ஏசி அறையில் வேலை என சொகுசாக இருக்கலாம் என்பதுதான் அதற்கு காரணம். அத்துடன் வங்கியில் வேலை செய்தால், சமுதாயத்திலும் நல்ல மதிப்பு கிடைக்கும்.

ஆனால் அப்படிப்பட்ட வேலையை அமித் பாடனா உதறி தள்ளி விட்டார். அடுத்து அவர் என்ன செய்ய தொடங்கினார்? என்பதுதான் இங்கே சுவாரஸ்யமே. அமித் பாடனாவின் குடும்ப தொழில் பால் வியாபாரம் ஆகும். வங்கி வேலையை உதறி தள்ளி விட்டு, அமித் பாடனா வீடு வீடாக சென்று பால் விற்பனை செய்ய தொடங்கி விட்டார்.
தற்போதும் அவர் அதைதான் செய்து வருகிறார். ஒரு சிலர் கை நிறைய சம்பளம் கிடைக்கும் ஐடி வேலை வேண்டாம் என விவசாயம் செய்ய சென்று விடுகின்றனர். அது போலதான் அமித் பாடனாவும். ஆனால் பால் வியாபாரம் செய்ய சென்றதற்கு அமித் பாடனா கூறிய காரணம் மிகவும் வித்தியாசமானது.
அமித் பாடனாவிற்கு சிறு வயதில் இருந்தே கார் மற்றும் பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். பால் வியாபாரம் செய்தால், தினமும் கார் மற்றும் பைக்குகளை ஓட்டலாம் என்பதுதான், அவர் வங்கி வேலையை விட்டு வந்ததற்கு மிகவும் முக்கியமான காரணம். ஆரம்பத்தில் ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson) பைக்கில் சென்று அமித் பாடனா பால் வியாபாரம் செய்து வந்தார்.
இது பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் பால் வியாபாரிகள் பொதுவாக அந்தக்கால பஜாஜ் எம்80 (Bajaj M80) அல்லது டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL)-ல் வருவார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் பால் வியாபாரிகளை, பஜாஜ் எம்80 மொபட்டில் (Moped) அதிகம் காண முடியும். எனவே பஜாஜ் எம்80 மொபட்டிற்கு, பால்க்காரர்களின் வண்டி என்ற செல்ல பெயர் கூட இருக்கிறது.
அப்படி இருக்கும்போது, அமித் பாடனா ஹார்லி டேவிட்சன் பைக்கில் பால் வியாபாரம் செய்த காரணத்தால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஹார்லி டேவிட்சன் பைக்குகள் எவ்வளவு விலை உயர்ந்தவை? என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அமித் பாடனா மிகவும் விலை உயர்ந்த பைக்கில் பால் வியாபாரம் செய்த காரணத்தால், அது செய்தியாகவே மாறியது.
இந்த சூழலில் அமித் பாடனா மீண்டும் ஒரு முறை செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தற்போது அவர் மிகவும் விலை உயர்ந்த ஆடி ஏ3 கேப்ரியோலெட் (Audi A3 Cabriolet) காரில் பால் வியாபாரம் செய்து வருவதுதான் இதற்கு காரணம். அமித் பாடனா தனது பால் வியாபாரத்தை ஹார்லி டேவிட்சன் பைக்கில் இருந்து ஆடி ஏ3 கேப்ரியோலெட் காருக்கு மாற்றி விட்டார்.
ஆனால் இந்த கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பே இந்த காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் கடைசியாக விற்பனையில் இருந்தபோது, 49.25-50.60 லட்ச ரூபாய் என்ற விலையில் ஆடி ஏ3 கேப்ரியோலெட் விற்பனை செய்யப்பட்டது.
இவ்வளவு விலை உயர்ந்த காரில், வீடு வீடாக சென்று பால் வியாபாரம் செய்து வருவதால், மீண்டும் ஒரு முறை அமித் பாடனா தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அமித் பாடனா மற்றும் அவரது விலை உயர்ந்த காரை பார்க்க வேண்டும் என்பதற்காகவே, அவர் வரும்போது நிறைய பேர் வீட்டில் இருந்து வெளியே வந்து விடுகிறார்களாம். அத்துடன் அமித் பாடனா மற்றும் அவரது கார் முன்பு நின்று பலர் புகைப்படமும் எடுத்து கொள்கின்றனர்.
இது குறித்து அமித் பாடனா கூறுகையில், ''எனது குடும்ப தொழில் பால் வியாபாரம் ஆகும். எனவே கார் மற்றும் பைக்குகளை ஓட்ட வேண்டும் என்ற கனவை, பால் வியாபாரம் செய்வதன் மூலம், எனது தொழிலாக மாற்றி கொண்டேன். கார் மற்றும் பைக்குகளை அதிகமாக ஓட்ட வேண்டும் என்பது எனது கனவு. அதை எதற்காகவும் விட்டு தர மாட்டேன்.
இதன் காரணமாகவே எனது கனவை, எனது குடும்ப தொழில் உடன் கலந்து விட்டேன். தற்போது பால் வியாபாரம் செய்வதன் மூலமாக எனக்கு பணமும் கிடைக்கிறது. அத்துடன் கார் மற்றும் பைக்குகளை ஓட்ட வேண்டும் என்ற என்னுடைய கனவும் கூடவே சேர்ந்து நிறைவேறுகிறது'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனங்களை ஓட்டுவது என்றால், யாருக்குதான் பிடிக்காது. நடிகர் அஜீத் குமாரின் (Ajith Kumar) கனவு கூட வாகனங்கள்தான். அவர் நடிகராக மாறியதே ஒரு விபத்துதான் என்பதை அவரே கூறியுள்ளார். இதன் காரணமாகவே தற்போது கார் ரேஸ்களில் (Car Race) அவர் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார்.
அமித் பாடனாவும் கூட கிட்டத்தட்ட அப்படிப்பட்டவர்தான். கை நிறைய சம்பளம் கிடைத்த வங்கி வேலையை விட்டு விட்டு, கார் மற்றும் பைக்குகளை ஓட்ட வேண்டும் என்ற கனவை நோக்கி அவர் பயணிக்க தொடங்கியுள்ளார். பணத்தை விட கனவை பெரிதாக மதிக்கும் குணத்திற்காக அமித் பாடனாவிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








